Saturday, October 3, 2015

தேவாரம் - பின்னை எண்ணார்

தேவாரம் - பின்னை எண்ணார் 


யாரிடமாவது நாம் உதவி வேண்டிப் போனால், கேட்ட உடனேயே எத்தனை பேர் அந்த உதவியை நமக்குச் செய்து விடுவார்கள் ?

மறவர்களை விடுங்கள், "கொஞ்சம் தண்ணி  வேண்டும்" என்று கேட்டால் எத்தனை பிள்ளைகள் உடனேயே கொண்டு வந்து கொடுக்கும் ?  "நான் busy யா இருக்கேன்...நீயே போய் எடுத்துக்கோ" என்று பதில் வரும். இல்லைனா "இதோ வரேன் " என்று பதில் மட்டும் வரும்...ஆள் வர நாள் ஆகும்.

புடவை வேண்டும், நகை வேண்டும் என்று மனைவி ஆசைப் பட்டு கேட்டால் எத்தனை கணவன்மார் உடனேயே வாங்கித் தந்து விடுவார்கள் ?  "பார்க்கலாம், தீபாவளிக்கு வாங்கலாம், பொங்கலுக்கு வாங்கலாம் " என்று தள்ளிப் போடும் கணவர்கள் தான் பெரும்பாலும் இருப்பார்கள்.

பதவி உயர்வு வேண்டும், சம்பள உயர்வு வேண்டும் என்று வீட்டில் வேலை பார்க்கும் பணியாள் கேட்டால் நாம் உடனே கொடுத்து விடுவோமா ? எந்த முதலாளியும் தருவது கிடையாது.

உலகம் அப்படி.

கேட்ட உடன் கொடுக்காவிட்டால்,  சாதாரண மனிதர்களுக்கும்  இறைவனுக்கும் என்ன வித்தியாசம் ?

பக்தா , என்னிடம் கேட்டாயா...பார்க்கலாம், அப்புறம் தருகிறேன்...அடுத்த தீபாவளிக்குத் தருகிறேன் ...என்று இறைவன் தள்ளிப் போடுவது இல்லை. கேட்ட உடனேயே  தந்து விடுவான் என்கிறார் நாவுக்கரசர்.


பாடல்

உன்னி வானவ ரோதிய சிந்தையில்
கன்னல் தேன்கடவூரின் மயானத்தார்
தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெலாம்
பின்னை யென்னார் பெருமா னடிகளே.

சீர் பிரித்த பின்


உன்னி வானவர் ஓதிய சிந்தையில் 
கன்னல் தேன் கடவூரின் மயானத்தார் 
தன்னை நோக்கித் தொழுது எழுவார்கு எல்லாம் 
பின்னை எண்ணார் பெருமான் அடிகளே 

பொருள்

உன்னி = மனதில் எண்ணி

வானவர் = தேவர்கள்

ஓதிய = தினம் போற்றிய

சிந்தையில் = மனதில்

கன்னல் தேன் = கரும்புச் சாற்றில் தேன் கலந்தார் போல தித்திப்பவர்

கடவூரின் மயானத்தார் = திருக் கடவூர் மயானம் என்ற ஊரில் உள்ளவர்

தன்னை நோக்கித் = தன்னை நோக்கித்

தொழுது எழுவார்கு எல்லாம் = தொழுது எழுவார்கெல்லாம்

பின்னை எண்ணார்  = பின்னால் தரலாம் என்று நினைக்க மாட்டார்

பெருமான் அடிகளே = பெருமான் அடிகளே

அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளிப் போடும் குணம் கிடையாது.

கேட்டவுடன் , இந்தா பிடி , என்று உடனே வழங்குவார்.

நானும் தான் எவ்வளவோ கேட்கிறேன். எங்கே தருகிறார். இதெல்லாம் சும்மா என்று  நினைக்கத் தோன்றும்.

நீங்கள் கேட்பதைத் தரமாட்டார். உங்களுக்கு எனது நல்லதோ அதைத் தருவார். அதையும் உடனே தருவார்.

உங்களுக்குத் தெரியுமா , உங்களுக்கு எது நல்லது என்று ? அல்லது இறைவனை விட உங்களுக்கு எது நல்லது என்று உங்களுக்குத் தெரியுமா ?

இந்தப் பெண் தான் வேண்டும், அவள் இல்லை என்றால் வாழ்கையே இல்லை என்று  வேண்டி விரும்பிக் கல்யாணம் பண்ணிக் கொண்ட பின்..."இதையா கட்டிக் கொண்டேன் " என்று வருந்துகிறான்.

வேண்டத்தக்கது அறிவோய் நீ  என்பார் மணிவாசகர்.

வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்டமுழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொணடாய்
வேண்டி நீயாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்
அதுவும் உன்தன் விருப்பன்றே.

நீங்கள் தொழுது எழுங்கள். உங்களுக்கு வேண்டியதை அவன் உடனே செய்வான்.




(எழுது)

1 comment:

  1. என்ன அருமையான இரண்டு பாடல்கள்! மாணிக்க வாசகர் பாடலுக்கும் உரை ஏன் எழுதவில்லை? பொருளை ஒப்புக்கொள்ள முடியுமோ இல்லையோ, தமிழ்ச் சுவையை இரசிக்க முடிகிறது.

    ReplyDelete