Friday, May 21, 2021

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 3

 

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 3 



பாடல் 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/3_21.html


(pl click the above link to continue reading)


சுவை = சுவை 


ஒளி = ஒளி 


ஊறு = தொடு உணர்ச்சி 


ஓசை = ஓசை 


நாற்றம் = மூக்கால் நுகர்வது 


மென் றைந்தின் = என்ற ஐந்தின் 


வகை = கூறுபாடுகளை 


தெரிவான் = ஆராய்ந்து அறிபவன் 


கட்டே உலகு = கண்ணதே உலகம் 







( இதன் முதல் பகுதியை கீழே காணலாம்)


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html


இதன் இரண்டாம் பகுதியை கீழே காணலாம்)

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html


)

ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம். 


நாம் ஒன்றை அறிந்து கொள்ள என்னென்ன வேண்டும்?


அறிபவன், அறிந்து கொள்ளும் பொருள்,  அறிதல் அல்லது அறியும் அனுபவம் இந்த மூன்றும் நிகழ வேண்டும் அல்லவா?


அறிந்து கொள்ளும் பொருள்கள் எப்படி உருவாகின்றன என்று சாங்கிய தத்துவம் விளக்குகிறது. 


அதை புரிந்து கொள்வதற்கு முன்னால், இன்றைய நவீன அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். 


இன்றைய அறிவியல், இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரு பெரு வெடிப்பில் (Big Bang) இருந்து தோன்றியது என்கிறது.  இந்த அண்ட சராசரம் எல்லாம் ஒரு புள்ளியில் குவிந்து இருந்தது. அந்த புள்ளி ஒரு நாள் வெடித்து இந்த பேரண்டம் உருவானது என்கிறது. 


சரி. வெடிப்பதற்கு முன்னால் என்ன இருந்தது என்று கேட்டால், அது ஒரு அபத்தமான கேள்வி என்கிரார்கள். காலமே அந்த வெடிப்பில் இருந்து தான் தொடங்கியது. எனவே அதற்கு "முன்னால்" என்ற கேள்வியே வராது என்கிறார்கள். காலத்தின் தொடக்கம் பெரு வெடிப்பு. Time Zero அது தான். அதற்கு முன்னால் என்று கேட்டால், அதற்கு முன்னால் காலம் இருந்தது என்று ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். அதற்கு முன்னால் காலம் என்பதே கிடையாது என்கிறார்கள். 


எப்படி என்று சிந்திப்போம். 


காலம் என்பது என்ன? இரண்டு நிகழ்வுகளுக்கு இடைப்பட்ட ஒன்று தானே காலம். சூரியன் உதிப்பதற்கும், மறைவதற்கும் இடைப்பட்ட ஒன்றை நாள் என்கிறோம். பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றி வர ஒரு வருடம் என்கிறோம். பூமி சுத்தாவிட்டால், வருடம் என்று எதைச் சொல்வது? நாள் என்று எதைச் சொல்வது. நொடி என்றால் நொடி முள் ஒரு புள்ளியில் இருந்து அடுத்த புள்ளிக்கு செல்ல எடுத்துக் கொள்ளும் காலம். 


ஒன்றுமே இல்லை, ஒரு சலனமும் இல்லை, என்றால் காலம் என்ற ஒன்று இருக்க முடியாது என்பது அவர்கள் வாதம். 


ஆனால், சாங்கிய தத்துவத்தில் என்ன சொல்கிறார்கள் என்றால், முதலில் இந்த பேரண்டம் வெளிப்படாமல் இருந்தது. பின் அது வெளிப்பட்டது என்கிறார்கள். 


உதாரணமாக, நீங்கள் பாட்டு கற்றுக் கொள்ளப் போகிறீர்கள். உங்களுக்குள் உள்ள சங்கீதம் வெளிப்படவில்லை. உள்ளே இருக்கிறது. அது வெளிப்படாத விதமாக இருக்கிறது. 


விதைக்குள்ளே மரம் வெளிப்படாமல் இருக்கிறது. சாத்திய கூறுகள் இருக்கின்றன. ஆனால், அது வெளிப்படவில்லை. 


மரத்தைப் பார்த்தால், இவ்வளவு பெரிய மரம், அந்த சின்ன விதைக்குள் இருந்தது என்று எப்படி நம்புவது? 


இந்த உலகம் அனைத்தும் முதலில் ஒரு வெளிப்படாத நிலையில் இருந்தது. உலகம் என்று சொன்னால் ஐந்து பூதங்களும், நாமும், நம் அறிவும் அங்கிருந்து தான் வந்தது. 


அந்த நிலைக்கு, மூலப் பிரகிருதி என்று பெயர். 


பிர என்றால் முன்னது. 

கிருதி என்றால் படைப்பு.


படைப்புக்கு முந்தைய நிலை. பிரசவம் என்றால் பிள்ளை வெளி வருதற்கு முந்தைய நிலை. தயாராக இருக்கிறது. ஆனால் பிள்ளை இன்னும் வெளி வரவில்லை. 


அது போல, இந்த உலகம் பிறக்க தயாராக இருக்கிறது. ஆனால் இன்னும் தோன்றவில்லை. 


இதுதான் ஆதி. இதுதான் தொடக்கம். இங்கிருந்துதான் இருபத்து ஐந்து தத்துவங்களும் பிறக்கின்றன. 


பிறப்பதற்கு முந்தைய நிலையில் இருந்து இன்று வரை இந்த உலகம் எப்படி பரிணாம வளர்ச்சி பெற்றது என்பதை சாங்கிய தத்துவம் விளக்குகிறது. 


இந்த மூலப் பிரகிருதியில் இருந்து பிரகிருதி தோன்றுகிறது. அதுதான் முதல் தத்துவம். 


மேலும் வளரும் 


(பின் குறிப்பு - திருக்குறளுக்கு இவ்வளவு விரிவு தேவையா என்று ஆயாசமாக இருந்தால், இங்கே நிறுத்திவிட்டு அடுத்த குறளுக்குப் போய் விடலாம். என்ன சொல்கிறீர்கள்?)


6 comments:

  1. இல்லை அண்ணா ...இல்லை தொடர்க
    தயவு கூர்ந்து தொடருங்கள் ...
    நன்றி ...

    ReplyDelete
  2. அண்ணா நீங்கள் எப்போது கட்டுரை போடுவீர்கள் எனக் காத்துள்ளோம் ...
    விடலாமா என்றவுடன் பதற்றம் வந்து விட்டது ...

    நல்ல பணி ...நாங்கள் காத்துள்ளோம் ...
    வணக்கம்.

    ReplyDelete
  3. தயை கூர்ந்து தொடருங்கள்! சாங்கிய தத்துவத்தை பற்றி அறிய எங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

    ReplyDelete
  4. ஐயா, நான் எங்கும் இதுவரை படிக்காத விளக்கத்தை தந்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களின் எல்லா கட்டுரைகளையும் தவறாது படிப்பவன் நான்.

    சுருக்கமாக வேண்டுபவர்களுக்குத்தான் மு.வ இருக்கின்றாரே. அவர்கள் அதைப் படித்துக் கொள்ளட்டும்.

    மேலும் சாங்கிய யோகததைப் பற்றி அறிய ஆவலாக உள்ளேன். தயவுசெய்து தொடருங்கள் ஐயா.

    ReplyDelete
  5. சாங்கியோகத்தின் தமிழ் விளக்கம் நீங்க கொடுக்கணும். மிகவும் அருமை

    ReplyDelete
  6. சாங்கிய யோகம் பற்றிய விளக்கம் நிச்சயம் தொடர வேண்டுமென்று நானும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் நண்பரே. நன்றி

    ReplyDelete