Saturday, April 2, 2022

திருக்குறள் - நன்றே தரினும்

திருக்குறள் - நன்றே தரினும் 


அயோக்கியத்தனம் , அராஜகம் செய்பவன் எல்லாம் நல்லாத்தான் இருக்கான். நாளுக்கு நாள் அவனுக்கு செல்வம் சேர்ந்து கொண்டேதான் போகிறது. இந்த பாவம், புண்ணியம், அறம் என்பது எல்லாம் சும்மா பேச்சுக்குத் தான். நல்லவன் துன்பப்படுவதும், தீயவர்கள் ஆனந்தமாக வாழ்வதும் நாம் எங்கும் காணக் கிடைக்கிறது. 


அப்படி இருக்கும் போது இந்த அற நூல்கள் எல்லாம் தேவையா? 


நடுவு நிலை பிறழ்ந்தால் செல்வம் வராதா?


திருவள்ளுவர் சொல்கிறார்...


"வரும். அதில் ஆனந்தமாக வாழலாம். பணம் இருந்தால் பல இன்பங்களை துயிகலாம். இல்லை என்று சொல்வதற்கு இல்லை. அப்படியே இன்பம் வந்தாலும், அது வேண்டாம் என்று சொல்" என்கிறார். 


பாடல் 


 நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே ஒழிய விடல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_2.html


(pl click the above link to continue reading)


நன்றே தரினும் = நன்மையே தந்தாலும் 


நடுவிகந்தாம் = நடுவு நிலைமை தவறியதால் வரும் 


 ஆக்கத்தை = செல்வத்தை 


அன்றே = அப்போதே 


ஒழிய விடல் = விட்டு விடுக 


திருடினால் பணம் கிடைக்குமா? கிடைக்கும். அந்த பணத்தில் இன்பமாக வாழ முடியுமா? முடியும். அதற்காக திருடலாமா என்றால் திருடக் கூடாது. ஏன் திருடக் கூடாது ? திருடர்கள் எல்லோரும் இன்பமாகத் தானே இருக்கிறார்கள் என்றால் அந்த செல்வம் திருடியவனுக்கு மட்டும் அல்ல, அவன் சந்ததிக்கே பயன்படாமல் போய் விடும் என்ன்று முந்தைய குறளில் கூறினார். 


நமக்கு திருடர்களின் செல்வம், கார், பெரிய வீடு, நகை, ஆடம்பரம் மட்டும்தான் தெரியும்.  இரவு படுக்கப் போகும் போது அவன் என்ன பாடுபடுகிறான் என்று யாருக்குத் தெரியும். 


யார் அவனை கொலை செய்வார்களோ, யார் காட்டிக் கொடுப்பார்களோ, எப்போது கைது செய்யப் படுவோமோ, எந்த சிறையில் எப்படி துன்பப் பட்டப் போகிறோமோ என்று நாளும் செத்து செத்து பிழைப்பான். அது ஒரு வாழ்க்கையா?


"நன்றே தரினும்" என்று ஒரு 'ம்' போடுகிறார். அது தராது, ஒரு வேளை தந்து விட்டாலும், அதை அன்றே ஒழிக என்கிறார். 


சிலர் நினைக்கிறார்கள், தவறு செய்து வந்தப் பணத்தில் கொஞ்சத்தை கோவில் உண்டியலில், கொஞ்சம் அன்ன தானத்தில் செலவழித்தால் செய்த பாவம் போய் விடும் என்று. 


அதற்கு, அந்தப் பணத்தை வைத்து இருக்க வேண்டும். கோவிலுக்குப் போக வேண்டும், அன்ன தானம் ஒழுங்கு பண்ண வேண்டும். அது வரை அந்தப் பணம் அவன் கையில் இருக்கும். அந்த நேரத்தில் வருமான வரி சோதனை வந்து விட்டால்? 


அப்படிப்பட்ட பணத்தை ஒரு நிமிடம் கூட கையில் வைத்து இருக்காதே. உடனே, உடனே தீர்த்து விடு என்கிறார். 


ஒரு வேளை பணம் வந்தாலும், கையில் தொடாதே என்று எச்சரிக்கிறார். 


வள்ளுவர் 'அன்றே' என்று சொன்னதை பரிமேலழகர் 'அப்பொழுதே" என்று உரை செய்கிறார். 


ஒரு கணம் கூட அந்தப் பணம் உன்னிடம் இருக்க வேண்டாம் என்கிறார். 


ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். தவறனா வழியில் ஒருவர் கூட பணம் சம்பாதிக்க ஒரு சமுதாயம் எப்படி இருக்கும் என்று?


இலஞ்சம் என்பதே கிடையாது. ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கு ஒரு நீதி என்பது கிடையாது. தனி வழி, சிறப்பு வழி, management quota, என்று எந்த பாகுபாடும் கிடையாது. புறம் போக்கு நிலத்தில் பட்டா போட்டு கொள்வது, பொது இடத்தை ஆக்ரமித்துக் கொள்வது, வரி கட்டாமல் ஏய்ப்பது என்று ஒரு தவறும் இல்லாத சமுதாயம் எப்படி இருக்கும்?


இந்த அதிகாரத்தை எல்லோரும் கடை பிடித்தால், அப்படி ஒரு உன்னத சமுதாயம் உருவாகும். 


நம்மில் இருந்து தொடங்குவோமே.



No comments:

Post a Comment