Sunday, May 2, 2021

திருக்குறள் - நீத்தார் பெருமை - பனுவல் துணிவு - பாகம் 2

 

திருக்குறள் - நீத்தார் பெருமை - பனுவல் துணிவு - பாகம் 2

இதன் முதல் பாகத்தை இங்கே காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1.html


பாடல் 

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2.html


(please click the above link to continue reading)



ஒழுக்கத்து நீத்தார் = ஒழுக்கத்தின் கண் நின்று நீத்தாரது 

பெருமை = பெருமை 

விழுப்பத்து வேண்டும் = பெருமையை விரும்பும், உயர்ந்தவற்றை விரும்பும் 

பனுவல் = நூல்களின் 

துணிவு. = முடிவு 


ஒழுக்கத்தின் கண் நின்று நீத்தாரது பெருமையே எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று உயர்ந்தவற்றைப் பற்றி பேசும் அனைத்து நூல்களும் உறுதியாகச் சொல்கின்றன. 


பார்க்க மிக சாதாரண குறள் போல் தெரியும். 


அதற்கு பரிமேல் அழகர் செய்யும் உரை, நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. 


"ஒழுக்கத்து நீத்தார்" - என்றால் என்ன? ஒழுக்கத்தை விட்டு நீங்கியவர்கள் என்று பொருள் கொண்டால் விபரீதமாகிவிடும். ஒழுக்கம் இல்லாமல் இருப்பவர்கள் என்று பொருள் வந்து விடும். அது தவறு. 


பரிமேல் அழகர் கூறுகிறார் "தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை" என்று. 


மேலும் 


"தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக"


என்று உரை செய்கிறார். 


இங்கே நாம் நிறுத்தி, இதை ஆழுந்து புரிந்து கொள்ள வேண்டும். 


வர்ணம், நிலை என்பது பற்றி முன்பும் பல முறை சிந்தித்து இருக்கிறோம். 


வர்ணம் என்பது - சூத்திரன், வைசியன், சத்ரியன், அந்தணன் என்ற நான்கு. 


நிலை என்பது - பிரம்மச்சரியம், இல்லறம், வானப்ரஸ்தம், சன்யாசம் என்ற நான்கு. 


இதில் ஒவ்வொருவரும், ஏதோ ஒரு வர்ணத்திலும், ஏதோ ஒரு நிலையிலும் இருப்போம். அந்த வர்ணத்துக்கும், நிலைக்கும் சொல்லப்பட்ட ஒழுக்கம் என்ன என்பதை அறிந்து அதை கடை பிடிக்க வேண்டும். 


ஒரே ஒரு உதாரணம் பார்போம். மீதியை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். 


பிரம்மச்சாரி, சத்ரியன் என்றால் அவன் அரச நீதி, போர் கலை இவற்றை கற்க வேண்டும் என்பது அவனுக்கு விதித்த ஒழுக்கம். 


இப்படி ஒவ்வொரு வர்ணத்துக்கும், நிலைக்கும் உரிய ஒழுக்கத்தை சொல்லிக் கொண்டே போகலாம். 


இந்த ஒழுக நிலைகளில் நின்று பின் அவற்றை விட்டும் நீங்க வேண்டும். 


அப்படி நீங்கினால் என்ன ஆகும் என்று பரிமேலழகர் கூறுகிறார்.  அவர் சொல்லாவிட்டால், நமக்கு இது ஒரு காலத்திலும் புரியாது....


"

உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக 

அறம் வளரும்; 

அறம் வளரப் பாவம் தேயும்; 

பாவம் தேய அறியாமை நீங்கும் ; 

அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும் அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும் ; 

அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; 

அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன்இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; 

அஃது உண்டாக,மெய்யுணர்வு பிறந்து புறப்பற்று ஆகிய 'எனது' என்பதும், அகப்பற்று ஆகிய 'யான்' என்பதும் விடும். 

ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம் முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க.

"


அவரவர் தங்கள் ஒழுக்கங்களை தவறாது கடை பிடித்தால் அறம் வளரும்.  அறம் வளராமல் போவதற்கு காரணம், யாரும் தங்களுக்கு உரிய ஒழுக்கங்களை கடை பிடிக்காமல் இருப்பது தான். ஒழுக்கம் தவறும் போது அறம் தேய்கிறது. 


அறம் வளர்ந்தால் பாவம் தேயும்.  அற வழியில் நிற்கும் போது, பாவம் செய்வது நிகழாமல் போகும். 


பாவம் நீங்கினால், அறியாமை நீங்கும். 


அறியாமை நீங்கினால் எது நிரந்தரமானது, எது நிலையற்றது என்ற அறிவு தோன்றும். நிலை இல்லாதவற்றை நிலை என்று நினைத்து அவற்றின் பின்னே போகிறோம். செல்வம், இளமை இதெல்லாம் நிலையானது என்று நினைத்து அவற்றின் பின்னே போகிறோம். சோப்பு குமிழியை துரத்தும் குழந்தைகளைப் போல. 


அந்த அறிவு தோன்றினால், இம்மை மறுமை இவற்றில் உண்டாகும் இன்பங்களின் மேல் உள்ள பற்றும், துன்பத்தின் மேல் உள்ள வெறுப்பும் போகும். மேலும், பிறவியினால் வரும் துன்பங்களும் தெரிய வரும். 


இம்மை, மறுமை, பிறவித் துன்பங்கள் போன்றவற்றின் உண்மயான நிலை தோன்றிய பின், அவற்றில் இருந்து விடுபட்டு வீடு பேறு அடைய வேண்டும் என்ற ஆசை வரும். 


இங்கு உள்ளதை எல்லாம் விட்டு விட்டு வா, வீடு பேறு தருகிறேன் என்றால் யார் போவார்கள். நாம் இந்த இன்பங்களை மிக விரும்புகிறோம். அறியாமை நீங்கினால் தான் வீடு பேற்றின் மேல் ஆசை வரும். 


வீடு பேறு அடைய ஆசை வந்தால், அதற்கான யோக முயற்சிகள் போன்றவை செய்யத் தோன்றும்.  அது மட்டும், வீடு பேறுக்கு உதாவத பயன் இல் முயற்சிகளை விட்டு விடத் தோன்றும். (whatsapp செய்திகளை படிப்பது போன்றவை). இருக்கும் ஒவ்வொரு நொடியும் வீடு பேறு அடைவதற்கு முயற்சி செய்வோம். 


அவ்வாறு யோக முயற்சியில் ஈடு படும் போது, நான் எனது என்ற அக புற பற்றுகளை விட்டு விடுவோம். 


ஒரு escalator ல் போவது போல, ஒரு லிப்ட் ல் போவது போல, மேலே ஏறி நிற்க வேண்டும். அவ்வளவு தான். அது நம்மை கொண்டு சேர்த்து விடுவது போல, நமக்கு உரிய ஒழுக்கங்களை நாம் கடைபிடித்தாலே வீடு பேற்றினை அடைந்து விடுவோம். 


ஒரு ஊருக்குப் போகிறோம் என்றால், அந்த ஊருக்குப் போகும் வண்டியில் ஏறி உட்கார்ந்தால் போதும். அந்த வண்டி நம்மை சேர வேண்டிய இடத்தில் கொண்டு சேர்த்து விடும். 


அது போல, தத்தமக்கு உரிய ஒழுக்கங்களை கடை பிடித்தாலே வீடு பேறு என்ற ஊருக்குப் போய் சேர்ந்து விடுவோம். 


பனுவல் என்றால் நூல். உலகில் உள்ள பல்வேறுபட்ட நூல்களும் இதைத்தான் சொல்கின்றன என்கிறார். 


ஒழுக்கத்தின் கண் நின்று நீத்தார் கட்டாயம் வீடு பேறு அடைவார் என்பதால் அவருடைய பெருமையே அனைத்திலும் உயர்ந்தது என்கிறார். 


வள்ளுவரும், பரிமேலழகரும் சொல்ல வந்த செய்தியை முழுமையாக சொல்லி விட்டேனா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. 


சரியாக புரியவில்லை என்றால், உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். முடிந்த வரை மேலும் எளிமையாக சொல்ல முயற்சி செய்கிறேன். 











7 comments:

  1. சரிதான் அண்ணா .....புரிகிறது ..
    வணக்கம்,,

    ReplyDelete
  2. தங்களது பெயரைக் கட்டுரையின் கடைசியில் தெரிவிக்கலாமே!
    சித்தானந்தம்

    ReplyDelete
    Replies
    1. I replied to the e mail ID you posted. The mail bounced. Can you please check the spelling and post the right e mail id. Thanks.

      Delete
  3. அண்ணா என் மெயில் Id ...
    arasu20052000@yahoo.com.
    வணக்கம்.

    ReplyDelete
  4. வள்ளுவர் எழுதியிருப்பது 99% அருமை, 1% பேத்தல் என்று கொள்ளலாம். அந்த 1% போத்தலில் இந்த வருணாசிரம தர்மம் அடங்கும். அதற்காக, திருக்குறளை முழுவதும் தூக்கி எறியவேண்டும் என்று நான் சொன்னவில்லை. ஆனால், திருக்குறளை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவும் வேண்டாம்.

    ReplyDelete
  5. Generally I do not reply to the reader's opinion on the blog. Varnasiramam is an inescapable process. Even today, we follow it in some form or other. Doctors, lawyers, CAs have their own rules. Why? Why not have simple Criminal and Civil Procedure code. Why to have a separate rules to regulate each profession, separately for marriage, inheritance, divorce etc. 2000 years before the segment was less. Today the numbers have increased so the rules expanded. The meta data remains the same.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, யார் வேண்டுமானாலும் மருத்துவரோ, வழக்கறிஞரோ ஆகலாம். ஆனால், 1. வருணாசிரமத்தில் ஒருவன் ஒரு வர்ணத்தில் பிறந்துவிட்டால், அதே தொழில்தான் செய்ய வேண்டும் என்பதே கொடுமை. 2. பிற்காலத்தில் ஏற்பட்ட சாதி பிரிவினைக்கு வருணாசிரமம் அடிப்படை ஆகும் என்பதால், அந்த அடிப்படையையே தூக்கி எறியவேண்டும் - வள்ளுவரே சொன்னாலும் கூட!

      Delete