கம்ப இராமாயணம் - ஓவலையோ ?
நமக்கு ஏதாவது ஒரு துன்பம் வந்து விட்டால், நாம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கண்டவர்கள் மேலேயும் எரிந்து விழுவோம்.
அலுவலகத்தில் ஏதோ ஒரு பிரச்சனை இருந்திருக்கும். அதை நினைத்துக் கொண்டே வந்து, வீட்டில் மனைவியின் மேல் எரிந்து விழுவது. "எல்லாம் உன்னால் தான்" என்று அவள் மேல் பழி போடுவது.
அது இயற்கைதானே.
சீதையை பிரிந்து வாடுகிறான் இராமன்.
கார்காலம். கரிய மேகங்கள் எங்கும் மிதந்து திரிகின்றன. வெயில் பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது. அங்கும் இங்கும் மழை பொழிகிறது. தூரத்தில் மின்னல் வெட்டி இடிச் சத்தம் கேட்கிறது.
இராமனுக்கு, அந்த மேகத்தின் மேல் கோபம் வருகிறது.
" கொடிய மேகமே. நீயும் அந்த அரக்கர்களை போலவே இருக்கிறாய். கறுப்பாக இருக்கிறாய். அவர்களின் கோர பற்களைப் போல நீயும் மின்னல் வெட்டுகிறாய். என் உயிரை கொண்டு செல்லும் வரை நீ ஓய மாட்டாய் போலிருக்கிறது"
என்று, மேகத்தின் மேல் சினம் கொள்கிறான்.
பாடல்
வெப்பு ஆர் நெடு மின்னின் எயிற்றை; வெகுண்டு,
எப் பாலும், விசும்பின் இருண்டு எழுவாய்;
அப் பாதக வஞ்ச அரக்கரையே
ஒப்பாய்; உயிர் கொண்டு அலது ஓவலையோ?
பொருள்
(click the link below to continue reading)
https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_17.html
வெப்பு = கொடுமையான
ஆர் = ஆர்த்து எழுந்து
நெடு மின்னின் = நீண்ட மின்னல் என்னும்
எயிற்றை; = பல்லை
வெகுண்டு = கோபம் கொண்டு
எப் பாலும் = எல்லா பக்கமும்
விசும்பின் = மலையில்
இருண்டு எழுவாய்; = இருண்டு கரிய நிறத்தில் எழுவாய்
அப் = அந்த
பாதக = கொடுமையான
வஞ்ச = வஞ்ச மனம் கொண்ட
அரக்கரையே = அரக்கர்களை
ஒப்பாய்; = ஒப்பிடும் படியாக இருக்கிறாய்
உயிர் கொண்டு அலது ஓவலையோ? = என் உயிரை கொண்டு போகாமல் நீ அடங்க மாட்டாய் போல் இருக்கிறது. (ஓவுதல் என்றால் நீங்குதல், விலகுதல் )
மனைவி மேல் அவ்வளவு பாசம். அவள் பிரிவு அப்படி வாட்டுகிறது.
சில பேருக்கு மனைவி ஊருக்குப் போனால் மகிழ்ச்சியாக இருக்கும். காரணம், வீட்டில் இருக்கும் போது அந்த பாடு படுத்துவது. எப்படா போவாள் என்று கணவன் காத்து இருப்பான். போனவுடன், ஒரு பெரிய நிம்மதி. அமைதி.
இங்கே, சீதையின் பிரிவு இராமனை தடுமாற வைக்கிறது. காரணம் இல்லமால் மேகத்தின் மேல் கோபம் கொள்கிறான்.
அன்பு என்றால் அப்படி இருக்க வேண்டும். அப்படி ஒரு ஆள் இல்லாவிட்டால் தவித்துப் போக வேண்டும்.
பரம்பொருள்தான். காதல் அவரையும் புரட்டிப் போடுகிறது என்றால், நாம் எல்லாம் எம்மாத்திரம்?
"No தங்கமணி, enjoy!"
ReplyDelete