Saturday, August 1, 2020

திருவருட்பா - கருணை ஈதோ ?

திருவருட்பா - கருணை ஈதோ ?


ஒன்று அழகாக, நன்றாக இருந்தால் கண் பட்டு விடும் என்று சொல்லுவார்கள்.

குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டு வைப்பார்கள். பார்ப்பவர் கண்கள், அந்த பொட்டில் போய் நிற்கட்டும் என்று.

கடைகளில் பூசணிக் காய், பெரிய அரக்கன் வடிவம், படிகாரக் கல் என்றல்லாம் வைத்திருப்பார்கள். காரணம் பார்ப்பவர் கண்கள் அவற்றின் மேல் சென்று விடும். அந்தப் பார்வையின் தீய நோக்கம் பாதிக்கப் படாமல் இருக்கட்டும் என்று.

இது நமது ஆழமான நம்பிக்கை.

வள்ளலார் பாடுகிறார்.

"முருகப் பெருமானே , உன்னுடைய அழகான பாதங்களை நான் பார்த்தால், இந்தப் பாவியின் கண் பட்டுவிடும் என்று நினைத்தா உன் பாதங்களை எனக்கு கனவில் கூட காட்டாமல் இருக்கிறாய்? உன்னை எல்லோரும் கருணை உள்ளவன் என்று சொல்கிறார்கள். இதுவா கருணை?"

என்று உருகுகிறார்.


பாடல்

பண்ஏறும் மொழிஅடியர் பரவி வாழ்த்தும்
பாதமலர் அழகினைஇப் பாவி பார்க்கில்
கண்ஏறு படும்என்றோ கனவி லேனும்
காட்டென்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ
விண்ஏறும் அரிமுதலோர்க் கரிய ஞான
விளக்கேஎன் கண்ணேமெய் வீட்டின் வித்தே
தண்ஏறு பொழில்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

பொருள்

(click the link below to continue reading)


https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post.html

பண் ஏறும்  மொழி = இசையுடன் கூடிய பாடல்

 அடியர் = அடியவர்கள்

பரவி  = போற்றி

வாழ்த்தும் = வாழ்த்தும்

பாதமலர் அழகினை  = அழகான உன் பாத மலர்களை

இப் பாவி பார்க்கில் =இந்தப் பாவி பார்த்தால்

கண் ஏறு படும்என்றோ = கண் பட்டு விடும் என்றா

கனவி லேனும் = கனவில் கூட

காட்டென்றால் = காட்டமாட்டாயா என்றால்

காட்டுகிலாய்  = காட்ட மாட்டேன் என்கிறாய்

கருணை ஈதோ = இதுவா கருணை

விண் ஏறும் = விண்ணகத்தில் உள்ள

அரி முதலோர்க் = திருமால் போன்றவர்களுக்கு

கரிய = அரிய, கடினமான

ஞான விளக்கே  = ஞான விளக்கே

என் கண்ணே = என் கண் போன்றவனே

மெய் வீட்டின் வித்தே = மெய்மையின் மூலமே

தண் ஏறு பொழில் = குளிர்ச்சி மிகுந்த சோலைகள் சூழ்ந்த

தணிகை மணியே  = திருத்தணிகையில் வாழும் மணியே

ஜீவ சாட்சியாய்  = உயிருள்ள சாட்சியாய்

நிறைந்தருளும்  = நிறைந்து அருள் செய்யும்

சகச வாழ்வே =  இயல்பான வாழ்வே

எவ்வளவு இனிமையான பாடல் !





1 comment: