Monday, January 8, 2024

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவனந்தபுரம்

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவனந்தபுரம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_35.html

நமக்கு ஏன் துன்பங்கள் வருகின்றது என்று கேட்டால், நாம் செய்த வினை. முன்பு செய்த வினை, இந்தப் பிறவி எடுத்த பின் செய்த வினைகள் என்று எல்லாம் சேர்ந்து கொண்டு நமக்கு துன்பம் தருகின்றன. 


அவற்றை எப்படி போக்குவது?  இனி துன்பங்கள் வராமல் எப்படி காத்துக் கொள்வது?


நம்மாழ்வார் கூறுகிறார் 


"கேசவா என்று சொல்லு. உன் எல்லா துன்பங்களும் ஓடிப் போய் விடும். அது மட்டும் அல்ல இனி ஒரு துன்பமும் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? எமன் கூட உன் அருகில் வராத ஒரு தலம் இருக்கிறது. அங்கு போய் விட்டால் மரண பயம் கூட இருக்காது. அந்தத் தலம் "திருவனந்தபுரம்" என்ற தலம்"


பாடல்  


கெடும் இடர்ஆயஎல்லாம்*  கேசவா என்ன*  நாளும் 

கொடுவினை செய்யும்*  கூற்றின் தமர்களும் குறுககில்லார்*

விடம்உடை அரவில்பள்ளி*  விரும்பினான் சுரும்பலற்றும்* 

தடம்உடை வயல்*  அனந்தபுரநகர் புகுதும்இன்றே 

(திருவாய் மொழி - 10-2-1, நம்மாழ்வார்) 


பொருள் 


கெடும் = முடிந்து போகும் 


இடர்ஆயஎல்லாம் = அனைத்துவிதமான துன்பங்களும் 


 கேசவா என்ன = 'கேசவா' என்று சொன்னால் 


நாளும் = ஒவ்வொரு நாளும் 

 

கொடுவினை செய்யும் = கொடிய செயல்களைச் செய்யும் 


கூற்றின் = எமனின் 


தமர்களும்  = கூட்டாளிகளும், கூட உள்ளவர்களும் 


குறுககில்லார் = கிட்ட கூட வர மாட்டார்கள் 


விடம்உடை = நஞ்சை உடைய 


அரவில் = பாம்பின் மேல் 


பள்ளி = அனந்த சயனம் 


விரும்பினான் = விரும்பி சயனிக்கும் 


சுரும்பலற்றும் = வண்டுகள் ரீங்காரம் செய்யும் 

 

தடம்உடை = அடையாளம் உள்ள 


வயல் = வயல்கள் நிறைந்த 


அனந்தபுரநகர் = திருவனந்தபுரம் என்ற தலம் 


புகுதும்இன்றே = இப்பவே போவோம் 


கேசவா என்ற சொல் வந்த வினைகளை தீர்க்கும். 


திருவனந்தபுரம் இனி வர இருக்கும் இன்னல்களை போக்கும். 


புகுதும் இன்றே....





 



No comments:

Post a Comment