Tuesday, May 18, 2021

இராமானுசர் நூற்றந்தாதி - உனக்கு இது இழுக்கு இல்லையா?

இராமானுசர் நூற்றந்தாதி -  உனக்கு இது இழுக்கு இல்லையா?


கடல் பரந்து கிடக்கிறது. அதில் இருந்து கொஞ்சம் நீர் முகந்து கொண்டால், கடலின் அளவு குறைந்தா போய் விடப் போகிறது?  எவ்வளவு முகந்தாலும் கடலின் அளவு குறையாது.  அது போல

இராமானுசரே உம்முடைய கருணை கடல் போன்றது. எவ்வளவு பேருக்கு எவ்வளவு கொடுத்தாலும் குறையாது. 


ஆனால்  


கடல் கொடுக்கும், ஆனால் கொடுப்பதனால் அந்த கடலின் பெருமை ஒன்றும் பெரிதாகி விடுவது இல்லை. ஆனால், இராமானுசரே, கொடுக்க கொடுக்க உம் கருணையின் பிரகாசம் மேலும் மேலும் ஒளி விட்டுக் கொண்டே இருக்கிறது. 

அவ்வளவு பெருமை வாய்ந்த கருணைக் கடலான நீர் வினைகளால் பீடிக்கப் பட்ட என் மனத்துள் வந்து புகுந்தாய். நான் எவ்வளவு கீழானவன். என் மனதில் வந்து புகுந்தால் அதனால் உனக்கு ஒரு இழுக்கு வந்து விடாதா என்று என் நெஞ்சு கவலைப் படுகிறது என்கிறார் திருவரங்கத்து அமுதனார். 


பாடல் 


கொள்ளக் குறைவு அற்று இலங்கி*  கொழுந்து விட்டு ஓங்கிய உன் 

வள்ளல் தனத்தினால்*  வல்வினையேன் மனம் நீ புகுந்தாய்* 

வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று* 

தள்ளுற்று இரங்கும்*  இராமாநுச! என் தனி நெஞ்சமே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_18.html


(please click the above link to continue reading)


கொள்ளக் குறைவு அற்று = எடுக்க எடுக்க குறையாமல் 


இலங்கி = விளங்கி 


கொழுந்து விட்டு ஓங்கிய = சுடர் விட்டுப் பிரகாசிக்கும் 


உன்  = உன் 


வள்ளல் தனத்தினால் = வள்ளல் தன்மையால் 


வல்வினையேன் = கொடிய வினைகள் உள்ள என் 


மனம் நீ புகுந்தாய் = மனத்தில் நீ புகுந்தாய் 


வெள்ளைச் சுடர் விடும் = களங்கம் ஏதும் இன்றி சுடர் விடும் 


உன் பெரு மேன்மைக்கு = உன்னுடைய பெரிய புகழுக்கு 


இழுக்கு இது என்று = இது இழுக்கு என்று 


தள்ளுற்று இரங்கும் =  தவித்தபடி ஏங்கும் 


இராமாநுச! = இராமாநுச!


என் தனி நெஞ்சமே! = துணை அற்ற என் தனி நெஞ்சமே 




4 comments:

  1. இருட்டை விளக்கும் பேரொளிக்கு ஏதேனும் மாசு ஏற்படுமா? அளவு கடந்த பக்தியினாலும் அன்பினாலும்
    ஏற்படும் அச்சம் தானோ?

    ReplyDelete
  2. வணக்கம் அண்ணா ...

    திருக்குறள் நீத்தார் பெருமை விளக்கம் காண மிக ஆவலாக காத்துள்ளேன் ....

    இப்போதைய பாடல்களையும் அனுபவிக்கிறேன் ...

    வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. புரிகிறது. தாமதத்திற்கு மன்னிக்கவும். சுவை ஒளி ...என்ற அந்தக் குறளின் விரிவும், ஆழமும் மிகப் பெரியதாக இருக்கிறது. எப்படி சொல்லுவது என்று மலைத்து நிற்கிறேன். எனக்கும் முழுவதும் புரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக புரிகிறது. எப்படி சொல்லி விளங்க வைப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறேன். படிக்க படிக்க கொஞ்சம் தெளிவும், நிறைய குழப்பமும் வருகிறது. என்ன செய்ய? ஓரிரண்டு நாட்களில் எழுதத் தலைப்படுவேன்.

      Delete
  3. "நீ என் உள்ளத்தில் புகுந்தால் உனக்கு இழுக்கு வந்துவிடுமோ என்று என் மனம் பதைக்கிறது" மனத்தைத் தொடும் கருத்து. நன்றி.

    ReplyDelete