Saturday, May 8, 2021

நல்வழி - இட்டு உண்டு இரும்

நல்வழி - இட்டு உண்டு இரும் 


கோவிட் வைரஸ் நாளும் வேகமாக பரவிக் கொண்டே இருக்கிறது.  இறப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. 


அங்கொன்றும் இங்கொன்றுமாக யாரோ இறந்தார்கள் என்று கேள்விப் பட்டது போக, அந்த துக்கச் செய்தி நமக்கு அருகில் வந்து கொண்டே இருக்கிறது. அங்கே ஒரு நண்பர், இங்கே ஒரு உறவினர் என்று நமக்கு அருகில் வருகிறது. 


நம்மைச் சார்ந்தவர்கள் நம்மை விட்டுப் போகும் போது, அது செய்தி அல்ல. துக்கம் நெஞ்சை அறுக்கிறது. 


என்ன ஆறுதல் சொல்ல முடியும்?  ஈடு செய்ய முடியாத இழப்புகள் அல்லவா அவை. 


உடல் தளர்ந்து, மனம் தளர்ந்து போய் இருக்கும் அந்த சமயத்தில் ஔவை வாழ்வின் உண்மையை சொல்லிவிட்டுப் போகிறாள். 


உண்மை மட்டும் தான் நம்மை துக்கத்தில் இருந்து காக்கும். 


சத்தியத்திற்கு ஒரு பலம் இருக்கிறது. 


"எத்தனை வருடம் அழுது புரண்டாலும், இறந்து போனவர்கள் திரும்பி வரப் போவது இல்லை.  நாம் துக்கப் படுவது, அழுவதும் ஏதோ நமக்கு அது வராது என்ற நினைப்பில். நமக்கும் அதே வழிதான்.  இருக்கும் வரை, இதுக்கும் நமக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை பசித்தவருக்கு கொஞ்சம் உணவு அளித்து, நீங்களும் உண்டு, அமைதியாக இருங்கள்"


என்கிறாள். 


பாடல் 




ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்

    மாண்டார் வருவரோ மாநிலத்தீர்-வேண்டா

    நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்

    எமக்கென்னென் றிட்டுண் டிரும்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_56.html


(please click the above link to continue reading)


ஆண்டாண்டு தோறும்  = பலப் பல ஆண்டுகளாக 

அழுது புரண்டாலும் = அழுது புரண்டாலும் 

மாண்டார் = இறந்தவர்கள் 

வருவரோ = திரும்பி உயிரோடு வருவார்களா?  மாட்டார்கள் 

மாநிலத்தீர் = இந்த பெரிய உலகில் உள்ளவர்களே 

வேண்டா = அழ வேண்டாம் 

நமக்கும் = நமக்கும் 

அதுவழியே = அது தான் வழி 

நாம்போம் அளவும் = நாம் போகிற வரை 


எமக்கென்னென் றிட்டுண் டிரும். = எமக்கு என்ன என்று இட்டு உண்டு இரும்.


நம்மால் ஆவது என்ன ? ஒன்றும் இல்லை என்று உணர்ந்து, நாலு பேருக்கு பசிக்கு அன்னம் இட்டு, நீங்களும் உண்டு, பேசாமல் அமைதியாக இருங்கள் என்கிறாள். 


துக்கத்தை போக்க, அதையே நினைத்துக் கொண்டு இருக்காமல், மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்கிறாள் ஔவை. 


இது என்ன புதுசா இருக்கே. நாமே துக்கத்தில் இருக்கிறோம். நாம் எங்கிருந்து மற்றவர்களுக்கு  உதவி செய்வது? என்று நம் மனதில் கேள்வி எழலாம். 


நாம் துக்கத்தில் இருக்கும் போது, நம்மை விட பெரிய துக்கத்தில் இருப்பவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்வதன் மூலம், நம்மை அறியாமலேயே நமக்குள் ஒரு தைரியம் பிறக்கும். நம்மால் இந்த நிலையில் கூட மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்ற தைரியமும் தன்னம்பிக்கையும் துக்கத்தை விரட்டி அடிக்கும். 


மேலும், துக்கம் யாருக்குத்தான் இல்லை. எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் துக்கம் இருக்கிறது என்ற யதார்த்தம் மனதில் படும். ஏதோ நமக்கு மட்டும் வந்து விடவில்லை ...இது எல்லோருக்கும் வரும் ஒன்று தான் என்ற எண்ணம் மனதை கொஞ்சம் மென்மை படுத்தும். 


கிழவி சொல்கிறாள். தப்பாவா இருக்கும்?




2 comments:

  1. மிகவும் அருமையான பாடல்!

    ReplyDelete
  2. ஆண்டு, ஆண்டு தோறும் - அன்று இறந்த போது, புதைத்த/எரித்த இடமாகிய மயானத்திற்குச் (ஆண்டு), ஆண்டுதோறும் சென்று, என்றும் பொருள் கொள்ளலாம் ?

    ReplyDelete