திருக்குறள் - எச்சத்தால் காணப்படும்
ஒருவன் உயிரோடு இருக்கும் போது அவன் எவ்வளவோ காரியங்களை செய்யலாம். அப்படி செய்பவன் பெரிய அதிகாரத்தில் உள்ளவனாக அல்லது பெரிய பணக்காரனாக இருந்தால் மக்கள் அவன் செயலை ஒன்றும் சொல்ல மாட்டார்கள். காரணம், பயம். அவனைப் பற்றி ஏதாவது சொன்னால் தங்களுக்கு தீமை வந்து விடுமோ என்று எண்ணி பேசாமல் இருந்து விடுவார்கள்.
ஆனால், அவன் இறந்த பின், அவன் செயல் பற்றி பல விமர்சினங்கள் எழும். அவன் தான் இல்லையே. எனவே மக்கள் பயம் இல்லாமல் அவன் செய்த தவறான காரியங்களைப் பற்றி பேச முற்படுவார்கள்.
எனவே, ஒருவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்பது அவன் உயிரோடு இருக்கும் போது தெரியாது. அவன் மறைவுக்குப் பின்னரே தெரியவரும் என்கிறார் வள்ளுவர்.
பாடல்
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_4.html
(pl click the above link to continue reading)
தக்கார் = தகுந்தவர்
தகவிலர் = தகவு இல்லாதவர் = தகுதி இல்லாதவர்
என்பது = என்பது
அவரவர் = அவர்களுடைய
எச்சத்தால் காணப் படும் = மீதியால் காணப்படும்
என்ன தகுதி, என்ன மீதி ?
அகாரதியை எடுத்துப் பார்த்தால் புரியாது.
பரிமேலழகர் உரையின் ஊடாக நாம் இதை புரிந்து கொள்ளலாம்.
இந்த அதிகாரம் 'நடுவு நிலைமை' பற்றியது.
எனவே, தகுதி என்று இங்கே சொல்லப் படுவது நடுவு நிலையில் நிற்கும் தகுதி என்று பொருள் கொள்கிறார்.
ஒருவன் நீதி, நேர்மை இவற்றிற்கு கட்டுப்பட்டு ஒழுகாக இருந்தால் அவன் தகுதி வாய்ந்தவன். இல்லை என்றால், தகுதி இழந்தவன் என்று பொருள்.
எச்சம் என்றால் பரிமேலழகர் பிள்ளைகள் என்று பொருள் சொல்கிறார். வேறு பல உரை ஆசிரியர்கள் ஒருவன் விட்டுச் செல்லும் அனைத்தும் எச்சம் என்று பொருள் சொல்கிறார்கள். நாம் இந்த இடத்தில் பரிமேலழகரை விட்டு விட்டு மற்ற உரை ஆசிரியர்களை பின்பற்றலாம்.
காரணம், பிள்ளை இல்லாதவனை எப்படி கணிப்பது? ஒருவன் திருமணமே செய்து கொள்ளவில்லை என்றால் அவனை எப்படி கணிப்பது? பிள்ளை பெறுவதற்கு ஆண், பெண் என்ற இருவர் வேண்டும். ஒருவர் தக்கார், இன்னொருவர் தகவு இல்லாராக இருந்தால் என்ன செய்வது?
மேலும், பிள்ளைகள் வெளி உலகில் இருந்து பலவற்றைக் கற்றுக் கொள்கின்றன.
எனவே, எச்சம் என்றால் பிள்ளைகள் என்பதை விட்டுவிட்டு புகழ், இகழ், அவர்கள் எழுதி வைத்து சென்ற புத்தகங்கள், இசை, அறிவியல் கோட்பாடுகள் என்று அவற்றைக் கொண்டு தீர்மானிக்கலாம் என்கிறார்கள்.
வள்ளுவருக்கு பிள்ளை இருந்ததா இல்லையா என்று நமக்குத் தெரியாது. ஆனாலும் நாம் இன்றும் அவரைப் போற்றுகிறோம், காரணம் அவர் நமக்கு விட்டுச் சென்ற திருக்குறள் என்ற அவரின் எச்சம்.
பெரிய ஓவியக் கலைஞர்கள், இசை மேதைகள், ஐன்ஸ்டீன் போன்ற அறிவியல் மேதைகள் இவர்களின் தகுதியை அவர்களின் எச்சத்தால் காண முடியும்.
ஆனால், சிக்கல் என்ன என்ன்றால், அதற்கும் நடுவு நிலைக்கும் என்ன சம்பந்தம்?
அவர்கள் படைப்புகளுக்கும் அவர்களின் நடுவு நிலைமைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
எனவே அந்த உரையையும் நாம் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாது.
எச்சம் என்றால் விட்டுச் சென்ற பேரும், புகழும் என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஒருவன் மோசமானவனாக இருந்தால் உலகம், அவன் காலத்துக்குப் பிறகு அவனை தூற்றும். ஹிட்லர் இருந்த காலத்தில் அவருக்கு எதிராக யாரும் ஒன்றும் சொல்லி இருக்க மாட்டார்கள். அவர் காலத்துக்குப் பின், அவர் செய்த நிறை குறைகளைப் பற்றி பேசுவார்கள். அதில் இருந்து அவர் எப்படிப் பட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்.
எனவே, நாம் என்ன நினைக்க வேண்டும் என்றால், நம் காலத்துக்குப் பின், நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்று.
இருக்கும் போது நம் முகத்துக்கு எதிரே எல்லோரும் நம்மை புகழ்தான் செய்வார்கள். அதையெல்லாம் உண்மை என்று நம்பி விடக் கூடாது. நம் காலத்துக்குப் பின் நாம் செய்த ஒவ்வொரு தவறும் வெளியில் வரும். அப்போது என்ன பேசுவார்கள் என்று நினைத்து தவறு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதுதான் பாடம்.
No comments:
Post a Comment