நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல்
தமிழ் இலக்கியம் என்பது ஏதோ பொழுது போக்க, நேரத்தை செலவழிக்க என்று எழுதப்பட்ட இலக்கியம் அல்ல. வாழ்வைகூர்ந்து நோக்கி, அதை செம்மைப் படுத்த என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து, அதை அழகாக, எளிமையாக சொன்னவை நம் இலக்கியங்கள்.
அப்படிப்பட்ட ஒன்று தான் நாலடியார். நான்கே வரிகளில் வாழக்கைக்கு தேவையான நல்ல விடயங்களை எடுத்துச் சொல்லும் நூல்.
நண்பர்களை ஆராய்ந்து, தேர்ந்து எடுக்க வேண்டும். அலுவலகத்தில், பள்ளியில், கல்லூரியில், பக்கத்து வீட்டில் இருக்கிறார்கள் என்பதற்காக ஒருவரை நட்பாகக் கொள்ளக் கூடாது.
சரி, ஒருவரை ஆராய்ந்து நட்பாகக் கொண்டுவிட்டோம் என்றால், பின்னாளில் அவர்களிடம் சில குறை வந்தாலும், அவர்கள் நமக்கு வேண்டாதவற்றை செய்தாலும், பொறுத்துக் கொள்ள வேண்டுமே அல்லாமல் வெட்டி விடக் கூடாது. அப்படி செய்து கொண்டே போனால், ஒருவர் கூட மிஞ்ச மாட்டார்கள். குறை எல்லோரிடமும் உண்டு என்கிறது இந்த முதல் பாடல்.
பாடல்
நல்லார் எனத் தாம் நனி விரும்பிக் கொண்டாரை,
அல்லார் எனினும், அடக்கிக் கொளல்வேண்டும்;-
நெல்லுக்கு உமி உண்டு; நீர்க்கு நுரை உண்டு;
புல் இதழ் பூவிற்கும் உண்டு.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_30.html
(pl click the above link to continue reading)
நல்லார் = இவர் நல்லவர்
எனத் = என்று
தாம் = நாமே
நனி = மிகவும்
விரும்பிக் = விருப்பத்துடன்
கொண்டாரை = நட்பாக்கி கொண்டவர்களை
அல்லார் எனினும் = அவர்கள் அப்படிப்பட்டவர் என்றாலும்
அடக்கிக் கொளல்வேண்டும் = அதை வெளியே காட்டாமல் பொறுத்துக் கொள்ள வேண்டும்
நெல்லுக்கு உமி உண்டு = நெல்லுக்கு உமி உண்டு
நீர்க்கு நுரை உண்டு = நீருக்கு நுரை உண்டு
புல் இதழ் = புன்மையான பூ இதழ்
பூவிற்கும் உண்டு = பூவிற்கும் உண்டு
அதாவது,
நாம் விரும்பி உண்ணக் கூடிய து சாதம், சோறு. அது நெல்லில் இருந்து வருகிறது. அந்த நெல்லில் உமி இருக்கும். அரிசியின் மேல் இருக்கும் தோலுக்கு உமி என்று பெயர். அதை உரித்தால் உள்ளே நெல் இருக்கும். உரித்த பின், அந்த தோலை, உமியை தூர எறிந்து விட வேண்டியதுதான். அதனால் பயன் இல்லை. உமி இருக்கிறதே என்பதற்காக நெல்லை ஒதுக்கி விட முடியுமா? ஒதுக்கினால், அரிசி கிடைக்காது, சோறு கிடையாது. பட்டினிதான்.
அதே போல், தாகத்தைத் தணிக்கும் நீர். அதில் சில சமயம் நுரை இருக்கும். நுரையை குடிக்க முடியாது. அது கொஞ்சம் இடைஞ்சல்தான். நுரை இருக்கிறதே என்று நீரை வேண்டாம் என்று ஒதுக்க முடியுமா?
ஆசையோடு நாம் தலையில் வைக்கும் பூவில் சில சமயம் சில இதழ்கள் வாடி, கருகிப் போய் இருக்கும். ஒரு இதழ் கருகிப் போய் இருக்கிறதே என்பதற்காக அந்த பூவையே வேண்டாம் என்று ஒதுக்க வேண்டும்.
எல்லா நல்லவற்றிலும் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும்.
அதற்காக அதை வேண்டாம் என்று ஒதுக்கி விடக் கூடாது.
அதை போல் நண்பர்களிலும் சில குறைபாடுகள் இருக்கும். அதை வெளியே சொல்லாமல், அவர்களை பொறுத்து நட்பை விட்டு விடக் கூடாது.
Good one... specifically on friends day
ReplyDeleteநல்ல நண்பர்கள் வாழ்வின
ReplyDeleteமகிழ்ச்சியே