கந்த புராணம் - அயன் படைத்திலன்
ஆயிரம் ஆனாலும், பெண்களுக்கு தங்கள் பிறந்த வீட்டைப் பற்றி குறை கூறினால் பிடிப்பது இல்லை. அதுவும் கட்டிய கணவனோ, அவனைச் சார்ந்தவர்களோ சொன்னால் இன்னும் பிடிப்பது இல்லை.
அதற்காக, சில சமயம் உண்மையை சொல்லாமல் இருக்க முடியுமா?
வள்ளி, தினை புனத்திற்கு காவல் இருக்கிறாள். பயிர்களை, காகம் முதலிய பறவைகள் வந்து சேதப்படுத்தால் அவைகளை விரட்டி, பயிரை காவல் செய்கிறாள்.
அங்கே முருகன், வயோதிக அந்தணர் வேடத்தில் வருகிறான்.
வந்து, வள்ளியிடம் சொல்கிறான்
" கூர்மையான வாளைப் போன்ற கண்களை உடைய பெண்ணே, கேள். உலகில் உள்ள பெண்கள் எல்லாம் கண்டு கை தொழும் படி இருக்கும் உன்னை, இந்த பயிர்களை பாதுகாக்க வைத்துவிட்டுப் போய் இருக்கிறார்களே, அந்த வேடர்களுக்கு, ஆய்ந்து அறியும் அறிவை அந்த பிரம்மன் வைக்கவில்லை போலும் " என்கிறான்.
உங்கப்பா முட்டாள் னு சொன்னா, எதை பொண்ணு பொறுத்துக் கொள்வாள்? அதையேதான் கொஞ்சம் மாற்றிச் சொல்கிறான் கந்தன் "உங்கப்பாவுக்கு , அந்த பிரம்மன் அறிவை வைக்க மறந்து விட்டான் போல் இருக்கு
னு. தப்பு உங்க அப்பா மேல இல்ல, அந்த பிரம்மன் மேல்தான் என்று சொல்லுமாப் போல.....
பாடல்
நாந்தகம் அனைய உண்கண்
நங்கை கேள் ஞாலம் தன்னில்
ஏந்திழையார் கட்கு எல்லாம்
இறைவியாய் இருக்கும் நின்னைப்
பூந்தினை காக்க வைத்துப் போயினார்
புளினர் ஆனோர்க்கு
ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும்
அயன் படைத்திலன் கொல் என்றான்.
பொருள்
நாந்தகம் = கூறிய கொடுவாள்
அனைய போன்ற
உண்கண் = பார்ப்பவரை உண்ண க் கூடிய கண்களைகே கொண்ட
நங்கை கேள் = பெண்ணே !, கேள்
ஞாலம் தன்னில் = இந்த உலகம் தன்னில்
ஏந்திழையார் கட்கு = பெண்களுக்கு
எல்லாம் = எல்லாம்
இறைவியாய் இருக்கும் = தலைவியாய் இருக்கும்
நின்னைப் = உன்னை
பூந்தினை = தினைப்புனம் உள்ள வயல் காட்டை
காக்க வைத்துப் = காவல் காக்க வைத்து விட்டு
போயினார் = போனார்கள்
புளினர் = வேடர்கள்
ஆனோர்க்கு = அவர்களுக்கு
ஆய்ந்திடும் = ஆராய்ச்சி செய்யும்
உணர்ச்சி ஒன்றும் = ஒரு உணர்ச்சியையும்
அயன் = பிரம்மன்
படைத்திலன் = படைக்கவில்லை
கொல் = அசைச் சொல்
என்றான். = என்றான் (முருகன்)
கச்சியப்ப சிவாச்சாரியாரின் தமிழ் கொஞ்சுகிறது.
இராமாயணம்,பாரதம் அளவுக்கு கந்த புராணம் அவ்வளவாக பேசப் படுவது இல்லை.
இருந்தும், அதில் உள்ள பாடல்கள், அவ்வளவு இனிமையானவை. எளிமையானவை.
வேறென்ன சொல்லப் போகிறேன்? மூல நூலை தேடிப் படியுங்கள்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_1.html
No comments:
Post a Comment