இராமானுஜர் நூற்றந்தாதி - வருத்தம் அனைத்தும் போக
உலகில் எல்லா உயிர்களும் இன்பத்தையே விரும்புகின்றன. அதை வேண்டியே முயற்சியும் செய்கின்றன. இருந்தும் துன்பம் வருகிறது.
ஏன் ?
துன்பத்திற்கு மூல காரணம் என்ன ?
காமம் - வெகுளி - மயக்கம் எந்த மூன்றும் தான் துன்பத்திற்கு காரணம்.
காமம் புரிகிறது - ஆசை, பற்று. பொருளின் மேல், புகழின் மேல், பெண்ணின் மேல், இப்படி ஆயிரம் பற்றுகள்.
வெகுளி - கோபம். ஆசைப் பட்டது கிடைக்காவிட்டால் கோபம் வருகிறது. கோபத்திற்கு காரணம் ஆசை.
மயக்கம் - எது சரி, எது தவறு / எது உண்மை, எது பொய் / எது நிரந்தரமானது, எது நிரந்திரம் இல்லாதது என்ற குழப்பம் மயக்கம் எனப்படும்.
இந்த மூன்றும் நம் துன்பத்திற்கு காரணம்.
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக் கெடும் நோய்
என்பார் வள்ளுவர்.
இந்த மூன்றும் எப்படி போகும் ?
ஆசாரியனின் பாதங்களைப் பிடித்தால் காமம், வெகுளி , மயக்கம் என்ற இந்த மூன்றும் போகும். அவை போய் விட்டால் துன்பம் தானாக ஓடிவிடும்.
அமுதனார் சொல்கிறார்.
"எனக்கும் வருத்தம் இருந்தது. ஆனால், அந்த வருத்தம் இப்போது இல்லை. போய் விட்டது.
எப்படி தெரியுமா ?
வார்த்தைகளுக்கு எட்டாத பெரும் புகழை உடைய நம் கூத்தாழ்வானின் திருவடிகளை அடைந்த பின் , எனக்கு இராமனுஜரின் புகழைப் பாடும் தைரியம் வந்து விட்டது. இனி மேல் இந்த பிறவி என்ற பெரும் வழியைக் கடந்து விடுவேன். எனக்கு இப்போது எந்த வருத்தமும் இல்லை. "
பாடல்
மொழியைக் கடக்கும் பெரும்புகழான், வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும்நம் கூரத்தாழ் வான்சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமா னுசன்புகழ் பாடியல்லா
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே.
பொருள்
மொழியைக் = வார்த்தைகளை
கடக்கும் = தாண்டி, வார்த்தைகளுக்கு அடங்காத
பெரும்புகழான் = பெரிய புகழை உடையவன்
வஞ்ச முக்குறும்பாம் = வஞ்சகமான மூன்று குறும்பான
குழியைக் கடக்கும் = குழியை கடக்க உதவும்
நம் = நம்முடைய
கூரத்தாழ் வான் = கூரத்தாழ்வானை
சரண் கூடியபின் = சரணம் அடைந்த பின்
பழியைக் கடத்தும் = பழியை கடக்கும்
இராமா னுசன் = இராமானுசன்
புகழ் பாடியல்லா = புகழைப் பாடி
வழியைக் கடத்தல் = வழியைக் கடப்பது
எனக்கினி யாதும் வருத்தமன்றே. = எனக்கு + இனி + யாதும் + வருத்தம் + அன்றே
அது என்ன முக்குறும்பு ?
குறும்பு என்றாலே செய்வதோ சொல்வதோ ஒன்றாக இருக்கும், ஆனால் அதற்குப் பின்னால் வேறு ஒன்று இருக்கும். இந்த காம வெகுளி மயக்கம் என்ற மூன்றும் முதலில் நல்லது போலத் தோன்றினாலும், பின்னாளில் வருத்தத்தில் கொண்டு போய் விட்டு விடும்.
முந்தைய பாடலில் இராமனுசன் மேல் தனக்கு அன்பில்லை, பக்தி இல்லை என்று கூறினார். பின் கூரத்தாழ்வானின் சரணம் புகுந்த பின், பயம் தெளிந்து விட்டது. இனி இராமானுஜரின் புகழைப் பாடலாம் என்று நினைக்கிறார்.
அது மட்டும் அல்ல, அபப்டி அவர் புகழ் பாடுவதன் மூலம், இந்த பிறவி என்ற நீண்ட பாதையை கடந்து விட முடியும் என்ற நம்பிக்கையும் அவருக்கு வருகிறது. இனி ஒரு கவலை இல்லை என்கிறார்.
ஆசாரியன் மேல் அவ்வளவு பக்தி. அவ்வளவு நம்பிக்கை.
முக்குறும்பு என்றால் இதுதானா?! மிக இனிமையான பொருள். நன்றி.
ReplyDelete