நாலடியார் - புல்லறிவாண்மை - எதுக்குச் சண்டை?
புல் எவ்வளவு சிறியது. அதில் சிறப்பித்துக் கூற ஒன்றும் இல்லை. புல்லறிவு என்றால் புல் போன்ற சிறிய அறிவு. சிற்றறிவு. கொசு மூளை என்று சொல்லுவார்களே அது. புல்லறிவாண்மை என்றால் அந்த சிறிய அறிவை பெரிய அறிவு என்று நினைத்துக் கொண்டு பெருமிதம் கொண்டு அலைவது.
சிலருக்கு படிப்பறிவு, பட்டறிவு எல்லாம் மிகக் கொஞ்சமாக இருக்கும். ஆனால், அவர்கள் பேசுவதைக் கேட்டால் ஏதோ எல்லாம் படித்த மேதாவிகள் மாதிரி பேசுவார்கள்.
அப்படிப்பட்ட அறிவுள்ளவர்களைப் பற்றி நாலடியார் பேசுகிறது.
"இருக்கப் போகிற நாள் கொஞ்சம். உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இதில் பலர் பேசும் பழிச் சொற்களை வேறு கேட்க வேண்டும். இருக்கின்ற கொஞ்ச நாளில், எல்லோரிடமும் சிரித்து பேசி மகழ்ந்து இருக்காமல், எல்லோரிடமும் எதற்கு சண்டை போட வேண்டும் ?"
அப்படி சண்டை போடுபவன், புல்லறிவாளன்.
பாடல்
உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால்,
பலர்மன்னுந் தூற்றும் பழியால், -பலருள்ளும்
கண்டரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன்
தண்டித் தனிப்பகை கோள்.
பொருள்
உளநாள் = உயிரோடு இருக்கப் போகும் நாட்கள்
சிலவால் = சில நாட்களே
உயிர்க்கேமம் = உயிர்க்கு ஏமம் = உயிருக்கு துணை
இன்றால் = யாரும் இல்லை
பலர்மன்னுந் = பலரும்
தூற்றும் பழியால் = பழிச் சொல்லை கேட்டு
பலருள்ளும் = பலரிடத்தில், உள்ள பலரிடத்தில்
கண்டரோ டெல்லாம் = காண்கின்ற பேர்களை எல்லாம்
நகாஅ தெவனொருவன் = நகாது எவனொருவன் = சிரித்து மகிழாமல் எவன் ஒருவன்
தண்டித் = வெறுத்து, ஒதுக்கி
தனிப் = தனித்து
பகை கோள் = பகை கொள்வது ஏன் ?
இருக்கிற கொஞ்ச நாளில் எல்லாரிடமும் சிரித்து பேசி மகிழாமல், எல்லாரிடமும் சண்டை போட்டுக் கொண்டு, பேச்சு வாங்கிக் கொண்டு, தனித்து இருப்பது புல்லறிவாண்மை என்கிறது நாலடியார்.
சண்டியர் மாதிரி எல்லாரிடமும் சண்டை போடுவதும் ஒரு சுகம் என்று நினைப்பது silly mind...
No comments:
Post a Comment