கம்ப இராமாயணம் - நயனங்களை உடையாள்
வாழ்கையை இரசிக்க எங்கே நேரம் இருக்கிறது.
எப்போது பார்த்தாலும் ஏதோ ஒரு கவலை. ஏதோ ஒரு அவசரம். ஒன்று முடிந்தால், இன்னொன்று வந்து நிற்கிறது.
ஒரு கவலையும் இல்லாவிட்டாலும், ஏதோ ஒன்றை கற்பனை பண்ணிக் கொண்டு கவலைப் படுகிறோம்.
முடி நரைக்கிறதே. உடல் எடை போடுகிறதே. இந்த பிள்ளைகள் எப்படி சமாளிக்கப் போகிறார்களோ இந்த உலகத்தை என்று புதிது புதிதாக கற்பனை பண்ணிக் கொண்டு கவலைப் படுகிறோம்.
இந்தப் பிரச்னை எல்லாம் தீர்ந்த பின் அக்கடா என்று ஓய்வு எடுத்து, இதை எல்லாம் இரசிக்கலாம் என்று நினைக்கிறோம்.
அந்த நாள் ஒரு போதும் வரப் போவது இல்லை.
பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். அவை ஒரு நாளும் நிற்கப் போவது இல்லை. அதற்காக வாழ்கையை தள்ளிப் போடுவதா?
வாழ்வை இரசிக்க வேண்டாமா? மழை, புல், காற்று, உறவின் நெருக்கம், சுவையான உணவு, இனிய இசை, நல்ல புத்தகம், நகைச்சுவை, அறிவான பேச்சுக்கள், அன்பான அளவளாவல்கள் என்று வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் இரசிக்கப் படிக்க வேண்டும்.
இராமனுக்கும், சீதைக்கும் வராத பிரச்னையா?
நாட்டை விட்டு காடு வந்து விட்டார்கள். ஒரு சுகமும் கிடையாது.
இந்த பதினாலு வருடத்தை எப்படியாவது பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டி விட்டால் பின் அரண்மனையில் சௌகரியமாக இருக்கலாம் என்று தானே நாம் நினைப்போம். அதற்குள் பதினாலு வருடம் போய் விடும். இளமை போய் விடும்.
இராமயணத்தில் மற்றவற்றை எல்லாம் விட்டு விடுங்கள்.
உலகமே தலைகீழான பின்னும், இராமனும், சீதையும் வாழ்கையை இரசிப்பதை விடவில்லை. அவர்கள் சோகத்திலும், துயரத்திலும் வாழ்கையை அனுபவிக்கும் அந்த அனுபவிப்பு இருந்தது. அதை பற்றிக் கொண்டால் கூட போதும் என்று தோன்றுகிறது.
கங்கைகரையை அடைகிறார்கள். முதல் முறை அரண்மனை விட்டு, வருகிறார்கள்.
இன்னும் பதினாலு வருடம் இருக்கிறது. எவ்வளவு கவலை இருக்க வேண்டும்.
சீதைக்கு ஒரு கவலையும் இல்லை.
"மன்மதனின் ஐந்து அம்புகளையும், இராமனின் அம்புகளையும் நினைத்து, இது என் கண்களை விட கூர்மையானவை அல்ல என்று நஞ்சு போன்ற கண்களை உடைய சீதை அவற்றை தூக்கிப் போட்டு விடுகிறாள். அவள் குழலில் தாமரை மலர்களை சூடி இருக்கிறாள். அதில் வண்டுகள் மொய்க்கின்றன. அவை சிரிப்பதைப் போல இருக்கிறதாம். ஏன் சிரிகின்றன என்றால், இந்த மலர்கள் இராமனின் திருவடி அழகுக்கு ஈடாகுமா என்று எண்ணி சிரிக்கின்றனவாம்".
பாடல்
அஞ்சு அம்பையும் ஐயன்தனது
அலகு அம்பையும் அளவா,
நஞ்சங்களை வெல ஆகிய
நயனங்களை உடையாள்,
துஞ்சும் களி வரி வண்டுகள்
குழலின்படி சுழலும்
கஞ்சங்களை மஞ்சன் கழல்
நகுகின்றது கண்டாள்.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_1.html
(pl click the above link to continue reading)
அஞ்சு அம்பையும் = மன்மதனின் ஐந்து அம்புகளையும்
ஐயன்தனது = ஐயன் இராமனின்
அலகு அம்பையும் = கூர்மையான அம்பையும்
அளவா = (மனதுக்குள்) அளவெடுத்து
நஞ்சங்களை = கொடிய விஷங்களை
வெல ஆகிய = வெல்லக் கூடிய
நயனங்களை உடையாள், = கண்களை உடைய சீதை
துஞ்சும்= உறங்கும்
களி வரி வண்டுகள் = தேனை உண்டதால் களிப்புற்ற வண்டுகள்
குழலின்படி சுழலும் = அவளின் குழலை சுற்றி வந்து மொய்க்கும்
கஞ்சங்களை = தாமரை மலர்களை
மஞ்சன் கழல் = மைந்தனாகிய இராமனின் திருவடிகளுக்கு
நகுகின்றது கண்டாள். = ஒப்பாகுமா என்று நினைத்து சிரிப்பதாக நினைத்தாள்
சந்தோஷமாக இருக்க பணம், பதவி, செல்வாக்கு, ஆள், அம்பு, சேனை, ஒன்றும் வேண்டாம்.
மனம் இருந்தால் போதும். எவ்வளவு பெரிய சிக்கலுக்கு நடுவிலும், வாழ்வின் ஏனைய சுகங்களை இரசிக்கலாம்.
அலுவலகத்தில் பிரச்சனை என்றால் மனைவியை கொஞ்சாமல் இருப்பதா?பிள்ளைகளோடு விளையாடாமல் இருப்பதா? எல்லாவற்றையும் மூடி வைத்து விட்டு உலகமே இடிந்து போனது போல உட்கார்ந்து விடுவதா?
கங்கைப் படலம் ஒன்றும் கதைக்கு அவ்வளவு தேவையான ஒன்று அன்றல்ல. இருந்தும் வேலை மெனக்கெட்டு கம்பன் ஒரு படலம் பாடுகிறான்.
எவ்வளவு நுணுக்கமாக வாழ்வை இரசிக்கலாம் என்று காட்டுகிறான்.
No comments:
Post a Comment