Saturday, May 1, 2021

நல்வழி - விண்டாரைக் கொண்டாடும் வீடு

 

நல்வழி - விண்டாரைக்  கொண்டாடும் வீடு 



தானம் செய்யுங்கள். இந்த உடம்பு நிரந்தரம் என்று எண்ணி அதற்காக எப்போதும் உங்கள் நேரத்தையும் செல்வத்தையும் செலவழிக்காதீர்கள்.

வாழ்வில் மிகப் பெரிய வலி எது தெரியுமா - மரண வலி. மரணம் வரும் நேரம் இந்த உடல் அனுபவிக்கும் வலி. மூச்சு திணறும். இதயம் துடிக்க தவிக்கும். நாக்கு குழறும். நினவு வந்து வந்து போகும். கண் மங்கும்.

அது எல்லாவற்றிலும் பெரிய வலி. 

அந்த வலியில் இருந்து நீங்கள் துன்பப் படாமல் இருக்க வேண்டுமா ?

இந்த பாடலை படியுங்கள். அதில் சொன்ன மாதிரி செய்யுங்கள்.

பாடல்
 

இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.

பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post.html

(pl click the above link to continue reading)



இடும்பைக்கு = துன்பத்திற்கு

இடும்பை = இட்டு  வைக்கும் பை. இந்த உடம்பு என்பது துன்பங்களால் நிறைந்த பை. 

இயலுடம்பி தன்றே = இயல்பான இந்த உடல் அல்லவா ?

இடும்பொய்யை = இந்த உடம்பில் நிறைய பொய்களை இட்டு வைத்து இருக்கிறோம். அவற்றை 

மெய்யென் றிராதே = மெய் என்று இருக்காதே

இடுங் = இடுங்கள். தானம் இடுங்கள்

கடுக = விரைந்து. உடனே

உண்டாயி னுண்டாகும் = அந்த தானம் செய்யும் குணம் உங்களுக்கு உண்டானால், உங்களுக்கு உண்டாகும். எது ?

ஊழிற் பெருவலிநோய் = விதியால் வரும் பெரிய வலியான நோய். அது என்ன நோய்?  மரணம் என்கின்ற நோய்.

விண்டாரைக் = வென்றவர்கள், அதை விட்டு விலகியவர்கள்

கொண்டாடும் வீடு = கொண்டாடும் வீடு பேறு உங்களுக்கு உண்டாகும்.

தமிழ் எப்படி விளையாடுகிறது என்று பாருங்கள்

இடும்பை = துன்பம்
இடும் பை = இட்டு வைக்கும் பை
இடும் பொய்யை = பொய்யை இட்டு வைக்கும் 
இடுங்கள் = தானம் இடுங்கள் 

உண்டாயின் உண்டாகும் = தானம் செய்யும் குணம் உண்டானால் வீடு பேறு  உண்டாகும் 

தானம் இடுங்கள். மரண வலியை வெல்லுங்கள். 


தானம் செய்தால் மரணம் வராதா?

வரும். மரணம் வரும்.  ஆனால், அந்த மரண தருணத்திலும் "இருந்த வரை நிறைய பேருக்கு நல்லது செய்தோம். நம்மால் நாலு பேர் மகிழ்ந்தார்கள். சில பேர் கண்ணீரையாவது துடைத்தேன்" என்ற திருப்தி இருக்கும், மனதில் ஒரு நிம்மதி இருக்கும், ஒரு சாந்தி பிறக்கும். 

இல்லை என்றால், "வாழ் நாள் எல்லாம் என்ன செய்தேன்? என்னால் யாருக்கு என்ன பயன். பணம் சேர்த்தேன், கொஞ்சம் செலவழித்தேன், மீதி எல்லாம் சொத்தாக அங்கங்கே இருக்கிறது...இதுக்கா இந்தப் பாடு பட்டேன்...காலம் எல்லாம் இப்படி வீணாகி விட்டதே " என்று மரண வலியோடு மன வலியும் சேர்ந்து கொள்ளும். 

சாகும் போதாவது சந்தோஷமாக இருக்க வேண்டாமா? 

தானம் செய்யுங்கள்...விண்டாரைக் கொண்டாடும் வீடு உங்களையும் கொண்டாடும். 

1 comment:

  1. தமிழ் விளையாட்டுத்தான் செய்கிறது!

    "மரண வலி வேண்டாமென்றால், இறைவனை பஜனை செய்யுங்கள்" என்று கூறாமல், சமயக் கருத்தின்றி எழுப்பப்படட பாடல் என்பதால் இன்னும் அருமை!

    ReplyDelete