Tuesday, May 4, 2021

திருக்குறள் - நீத்தார் பெருமை - அறம் பூண்டார் பெருமை

 திருக்குறள் - நீத்தார் பெருமை - அறம் பூண்டார் பெருமை 


இந்த வாழ்கை இன்பமானதா? ஆம், என்றால் பின் எதற்கு வீடு பேறு? இங்கேயே இருக்கலாம். இறந்தாலும் மீண்டும் இங்கேயே வந்து பிறக்க வரம் கேட்கலாமே. 


இல்லை, இந்த வாழக்கை இன்பமானது அல்ல. துன்பம் நிறைந்தது என்று நினைத்தால், எதற்கு வாழ வேண்டும்?


சில சமயம் இன்பமாக இருக்கிறது. சில சமயம் துன்பமாக இருக்கிறது. மாறாக, வீடு பேறு, அது இன்பமானது என்று சொல்கிறார்கள் ஆனால் அது நமக்குத் தெரியாது. எனவே, தெரியாத ஒன்றிற்காக, தெரிந்த ஒன்றை விடுவதா என்ற குழப்பம் இருக்கும். 


இதில் நிறைய குழப்பம் இருக்கிறது. 


இந்த இரண்டின் தன்மைகளை தெரிந்து கொண்டு, வீடு பேறு அடைய துறவறம் மேற்கொண்டவர்களின் பெருமையே பெரிய பெருமை என்கிறார். 


பாடல் 



இருமை ஆராய்ந்து அறிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_4.html


(Please click the above link to continue reading)


இருமை  = இரண்டின் 


வகைதெரிந்து = தன்மை தெரிந்து கொண்டு 


ஈண்டு = இங்கு 


அறம் பூண்டார் = அறத்தினை மேற் கொண்டவர்களின் 


பெருமை  = பெருமையே 


பிறங்கிற்று உலகு = பெரியது உலகில் 


இருமை என்றால் என்ன என்று பரிமேலழகர் கூறுகிறார். நாம் நினைப்போம் இருமை என்றால் இரண்டின் தன்மை என்று...அதாவது இன்பம், துன்பம்; இரவு பகல்; பாவம் புண்ணியம்; நல்லது கெட்டது என்று. அப்படி அல்ல 


இருமை என்றால் "பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை"  என்று உரை செய்கிறார். 


பிறப்பினால் வரும் துன்பத்தையும், வீடு பேற்றினால் வரும் இன்பத்தையும் 


வகைதெரிந்து =  ஆராய்ந்து அறிந்து


சட்டென்று புரியாது. எது இன்பம், எது துன்பம் என்று தெரியாது. அதை ஆராய்ந்து அறிந்து. 


நம்மில் பல பேருக்கு எது சரி எது தவறு என்று தெரியும். தெரிந்தும், சரியானதை செய்யாமல், தவறானதை செய்து கொண்டிருப்போம். 


அப்படி இல்லாமல், 


"ஈண்டுஅறம் பூண்டார்" - ஆராய்ந்து அறிந்து பின் அவ்வழியே செல்ல அற வழியை மேற்கொண்டாறது. தெரிந்தால் மட்டும் போதாது, அந்த வழியிலேயே செல்ல வேண்டும். 


அது என்ன அறம் என்று வள்ளுவர் சொல்லவில்லை. சும்மா அறம் என்று சொல்லிவிட்டு போய் விட்டார். பரிமேலழகர் உரையில் "துறவறத்தில்" ஈடு பட்டார் என்று விளக்கம் செய்கிறார். 


"பெருமை பிறங்கிற்று உலகு". அப்படி வீடு பேறு நோக்கி துறவறத்தை மேற்கொண்டவர்களின் பெருமையே உயர்ந்தது என்கிறார். 


இதில் "ஏகாரம்" விகாரத்தால் தொக்கியது. 


இராமன் வென்றான் என்றால், இராமன் வென்றான் என்று தெரியும். இராமன் மட்டும் தான் வென்றானா என்று தெரியாது. 


இராமனே வென்றான் என்றால் அவன் மட்டும் தான் வென்றான் என்று பொருள் சொல்ல முடியும். 


ஆதி பகவன் முதற்றே உலகு என்று கூறினார் போல. அவர் மட்டும் தான் முதல். 


அது போல "பெருமையே பிறங்கிற்று உலகு" என்று ஒரு "யே" சேர்த்து இருக்க வேண்டும். அது தொக்கி (மறைந்து) நிற்கிறது என்று உரை செய்கிறார். 


நம் சமுதாயம் யாருக்கு முதலிடம் கொடுத்தது?


பணக்காரனுக்கா, படித்தவனுக்கா என்றால் படித்தவனுக்கே. 


படித்தவனுக்கா, ஒழுக்கம் நிறைந்தவனுக்காக என்று கேட்டால் ஒழுக்கம் உள்ளவேனுக்கே. இராவணன் மெத்தப் படித்தவன். பெரிய செல்வந்தன். ஒழுக்கம் இல்லை என்றால் அவனை நம் உலகம் கொண்டாடாது. 


பணக்காரன், படித்தவன், ஒழுக்கம் உடையவன், அரசன், என்று எத்தனை பேரைக் கொண்டு வந்து வைத்தாலும், எல்லோரிலும் பெரியவன் ஒரு துறவியே என்று நம் சமுதாயம் கொண்டாடியது. 


நம் சமுதாயம் மட்டும் அல்ல, அத்தனை நாடும், மதமும், சமூகங்களும் துறவிக்குத் தான் முதலிடம் தந்து வந்திருக்கின்றன. 


சில பேர் வாழ்கை வெறுத்துப் போய் துறவி ஆவார்கள், சில பேர் துறவில் உள்ள மரியாதைக்காக துறவு மேற்கொள்வார்கள் .


அதெல்லாம் வள்ளுவர் கணக்கில் சேர்க்கவில்லை. 


பிறவி வீடு பேறு இந்த இரண்டின் துன்ப இன்பங்களை ஆராய்ந்து அறிந்து, வீடு பேற்றுக்கான துறவறத்தை மேற்கொண்டவர்களையே துறவி என்று வள்ளுவர் கொள்கிறார். 


எனக்கு சர்க்கரை வியாதி வந்ததால் நான் சர்க்கரையை விட்டு விட்டேன். அதற்குப் பெயர்  "சர்க்கரையை துறந்து விடுதல்" அல்ல. 


ஆராய்ந்து அறிந்து, அந்த அறிவின் காரணமாக துறவு மேற்கொள்ள வேண்டும். 


எவ்வளவு நுணுக்கமான குறள்....






2 comments:

  1. Sir,

    Your writings are very good. You should also mention your name at the end of the essays.

    Chittanandam

    ReplyDelete
  2. மிக ஆழமான குறள்.

    முன்பே எழுதியது போல, பரிமேலழகர் உரையைப் படித்தால், குறளின் மெருகு இன்னும் கொஞ்சம் ஏறத்தான் செய்கிறது!

    ReplyDelete