திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 10 - இறுதிப் பாகம்
பாடல்
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/05/10.html
(pl click the above link to continue reading)
சுவை = சுவை
ஒளி = ஒளி
ஊறு = தொடு உணர்ச்சி
ஓசை = ஓசை
நாற்றம் = மூக்கால் நுகர்வது
மென் றைந்தின் = என்ற ஐந்தின்
வகை = கூறுபாடுகளை
தெரிவான் = ஆராய்ந்து அறிபவன்
கட்டே உலகு = கண்ணதே உலகம்
( இதன் முந்தைய பகுதிகளை கீழே காணலாம்)
https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html
https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html
)
ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம்.
இதுவரை
1. மூலப் பிரகிருதியும் அதில் இருந்து பிறந்த பிரகிருதி
2. மான் அல்லது மஹத்
3. அகங்காரம்
4. மனம்
5,6,7,8,9 - ஐந்து ஞானேந்திரியங்கள்
10 - கை
11 - கால்
12 - பாயு (மல ஜலம் வெளியேற்றும் உறுப்புகள்)
13 - வாக்கு
14 - பிறப்பு உறுப்புகள்
15 சுவை
16 ஒளி
17 ஊறு
18 ஓசை
19 நாற்றம்
வரை சிந்தித்தோம்.
ஞானேந்திரியங்களும், கண்மேந்திரியங்களும், தன் மாத்திரைகள் தோன்றி விட்டன.
அடுத்ததாக, பஞ்ச பூதங்கள் பற்றி சொல்கிறது சாங்கியம்.
20 = ஆகாயம், வெளி
21 - நீர்
22 - நிலம்
23 - நெருப்பு
24 - காற்று
இந்த ஐந்து பூதங்களும், ஐந்து புலன்களோடு தொடர்பு கொண்டவை என்று முந்தைய ப்ளாகில் பார்த்தோம்.
வெளி அல்லது ஆகாயம், காது, கேட்டல் என்பதோடும்
நிலம், மணம், மூக்கு என்பதோடும்
நெருப்பு, ஒளி, கண் என்பதோடும்
நீர், சுவை, நாக்கு என்பதோடும்
காற்று, தோல், தொடு உணர்வோடும்
தொடர்பு பட்டன என்று பார்த்தோம்.
ஒரு புறம் இந்த உலகம், பஞ்ச பூதங்கள், ஞான மற்றும் கன்மேந்திரியங்கள், மற்றும் தன் மாத்திரைகள்.
இவை எல்லாம் ஒரு புறம்.
இவற்றை அனுபவிப்பது யார் என்ற பெரும் கேள்வி நிற்கிறது?
கண் அனுபவிக்குமா ? கண்ணுக்குத் தெரியுமா அது ஒரு அழகான பூவை பார்க்கிறது என்று? கண்ணின் வேலை அதற்கு வரும் ஒளியை உள்ளே செல்லுத்துவது. அதற்கு வேறு ஒன்றும் தெரியாது.
மூளை பார்க்குமா? மூளை பார்க்கும் என்றால் எல்லோரும் ஒரே விதமாக அல்லவா பார்க்க வேண்டும்?
இசை அறிந்தவன் அது இன்ன இராகம் என்கிறான். சுருதி சரி இல்லை என்கிறான். இசை அறியாதவனுக்கு அது ஒரு இனிய சத்தம் அவ்வளவுதான். கல்யாணியும், காம்போதியும் இசை அறியாதவனுக்கு ஒன்றுதான்.
கேட்பது காது அல்ல, மூளை அல்ல. முன் சேர்த்த ஞாபகம், அறிவு, கல்வி, அனுபவம் எல்லாம் சேர்ந்த ஒன்று.
ஒரு பெண்ணைப் பார்த்தால், அவளுடைய தகப்பன் அவளை மகள் என்கிறான், கணவன் மனைவி என்கிறான், பிள்ளை அம்மா என்கிறான். அவள் யார்? பார்ப்பவரின் கோணத்தில் இருந்து பார்ப்பது மாறுபடுகிறது.
இசை அறிந்தவனுக்கு கல்யாணி. அறியாதவனுக்கு சத்தம்.
உலகம் என்பது நம் உள்ளே உள்ள ஏதோ ஒன்றின் அனுபவப் பொருளாக இருக்கிறது.
காது சுத்தமாக கேட்கவில்லை என்றால் இசையை எப்படி அனுபவிப்பது?
அனுபவிக்க இசையும் வேண்டும், கேட்கும் காதும் வேண்டும், அதை அறியும் அறிவும் வேண்டும். ஆனால் இந்த மூன்றும் இசையை அனுபவிப்பது அல்ல.
அந்த அனுபவிக்கும் பொருளை "புருஷன்" என்கிறார்கள்.
24 தத்துவங்கள் மேலே சொன்னது.
இவற்றை அனுபவிக்கும் புருஷன் 25 ஆவது தத்துவம் என சாங்கிய தத்துவம் மொத்தம் 25.
சாங்கியர்கள் இந்த 25 ஓடு நிறுத்திக் கொண்டார்கள். சைவ சமயம் மேலும் செல்கிறது. சைவ சித்தாந்தம் 36 தத்துவங்களை கொண்டது.
ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்
பேறா அடியேன், பெறுமாறு உளதோ?
சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே.
என்பார் அருணகிரிநாதர்.
ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்
ஆறு ஆறு = 6 x 6 = 36 தத்துவம்.
புருஷன் ஒரு புறம், பிரகிருதி மறு புறம், இவை சேர்ந்த இருபத்தி ஐந்து தத்துவங்கள், இவற்றை அறிவான் கட்டே தங்கும் உலகு என்கிறார் வள்ளுவர்.
புரிந்த மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறது அல்லவா.
நம்மவர்கள் மிக ஆழமாக சிந்தித்து இருக்கிறார்கள்.
சரியோ, தவறோ அது அப்புறம். முதலில் அவை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
சாங்கிய தத்துவம் பற்றி நிறைய செய்திகள் வலை தளங்களில் கிடைக்கும். படித்துப் பாருங்கள். பிரமிப்பு ஏற்படும். எந்த அளவுக்கு நாம் அறிவுத் துறையில் முன்னேறி இருந்திருக்கோம் என்று புரியும்.
சாங்கிய தத்துவத்தை நான் முழுவதுமாக அறிந்து கொண்டு சொல்லவில்லை. இப்படி ஒன்று இருக்கிறது என்று எடுத்துக் காட்டி இருக்கிறேன். நான் கூறியவற்றில் பிழை இருக்கலாம். அது என் அறியாமையில் விழைந்த பிழைதானே அன்றி தத்துவத்தில் உள்ள பிழை அன்று.
ஆர்வம் உள்ளவர்கள் மேலும் படித்து உணர்வார்களாக.
இதை அத்தனையும் ஒன்றே முக்கால் அடியில் சொல்லிவிட்டு போய் விட்டார் வள்ளுவர்.
இதற்குள் இவ்வளவு இருக்கும் என்பது பரிமேலழகர் இல்லவிட்டால் நமக்கு தெரிந்தே இருக்காது.
இனி அடுத்த குறளுக்குச் செல்வோமா ?
பரிமெல் அழகர் சொல்லியதும் எங்களுக்கு புரிந்திருக்காது, இந்தblog படிக்காவிட்டால். Thanks for explaining such deep philosophy in such simple language. We are trying to digest the whole concept. Depends on the depth of our knowledge. Thank you . நன்றி
ReplyDeleteமிக எளிமையான உதாரணங்களோடு, நேர்த்தியாய் சாங்கிய தரிசனத்தை விளக்கிய உங்களுக்கு மிக்க நன்றி ஐயா...
ReplyDeleteஎனக்கு புரிகிற மாதிரி சொன்னீங்க. மிக்க நன்றி. எவ்வளவு ஆழமான கருத்துக்கள். பலே பலே
ReplyDeleteஒவ்வொரு குறளுக்கும் பரிமேல் அழகரின் உரையின் எளிமையான பகுதிகளை மட்டுமே விளக்காமல், எங்கெல்லாம் பரிமேல் அழகர் வள்ளுவர் வெளிபடையாக கூறாத உறை கொடுத்து உள்ளாரோ, அதை எடுத்து காட்டி, ஆழ்ந்து ஆய்வு செய்து விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி! சாங்கிய தத்துவத்தை அறிமுக படுத்தியமைக்கும் மிக்க நன்றி! வணக்கம்!
ReplyDeleteசுவாரசியமான செய்திகள். தந்ததற்கு நன்றி.
ReplyDelete