திருக்கடைகாப்பு - வையகம் துயர் தீர்கவே
சில மதங்களைப் பார்த்தால், அவை, எங்கள் கடவுளை வணங்குபவர்களுக்குத்தான் சொர்க்கம், எங்கள் புனித நூலை பின் பற்றுபவர்களுக்குத்தான் சொர்க்கம், வீடு பேறு என்று கூறும். நற்கதி அடைய வேண்டும் என்றால் முதலில் அவர்கள் மதத்துக்கு மாற வேண்டும்.
இந்து மதப் பெரியவர்கள் அப்படி எல்லாம் நினைக்கவில்லை.
ஞான சம்பந்தர் கூறுகிறார்.....
வையகம் துயர் தீர்கவே என்று. இந்த உலகம் பூராவிலும் உள்ள துயரங்கள் தீரட்டும் என்று.
இந்து மதத்தில் உள்ளவர்கள் மட்டும் அல்ல, சைவ சமயத்தை பின் பற்றுபவர்கள் மட்டும் அல்ல....உலகில் உள்ள அனைத்து துயரமும் தீரட்டும் என்று வேண்டுகிறார்.
பாடல்
வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
பொருள்
வாழ்க அந்தணர் = அந்தணர்கள் வாழ்க
வானவ ரானினம் = தேவர்கள் , பசுக்கள் வாழ்க
வீழ்க தண்புனல் = குளிர்ந்த மழை விழட்டும்
வேந்தனு மோங்குக = அரசன் நல்ல முறையில் ஆட்சி செய்து பெருமை அடையட்டும்
ஆழ்க தீயதெல் லாம் = தீயது என்று சொல்லப் பட்டது எல்லாம், மூழ்கிப் போகட்டும்
அரன் நாமமே சூழ்க = சிவனின் நாமமே எங்கும் நிறையட்டும்
வையக முந்துயர் தீர்கவே. = வையகமும் துயர் தீரட்டும்
அந்தணர்கள் வாழ்க என்றார். ஏன் அந்தணர் மட்டும் வாழ வேண்டும். மற்றவர்கள் வாழ வேண்டாமா ?
அந்தணர் என்போர் அறவோர் என்பார் திருவள்ளுவர். அறவழியில் நிற்பவர்கள் யார் என்றாலும் அவர்கள் அந்தணர்கள் தான். அறவழியில் நிற்பவர்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.
மக்கள் அற வழியில் நிற்க வேண்டும்.
நல்ல மழை பொழிய வேண்டும்.
பசுக்கள் வாழ வேண்டும் என்றால் நிறைய புல் வேண்டும். ஊரெல்லாம் பச்சை பசேலென்று இருக்க வேண்டும்.
அரசன் நல்ல ஆட்சியை தர வேண்டும்.
தீமை எல்லாம் குழி தோண்டி புதைக்கப் பட வேண்டும்
வையகம் துயர் தீர வேண்டும். வையகத்தில் யாரும் துன்பப் படக் கூடாது.
எவ்வளவு பெரிய மனம்.எவ்வளவு உயர்ந்த எண்ணம்.
அப்படிப்பட்ட பெரியவர்கள் வாழ்ந்த நாடு இது.
No comments:
Post a Comment