Tuesday, August 27, 2019

அற்புதத் திருவந்தாதி - எவ்வுருவோ நின்னுருவம் ஏது

அற்புதத்  திருவந்தாதி - எவ்வுருவோ நின்னுருவம் ஏது


காரைக்கால் அம்மையார் எழுதியது அற்புதத் திருவந்தாதி.

உண்மையிலேயே அது ஒரு அற்புதத் திருவந்தாதிதான்.

பெண்கள் சுடுகாட்டுக்கு போவது கூடாது என்ற கட்டாய நெறிமுறை இன்றும் கடைபிடிக்கப் படுகிறது.

அந்தக் காலத்திலேயே, இறைவனை சுடுகாட்டில் சென்று வழிபட்டவர் அம்மையார்.

அறிவியலும், தத்துவமும் படிக்க படிக்க நம் மனமும் புத்தியும் எதையும் ஆராயச் சொல்கிறது. கேள்வி கேட்கச் சொல்கிறது. கேட்டதை சரி பார்க்கச் சொல்கிறது.

எதையும் அலசி ஆராயாமல் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

நம்பிக்கை என்பது குறைந்து கொண்டே வருகிறது. தாக்கம்தான் மேலோங்கி நிற்கிறது.

எதையும் அறிவுக் கண் கொண்டு பார்க்க புத்தி விளைகிறது.

அறிவுக்கு அப்பால் எதுவும் இருக்க முடியாது என்று மனம் திடமாக நம்புகிறது.

அம்மையாரிடம் ஒருவர் கேட்டார், "சிவன் சிவன் என்று சொல்கிறீர்களே, அவன் எப்படி இருப்பான்" என்று.

அம்மையார் சொல்கிறார்

"அவன் எப்படி இருப்பான் என்று தெரியாமலேயே  ஆட்பட்டேன். சரி அப்போதுதான்  திருவருள் கிடைக்கவில்லை. ஆட்பட்ட பின், அவன் அருள் கிடைத்தபின்  சிவன் எப்படி இருப்பான் என்றால், இப்போதும் தெரியவில்லை. அப்போதும் தெரியவில்லை. இப்போதும் தெரியவில்லை.  நீ எப்படி  இருப்பாய் என்று கேட்பவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன். உன் உருவம் தான்  என்ன " என்று சிவனையே கேட்கிறார் அம்மையார்.

பாடல்



அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது


பொருள்

அன்றும் = திருவருள் கிடைப்பதற்கு முன்பு

திருவுருவம் = உன் திருவுருவம்

காணாதே ஆட்பட்டேன் = காணாமலேயே ஆட்பட்டேன்

இன்றும் = திருவருள் கிடைத்த பின்பு இன்றும்

திருவுருவம் காண்கிலேன்  = உன் உருவத்தை நான் காண்கிலேன்

என்றும் = எப்போதும்

தான் = தான்

எவ்வுருவோன் =  எந்த உருவத்தவன்

 நும்பிரான் = உன் தலைவன்

என்பார்கட் = என்று என்னை கேட்பவர்களுக்கு

கென்னுரைக்கேன் = என்ன உரைப்பேன் ?

எவ்வுருவோ  = என்ன உருவமோ

நின்னுருவம் = உன் உருவம்

ஏது = எது நான் சொல்லுவேன்

உருவம் இல்லாத ஒன்றை நம்பித்தான் இருந்திருக்கிறார்கள்.

அவன் அநுபூதி பெற்றவர்களுக்கும் அவன் உருவம் தெரியாது.

நாவுக்கரசர் கூறுகிறார்....

“மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
    மயானத்தான் வார்சடையன் என்னின் அல்லால்
ஒப்புடையான் அல்லன் ஓருருவனல்லன்
    ஓரூரனல்லன் ஓர்உவமன் இல்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
    அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
    இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே”


அவன் இப்படி இருப்பான் என்று உதாரணம் கூற முடியாது
ஒரு உருவம் உடையவன் அல்லன்

ஒரு ஊர் காரன் இல்லை

உவமை இல்லாதவன்

ஒரு நிறம் இல்லாதவன்

இப்படியன் , இந் நிறைத்தன் , இவன் இறைவன் என்று வரைந்து காட்ட முடியாது என்கிறார்.

அப்படி என்றால், அது சிந்தனைக்கு அகப்படாதது.

"சித்தமும் காணா சேச்சியோன் காண்க" என்கிறார் மணிவாசகர்

உருவம் இல்லாத ஒன்றை எப்படி காண்பதாம்?

இது பற்றி சைவ சித்தாந்தம் மிக மிக ஆழமாக சிந்தித்து எழுதி வைத்திருக்கிறது.


விறகில் தீயினன், பாலில் படு நெய் போல் மறைய நின்றுளன் மாமணி சோதியன் 


என்பார் நாவுக்கரசர்.

இதை எப்படித்தான் விளக்குவது ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_27.html

5 comments:

  1. இதுவா இல்லை,அதுவா அதுவும் இல்லை என்பது போல் மனிதர்களாகிய நம் சிறிய புத்திக்கு தெரிந்த வார்த்தைகளால் விவரிக்க முடியாதவன்.
    உணரப்படவேண்டியவன் உரைக்கப் பட முடியாதவன் இறைவன்

    ReplyDelete
  2. ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே , ஜோதியனே துண்ணிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்த நடுவாகி அல்லானே

    ReplyDelete
  3. ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,

    காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,

    பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்,

    கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே.

    ReplyDelete
  4. உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
    இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் அருமை ஐயா 👍

      Delete