நாலாயிர திவ்ய பிரபந்தம் - கலியும் கெடும்
ஒரு ஊரில் பெரிய பஞ்சம். மழையே இல்லை. பூமி வறண்டு விட்டது. மக்கள் தவித்துப் போனார்கள். அந்த ஊருக்கு ஒரு துறவி வந்து சேர்ந்தார். அவரிடம் மக்கள் இப்படி மழையே இல்லை, என்ன செய்வது என்று முறையிட்டார்கள். அதற்கு அவர் "ஒரு யாகம் செய்தால் மழை வரும்" என்று கூறி, அதற்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்து விட்டார்.
ஒரு வாரம் யாகம் நடந்தது. கடைசி நாள் யாகம். யாகம் முடிந்தவுடன், மழை "சோ' என்று பெய்தது. மக்கள் எல்லோரும் மகிழ்ந்தார்கள். அந்த துறவிக்கு நிறைய பொருள் கொடுத்தார்கள், அவரைப் புகழ்ந்து பேசினார்கள்.
அப்போது அவர் சொன்னார் , "இந்த மழை என்னாலோ , இந்த யாகத்தாலோ, உங்களாலோ வரவில்லை. அதோ அந்த மூலையில் குடையோடு நிற்கிறானே அந்த சிறுவனின் நம்பிக்கைக்காக பெய்தது " என்றார்.
அப்போதுதான் எல்லோரும் கவனித்தார்கள்...ஒருவர் கூட குடை கொண்டு வரவில்லை, துறவியும் சேர்த்து.
அவ்வளவு நம்பிக்கை.
கடவுளை நம்பும் எவ்வளவு பேர், தாங்கள் சுவர்க்கம் போவோம் என்று உறுதியாக நம்புகிறார்கள்? ஸ்வர்கமோ, இறைவன் திருவடியோ ஏதோ ஒன்று. அங்கே செல்வதாக எத்தனை பேருக்கு நம்பிக்கை இருக்கிறது?
நம்மாழ்வார் சொல்கிறார்
"இனிமேல் நரகம் என்பதே இருக்காது. யார் நரகத்துக்கு போவார்கள். திருமாலே இந்த பூமியில் வந்து பிறந்து நமக்கு அருள் செய்த பின், யார் நரகம் போகப் போகிறார்கள்? எமனுக்கு என்ன வேலை? கலி புருஷனும் வேலை இல்லாமல் திண்டாடப் போகிறான்" என்கிறார்.
அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. இனிமேல் மரணம் இல்லை, நரகம் இல்லை,கலியால் துன்பம் இல்லை என்று.
எத்தனை பேர் இதை நம்புகிறார்கள் ?
கடவுளிடம் ஒருதரம் சொன்னால் போதாதா? எனக்கு சுவர்க்கம் குடு, துன்பம் தராதே, இன்பம் தா, என்னை நல் வழியில் நடத்து என்று. தினம் தினம் போய் சொல்ல வேண்டுமா ? ஒரு தரம் கூட எதற்கு சொல்ல வேண்டும். அவருக்குத் தெரியாதா?
கடவுளுக்குத் தெரியாது என்று நம்மவர்கள் நம்புகிறார்கள்.
பாடல்
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்று மில்லை,
கலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம்
பொருள்
பொலிக பொலிக பொலிக = சிறந்து விளங்குக
போயிற்று = போயிற்று, நீங்கிற்று
வல்லுயிர்ச் சாபம், = இந்த உயிர்களை பிடித்த சாபம்
நலியும் நரகமும் = நரகம் நலிந்து போகும். யாரும் இல்லாவிட்டால், நரகத்தை இழுத்து மூட வேண்டியது தானே.
நைந்த = சோர்ந்து போன
நமனுக்கிங் கி = நமனுக்கு இங்கு
யாதொன்று மில்லை, = ஒரு வேலையும் இல்லை
கலியும் கெடும் = கலி (சனி) புருஷனும் கெடுவான்
கண்டு கொள்மின் = கண்டு கொள்ளுங்கள்
கடல்வண்ணன் = கடல் போன்ற வண்ணத்தை உடையவன்
பூதங்கள் மண்மேல், = உயிர்கள் வாழும் இந்த மண் மேல்
மலியப் புகுந் = அவனே வந்து புகுந்து
திசை பாடி = இசை பாடி
யாடி = ஆடி
யுழிதரக் கண்டோம் = நடமாடக் கண்டோம்
மரண பயம் இல்லை. கலி பயம் இல்லை. நரக பயம் இல்லை.
கவலையை விடுங்கள். சந்தோஷமாக இருங்கள்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_14.html
துளிக்கூட ஐயமில்லாமல் தெய்வத்தின் மேல் முழு நம்பிக்கை வர இயலவில்லையே. இறைவனை வேண்டிக்கொன்டே நம்மால் முடிந்த ப்ரயத்தனங்களையும் செய்கிறோம்.. வேறு வழியே புலப்படாத பின்னர்தான் ஒரு வேளை நம்பிக்கை வருமோ? அதுவும் பூர்வ ஜென்ம பயனோ?
ReplyDeleteஎன்ன ஒரு சுவையான பாடல்!
ReplyDeleteAmazing, scintillating prediction. It is also an instruction to all vaishnavas to preach to the world. At least starting with oneself family neighbourhood friends relatives we need to can out, she'd inhibitions and become a tool to manifest this prediction soon
ReplyDelete