Wednesday, April 27, 2022

திருக்குறள் - அடக்கம் உடைமை - அறிவறிந்து

 திருக்குறள் - அடக்கம் உடைமை - அறிவறிந்து 


அடக்கம் என்றால் புலனடக்கம் என்று பார்த்தோம். 


நாம் சிந்தித்துக் கொண்டு இருப்பதோ இல்லறம் பற்றி. இல்லறத்தில் இருந்து கொண்டு, புலன்களை அடக்குகிறேன் என்றால் எப்படி முடியும்? புலனடக்கம் என்பது துறவரதுக்குச் சரி. இல்லறத்துக்கு? 


மனைவியுடன் அன்பாக இருக்க மாட்டேன், நாள் கிழமை என்றால் ஒரு பலகாரம் எதுவும் சாப்பிடமாட்டேன், நல்ல உடை உடுத்த மாட்டேன், எல்லா புலன்களையும் அடக்கப் போகிறேன் என்று புறப்பட்டால், அவனை விட்டு மனைவி புறப்பட்டு விடுவாள். இவனோடு எப்படி குடும்பம் நடத்துவது என்று தெரியாமல். 


பின் ஏன் வள்ளுவர் அடக்கமுடைமையை கொண்டு வந்து இல்லறத்தில் வைத்தார்? இதைக் கொண்டு போய் துறவறத்தில் வைத்து இருக்கலாமே? 


பரிமேலழகர் இல்லை என்றால் இதற்கு எல்லாம் அர்த்தம் தெரியாமலேயே போய் இருக்கும். 


பாடல் 


செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_27.html


(Pl click the above link to continue reading)


செறிவறிந்து = அடக்கத்தினை அறிந்து 


சீர்மை பயக்கும் = நல்லதைத் தரும், சிறப்பைத் தரும் 


அறிவறிந்து = அறிய வேண்டியவற்றை அறிந்து 


ஆற்றின்  = வழியாக, நெறியாக, 


-அடங்கப் பெறின். = அடக்கம் உண்டானால் 


இதற்கு பரிமேலழகர் மிக நுட்பமாக உரை செய்கிறார். 


முதலாவது, "அடங்கப் பெறின்" என்பதற்கு புலன்கள் தன் வயத்ததாதல் என்கிறார். அதாவது புலன் இன்பங்களை விட்டு ஒழிக்கச் சொல்லவில்லை. புலன்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும் என்கிறார். இன்று ஒரு விசேடம். வடை, பாயாசம், இனிப்பு பலகாரம் எல்லாம் செய்து இருக்கிறார்கள் என்று ஒரு பிடி பிடிக்கக் கூடாது. இவ்வளவுதான் சாப்பிடலாம் என்று கணக்கு வைத்துக் கொண்டு அவ்வளவு மட்டுமே சாப்பிட் வேண்டும். 


மனைவியை தவிர இன்னொரு பெண் பின்னால் மனம் போகக் கூடாது. 


புலன்கள் நாம் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். அது தன் பாட்டுக்குப் போகக் கூடாது. சாரதி வண்டியை ஓட்ட வேண்டும். குதிரை அது பாட்டுக்கு இழுத்துக் கொண்டு போகக் கூடாது. 


இரண்டாவது, "ஆற்றின்". புலன்களை தன் வயப்படுதுகிறேன் பேர்வழி என்று முரட்டுத் தனமாக எதைக் செய்யக் கூடாது. எப்படி செய்ய வேண்டும் என்று அறிந்து அந்த முறையில் செய்ய வேண்டும். ஆறு என்றால் வழி என்று பொருள். 


மூன்றாவது, "அறிவறிந்து". எதை அறிந்து கொள்ள வேண்டுமோ அதை அறிய வேண்டும். இன்று நாம் என்ன செய்கிறோம்? தேவை இல்லாதவற்றை எல்லாம் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். புலன்கள் தன் வசம் ஆகாமல் போவதற்கு காரணம் அறிவு கண்ட இடத்தில் செல்வதால். "அட, இப்படி ஒன்று இருக்கிறதா? நாமும் இதை முயன்றால் என்ன" என்று மனம் இழுத்துக் கொண்ண்டு ஓடும். தேவை இல்லாதவற்றில் அறிவை செலுத்தக் கூடாது. எத்தனை whatsapp செய்திகள்? நம்மை அறியாமலேயே நம் புலன்கள் அவற்றின் பின்னால் போய் விடும். .



நான்காவது, பரிமேலழகர் ஒரு படி மேலே போகிறார். 'அறிவறிந்து' என்பதற்கு, அடங்குதலே அறிவு என்று அறிந்து என்கிறார். படித்து வருவது அல்ல அறிவு. புலனடக்கமே அறிவு என்கிறார் அவர். 


"அடங்குதலே அறிவு என்று அறிந்து நெறிப்படி அடங்குதல்" என்று பொருள் சொல்கிறார். .


ஐந்தாவது, சும்மா இப்படி புலனடக்கம், புலனடக்கம் என்று இருந்தால் என்ன நன்மை கிடைக்கும்? நல்லா அனுபவிப்பதை விட்டு விட்டு, புலன்களை கட்டுக்குள் கொண்டு வருவதால் என்ன பலன் என்று கேட்டால், 


"செறிவு அறிந்து சீர்மை பயக்கும்" என்கிறார். 


செறிவு அறிந்து என்பதற்கு பரிமேலழகர் "செறிந்த அறிவை உடையவர்", சான்றோர், நல்லோர் என்று உரை செய்கிறார். அதாவது நாம் புலன்களை நம் வயப் படுத்தி அடங்கி இருந்தால் அது நல்லவர்களுக்கு நம் மேல் ஒரு நன்மதிப்பை உண்டாக்கும். அவர்களின் மதிப்பைப் பெற்றால், அது நமக்கு பல நன்மைகளைத் தரும் என்கிறார். 


உதாரணமாக, "எனக்கு அதிகம் தெரியாது. நான் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்" என்ற அடக்கம் இருந்தால், திருவள்ளுவரைப் படிப்போம்.  அதைப் படித்ததால் நமக்கு பலன் இருக்குமா இல்லையா? மாறாக, "எல்லாம் எனக்குத் தெரியும்" என்று இருந்தால் பலன் கிடைக்குமா? 


அடக்கமாய் இருப்பவர்கள் மேல் நல்லோருக்கு ஒரு அன்பு பிறக்கும். அந்த அன்பும் மதிப்பும் பல நன்மைகளைக் கொண்டு வந்து தரும் என்கிறார். .


அடங்குதலே அறிவு என்று அறிந்து, நெறிப்படி புலன்களை தன் வசத்தில் கொண்டு வந்தால், அது நல்லவர்களின் மதிப்பை பெற்று தருவதோடு அதன் மூலம் கிடைக்கும் பல நன்மைகைகளை நமக்குத் தரும் என்பது சாரம். 


ஒண்ணே முக்கால் அடிக்குள் ஒரு மாயாஜாலம். 


No comments:

Post a Comment