இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ?
விஸ்வாமித்திரன், பலப் பல காரணங்களைச் சொல்லி , தாடகையை "கொல் " என்றான் இராமனிடம்.
என்னதான் கொடுமைக் காரியாக இருந்தாலும் அவள் ஒரு பெண். பெண்ணைக் கொல்வது என்பது வில் அறத்திற்கு ஏற்றது அன்று என்று இராமன் நினைக்கிறான்.
பெண்ணைக் கொல்வது சரியல்ல என்று இராமனுக்குத் தெரியும். அப்படித்தான் வசிட்டர் அவனுக்குச் சொல்லித் தந்திருக்கிறார்.
ஆனால், விச்வாமிதரனோ பெண்ணைக் கொல் என்கிறார்.
செய்தாலும் பிழை. செய்யாவிட்டாலும் பிழை. எப்படியும் அறத்தினின்று பிறழத்தான் போகிறான் இராமன்.
பாடல்
அண்ணல் முனிவற்கு அது
கருத்துஎனினும். ‘ஆவி
உண்’ என. வடிக் கணை
தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில்
தொடங்கியுளளேனும்.
‘பெண்’ என மனத்திடை
பெருந்தகை நினைந்தான்.
பொருள்
அண்ணல் முனிவற்கு = முனிவனான விச்வாமித்திரனுக்கு
அது கருத்துஎனினும் = தாடைகையை கொல்வது தான் கருத்து என்றாலும்
‘ஆவி உண்’ = அவள் உயிரை உண்டு வா
என. = என்று
வடிக் கணை = வடிவான அம்பை
தொடுக்கிலன்; = அவள் மேல் விடவில்லை
உயிர்க்கே = உயிருக்கு
துண்ணெனும் = துன்பம் தரும், நடுக்கம் தரும்
வினைத்தொழில் = தொழிலை
தொடங்கியுளளேனும். = அவள் தொடங்கி இருந்தாலும்
‘பெண்’ என = அவள் ஒரு பெண் என்று
மனத்திடை பெருந்தகை நினைந்தான்.= மனதில் பெருந்தகையான இராமன் நினைத்தான்
பள்ளிக் கூடத்தில் பாடம் படித்து விட்டு வெளி வருகிறோம்.
படித்ததை எல்லாம் அப்படியே நடை முறையில் செயல் படுத்த முடியாது என்பதைக் காட்டும் இடங்கள் இவை.
இராமன் செயல் படமால் பேசாமல் நிற்கிறான்.
அடுத்து என்ன நடந்தது என்று பார்பதற்கு முன்னால் , தாடகை போன்ற ஒரு அரக்கியிடம் கூட கருணையோடு நடந்து கொண்ட இராமன் சீதையை துன்பப் படுத்தியது ஏன் என்ற கேள்வியும் சிலர் மனதில் எழலாம்.
சீதையை தீ குளிக்க சொன்னது. அவளை காட்டில் கொண்டு போய் விட்டது எல்லாம் சரியா போன்ற கேள்விகளும் மனதில் எழலாம்.
அவற்றையும் சிந்திப்போம்.
No comments:
Post a Comment