திருவருட்பா - கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன்
ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான். அவன் நாளும் ஒரே இடத்தில் இருந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் இறந்து விட்டான். ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் ஒன்று கூடி, அந்த பிச்சைக்காரனை, அவன் இருந்து பிச்சை எடுத்த இடத்திலேயே புதைப்பது என்று முடிவு செய்து, அங்கே ஒரு குழி வெட்டினார்கள்.
இரண்டு அடி தோண்டி இருப்பார்கள், "நங்" என்று சத்தம் கேட்டது. தோண்டி எடுத்துக் பார்த்தால், ஒரு பொற்குடம் நிறைய தங்கக் காசுகள்.
பெரிய பொக்கிஷத்தை மேல் அமர்ந்து கொண்டு வாழ் நாள் எல்லாம் பிச்சை எடுத்திருக்கிறான் அவன்.
அவன் மட்டுமா ?
நாமும் தான் என்கிறார் வள்ளலார்.
"இறைவா, தேவர்கள் எல்லாம் ஏங்க , அவர்களை விட்டு விட்டு நீ வந்து என் மனதில் இருந்து கொண்டாய். மனம் எல்லாம் கள்ளம் நிறைந்த நான் அதை அறியாமல் துன்பத்தில் கிடந்து உழல்கின்றேன்"
என்கிறார்.
வெள்ளிக் குடத்தில் தங்கக் காசுகளை விட, உள்ளத்தில் உள்ள இறைவன் உயர்வு அல்லவா. அது தெரியாமல், பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
Lion King படத்தில் வரும் சிம்பா போல, தான் ஒரு காட்டுக்கு அரசன் என்று தெரியாமல், பன்றியுடன் சுத்திக் கொண்டிருக்கும் சிங்கம் போல, இறைவன் உள்ளே இருப்பதைத் தெரியாமல், பன்றிகளோடு சுத்திக் கொண்டிருக்கிறோம்.
காரணம் என்ன?
தான் யார் என்று அறிய நினைக்காமல், ஊரில் உள்ளவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டு அதன் படி செய்வது.
அந்தப் படத்தில் ரஃபிக் என்று ஒரு குரங்கு வந்து சொல்லும்..."சிம்பா நீ யார் தெரியுமா " என்று. அப்படி வரும் ஆச்சாரியர்களை துணை கொண்டு, அவர்கள் சொல்வதைக் கேட்டு, நாம் யார் என்று அறிய வேண்டும்.
"தன் பெருமை தான் அறியா சங்கரனார்" போல, நம் பெருமை அறியாமல் உழல்கிறோம்.
பாடல்
விண்ணறாது வாழ் வேந்த னாதியர்
வேண்டி யேங்கவும் விட்டென் னெஞ்சகக்
கண்ணறாது நீ கலந்து நிற்பதைக்
கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன்
எண்ணறாத் துயர்க் கடலுண் மூழ்கியே
இயங்கி மாழ்குவேன் யாது செய்குவேன்
தண்ணறாப் பொழில் குலவும் போரிவாழ்
சாமியே திருத்தணிகை நாதனே
பொருள்
விண்ணறாது = விண்ணில் இருக்காமல்
வாழ் = அங்கே வாழ்கின்ற
வேந்த னாதியர் = இந்திரன் மற்றும் தேவர்கள்
வேண்டி யேங்கவும் = வேண்டி ஏங்கவும்
விட்டென்= (அவர்களை) விட்டு என்
னெஞ்சகக் = நெஞ்சு அகத்தில்
கண்ணறாது = கண் இமைக்கும் நேரம் கூட இடைவெளி இல்லாமல்
நீ கலந்து நிற்பதைக் = நீ என்னுள் கலந்து நிற்பதை
கள்ள நாயினேன் = கள்ளத்தனம் நிறைந்த நாய் போன்ற நான்
கண்டு கொண்டிலேன் = கண்டு கொள்ளவில்லை
எண்ணறாத் = எண்ணில் அடங்காத
துயர்க் கடலுண் மூழ்கியே = துயரக் கடலுழ் மூழ்கி
இயங்கி = இயங்கி, செயல் பட்டு
மாழ்குவேன் = மாளுவேன்
யாது செய்குவேன் = என்ன செய்வேன் ?
தண்ணறாப் = தணல் ஆற
பொழில் குலவும் = சோலைகள் சூழும்
போரிவாழ் = திருப்போரில் வாழும்
சாமியே = சாமியே (முருகப் பெருமானே)
திருத்தணிகை நாதனே = திருத்தணிகையின் தலைவனே
நமக்குள் உள்ள ஆற்றலை நாம் அறிந்து கொள்ள முடியாமல் இருக்கக் காரணம், கள்ளத்தனம்.
பொய், சூது, வாது, ஆணவம், போன்ற கள்ளத்தனங்கள் நம்மை , நம்முடைய உண்மையான நிலையை அறிய விடாமல் தடுக்கின்றன.
இதையேதான் மணிவாசகரும் சொல்கிறார்
"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க" என்று சிவபுராணத்தில்.
'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே'
உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம் , வாய் கோபுர வாசல் என்பார் திருமூலர்
"நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்" என்பார் சிவ வாக்கியார்
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
சிந்திப்போம்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_8.html
சின்ன பதிவுதான்.ஆனால் என்னை எங்கயோ கொண்டு சென்றுவிட்டீர்.
ReplyDeleteபடிக்க படிக்க இந்த சிறிய பாடல்களில் பொதிந்து இருக்கும் பெரிய கருத்தை எளிய வார்த்தைகளால் எப்படி இவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்கள் என்கிற மலைப்பே மேல் நோக்கி நிற்கிறது.
grateful thanks to you.
மிக அருமையான பதிவு. நமக்குள்ளே இறைவனைத் தேடுகிறோமோ இல்லையோ, தன்னைத் தானே தேடுவது நன்று என்று புலனாகிறது.
ReplyDeleteமேற்கோள் காட்டிய பாடல்களில், "சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ" என்ற வரியும் அருமையாக இருக்கிறது.