Thursday, April 7, 2022

திருக்குறள் - நடுவு நிலைமை - கெடுவல் யான்

திருக்குறள் - நடுவு நிலைமை - கெடுவல் யான் 


உங்களுக்கு சகுனத்தில் நம்பிக்கை இருக்கிறதா?


அதெல்லாம் இல்லை. என்ன ஒரு பழம் பஞ்சாங்கம் என்று நீங்கள் சொல்லலாம். 


வானம் இருண்டு இருக்கிறது. மேகம் நன்றாக சூழுந்து இருக்கிறது. மழை வரும் என்று நம்புகிறீர்கள் அல்லவா? மேகம் சூழ்ந்தால் மழை வரும் என்பதற்கு ஒரு சகுனம். .


வங்கக் கடலில் புயல் மையம் கொண்டு இருக்கிறது. கடலோர இடங்களில் மழை பெய்யலாம் என்று வானிலை அறிக்கை கூறுகிறது. அதுவும் சகுனம் தான். 


ஒருவனுக்கு கெட்ட காலம் வரப் போகிறது என்பதற்கு என்ன சகுனம் தெரியுமா? 


வள்ளுவர் சொல்கிறார் எப்போது நடுவு நிலை மாறி ஒருவன் நடக்க நினைக்கிறானோ  அது அவனுக்கு கெட்ட காலம் வரப் போகிறது என்பதற்கு முன் வந்து சொல்லிய சகுனம் என்கிறார். 


பாடல் 


கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுஒரீஇ அல்ல செயின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_48.html


(தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைய தளத்தை கிளிக் செய்யவும்)


கெடுவல்யான் = யான் கெடுவேன் அல்லது நான் கெடுவேன் 


என்பது அறிக  = என்று அறிந்து கொள்க 


தன் நெஞ்சம் = எப்போது என்றால், ஒருவனது மனம் 


நடுஒரீஇ = நடுவு நிற்றல் 


அல்ல செயின் = அல்லாதவற்றை செய்ய நினைத்தால் 


இதில் பரிமேலழகர் செய்திருக்கும் நுட்பம் அற்புதமானது. .


குறளில் "செயின்" என்று தான் இருக்கிறது. ஆனால் அவர் உரையில் "செய்ய நினைத்தால்" என்று உரை செய்கிறார். அது எப்படி செய்வதும், செய்ய நினைப்பதும் ஒன்றாகும் என்று கேட்டால் 


"நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்"


நினைப்பதும் ஒரு செயல்தான் என்கிறார். 


தவறு செய்ய நினைத்தாலே போதும், கெட்ட காலம் வரப் போகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். 


இரண்டு தும்மல் வருகிறது, மூக்கில் நீர் வடிகிறது, தொண்டை கொஞ்சம் எரிச்சலாக இருக்கிறது என்றால் காய்ச்சல் வரப் போகிறது என்று தெரிகிறது அல்லவா? அப்போது என்ன செய்வோம்? இரண்டு மாத்திரையை போட்டுக் கொள்வோம், சூடாக இரசம் வைத்து சாப்பிடுவோம். காய்ச்சல் வருவதற்கு முன்பே அதன் அறிகுறிகளை வைத்து அந்தக் காய்ச்சல் வராமல் தடுத்து விடுகிறோம் அல்லவா? அது போல,


கெட்ட எண்ணம் வந்த வுடனேயே, இது நல்லது அல்ல என்று உணர்ந்து உடனடியாக அதை மனதில் இருந்துதூக்கி எரிந்து விட வேண்டும். 


கெட்ட எண்ணம் வந்த பின், அதை எப்படி சாமர்த்தியமாக செய்யலாம் என்று கணக்குப் போடக் கூடாது.


உடனடியாக அதை மனதில் இருந்து எடுத்து தூர எரிந்து விட வேண்டும். 


இப்படி யார் சொல்லித் தருவார்கள் ?


திருக்குறள் ஒன்று போதும் மிக மிக இன்பமாக வாழ, நேர்மையாக வாழ, பொருள் ஈட்ட, திறமையாக வேலை செய்ய, கணவன் மனைவி அன்போடு இல்லறம் நடத்த, பிள்ளைகள், உறவுகள் என்று ஒன்றாக வாழ.


இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்? 


(நிறைய குறள்கள் பாக்கி இருப்பதால் ஏறக் குறைய தினம் ஒன்று எழுதிக் கொண்டு இருக்கிறேன்.  எனக்கே புரிகிறது இது கொஞ்சம் சலிப்பூட்டும் வேலை என்று. ரொம்பவும் அலுப்பாக இருந்தால், கொஞ்சம் விடுப்பு எடுத்துக் கொண்டு பின் படியுங்கள்) 




1 comment:

  1. படிப்போர் படிக்கட்டும் அண்ணா ...நீங்கள் தாருங்கள் ....

    ReplyDelete