Tuesday, May 11, 2021

திருக்குறள் - பெரியரும் சிறியரும் - பாகம் 3

  

திருக்குறள் - பெரியரும் சிறியரும் - பாகம் 3 


நீத்தார் பெருமை சொல்லிக் கொண்டு வந்த வள்ளுவர், நீத்தார் செயற்கரிய செய்வார் என்றும் மற்றவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்றும் கூறுகிறார். 


பாடல் 


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/3.html


(please click the above link to continue reading)


செயற்கரிய = செய்வதற்கு கடினமான 


செய்வார் = (செயல்களை) செய்வார் 


பெரியர் = பெரியவர்கள் 


சிறியர் = சிறியர் 


செயற்கரிய = செய்வதற்கு கடினமான செயல்களை 


செய்கலா தார் = செய்ய மாட்டார்கள் 


அரிய செயல்கள் என்று பரிமேலழகர் கூறுவது "இயமம், நியமம் முதலிய எண்வகை யோக உறுப்புகளை "


இதில் 


இயமம்

நியமம் 

ஆசனம் 

பிரணாயாமம் 


என்ற நான்கையும் நேற்று சிந்தித்தோம். 


இனி வரும் நான்கும் தான் உண்மையிலேயே யோக முயற்சிகள்.  முதல் நான்கும் யோகத்திர்கான முன்னேற்பாடுகள்.


அடுத்த நான்கு  அங்கங்கள் 


பிரத்தியாகாரம் 

தாரண

தியானம் 

சமாதி 


நம் மனம் எப்போதும் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். ஒன்றில் இருந்து மற்றதற்கு தாவிக் கொண்டே இருக்கும். இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால், நல்லதும் கெட்டதும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். 


ஒருவருக்கு எப்போதும் நல்ல எண்ணங்களே தோன்றும் என்று கூற முடியாது. அதே போல் ஒருவருக்கு எப்போதும் தீய எண்ணங்களே தோன்றும் என்றும் கூற முடியாது. 


ஆனால், ஒரு எண்ணமும் இல்லாமல் மனம் இருக்காது. 


எனவே, பதஞ்சலி கூறுகிறார்,  ஒரு கெட்ட எண்ணம் வந்தால், உடனே ஒரு நல்ல எண்ணத்தை கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் மனம் அந்த கெட்ட எண்ணத்தின் பின்னேயே போய் கொண்டிருக்கும். 


யார் மேலாவது கோபம் அல்லது பொறாமை வந்தால், அவரின் நல்ல குணங்களை பற்றி சிந்திக்க வேண்டும், அவர் நமக்கு செய்த நன்மைகளை சிந்திக்க வேண்டும். அது முடியாவிட்டால், வேறு யாராவது நமக்கு செய்த நன்மைகளை சிந்திக்க வேண்டும். எவ்வளவோ பேர் நமக்கு நல்லது செய்திருக்கிறார்கள். இவன் ஒருவன் நமக்கு ஒரு தீங்கு செய்கிறான், சரி விடு நல்லதை நினைப்போம் என்று மனதை தீய எண்ணங்களில் இருந்து நல்லவற்றிற்கு மாற்ற வேண்டும். 


அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும். கணவன் மனைவி சண்டையில், ஏதோ ஒரு காரணமாக பேச்சு முத்தி, சண்டை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். "இவள் எனக்காக எவ்வளவு செய்திருக்கிறாள்...பாவம் என்னை நம்பி வந்தவள்" என்று நினைக்கும் போது கோபம் தணியும். அதே போல், "...பாவம் இந்த முனுஷன் இந்த குடும்பத்துக்காகா எவ்வளவு தியாகம் செய்கிறார்" என்று அவர் செய்யும் நல்லவற்றை நினைக்க வேண்டும். 


இதற்கு பிரத்தியாகாரம் என்று பெயர். 


அடுத்தது, தாரணை.  


இப்படி கெட்ட எண்ணங்களை நல்ல எண்ணங்களுக்கு மாற்றிக் கொண்டே இருந்தால், நாளடைவில் மனம் நல்லவற்றையே சிந்திக்கத் தலைப்படும். மனைவி மேல் கோபம் வந்தவுடன், உடனேயே அவளின் நல்ல குணங்கள் பற்றி சிந்திக்கப் பழகி விட்டால், எப்போதும் அவள் நல்ல குணங்களே தோன்றிக் கொண்டு இருக்கும்.  இது அனைத்து விதமான கெட்ட / நல்ல எண்ணங்களுக்கும் பொருந்தும். 


ஆனால், இப்படி நல்லது கெட்டது என்று மாறி மாறி போகும் மனதை நல்லதில் மட்டுமே இலயிக்க விடுவது தாரணை என்று பெயர். தாரணை என்றால் ஒழுக்கு. ஒரு பாத்தரத்தில் நீரை வைத்து அதில் ஒரு ஓட்டை போட்டு விட்டால் எப்படி நீர் கீழே வருமோ, அதற்கு தாரணை என்று பெயர். இன்னும் சொல்லப் போனால், நீர் கூட கொஞ்சம் சிதறும். எண்ணெய் உள்ள பாத்திரம் என்று சொல்லுவார்கள். ஒரே மாதிரி, சிந்தாமல் சிதறாமல் வரும். தாரை தாரையாக ஒழுகுகிறது என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா. 


இப்படி, நல்ல எண்ணங்களின் மேலேயே மனதை ஓடவிட்டாலும், ஒரு நல்ல எண்ணத்தில் இருந்து இன்னொரு நல்ல எண்ணத்திற்கு மனம் தாவும்.  ஒருவர் மேல் உள்ள நல்ல எண்ணத்தில் இருந்து இன்னொருவர் மேல் உள்ள நல்ல எண்ணமாக மாறும். அதுவும் மனச் சலனம் தான்.  


இப்படி பலவிதமான நல்ல எண்ணங்களில் இருந்து மன தை ஒன்றே ஒன்றின் மேல் செலுத்துவது தியானம் என்று பெயர். ஒன்றையே பற்றிக் கொள்ளுவது.  விடாமல் ஒன்றை மட்டுமே சிந்திப்பது. 


தியானம் கடந்து அடுத்து வருவது சமாதி. ஆதி + சமம். 


மனம் தொடக்கத்தில் எப்படி சலனம் அற்று இருந்ததோ அந்த நிலைக்கு செல்வது. சமாதி என்றால் ஏதோ இறந்த பின் புதைக்கும் இடம் அல்ல. ஆதி நிலைக்கு சமமமாக மனதை கொண்டு செல்வது. 


எனவே எண்வகை உறுப்புகள் என்பன

1.  இயமம்

2. நியமம்

3. ஆசனம் 

4. பிரணாயாமம் 

5. பிரத்தியாகாரம் 

6. தாரணை 

7. தியானம் 

8.  சமாதி 


இங்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 


நான் மேலே சொன்னது மிக மிக எளிமையான, புரிந்து கொள்ள வேண்டி சொன்னது.  யோகம் என்பது மிக மிக ஆழமான விடயம். நீங்கள் வலை தளத்தில் தேடினால் கோடிக் கணக்கான இணைய தளங்கள் கிடைக்கும். 


படித்துப் பாருங்கள்.   


இது ஒரு எளிய முன்னோட்டம். அவ்வளவே. 


இதில், ஒவ்வொன்றிலும் பலப் பல பிரிவுகள் உண்டு. ஆசனம் என்றால் அதில் பலவிதமான ஆசனம்.  தாரணை, தியானம் என்று ஒவ்வொன்றிலும் பல பிரிவுகள் உண்டு. 


யோக சாத்திரம் என்பது கடல் போன்றது.  பல வருடங்கள் பயில வேண்டிய ஒன்று. 


ஒரு ப்ளாகில் அடங்கும் விடயம் அல்ல. 


இதை ஒரு எளிய முன்னுரையாகக் கொண்டு, ஆர்வம் இருப்பின், மேலே தொடருங்கள். 


குருவருள் இருப்பின், யோக சித்திகள் கை கூடும். 


இந்த யோக பயிற்சி செய்து வீடு பேறு அடைவதை செயற்கரிய செயல் என்று வள்ளுவர் கூறுவதாக பரிமேலழகர் கூறுகிறார். 


ஐயன் ஒரு வரியில் கூறி விட்டுப் போய் விட்டார். அதை முழுவதுமாக தெரிந்து கொள்ள ஒரு ஆயுட்காலம் ஆகும். 


செயற்கரிய செயல் தான். 






இந்த நான்கையும் பற்றி நாளை சிந்திப்போம்.





இதன் முதல் பகுதியை கீழே காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_9.html



இதன் இரண்டாம்  பகுதியை கீழே காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_10.html


2 comments:

  1. Sooper and simple explanation for prathyagaram, tharanai, thiyanam and samadhi. Anyone can understand easily. Thank you.

    ReplyDelete
  2. "செயற்கரிய" என்றால் எண்வகை யோகம் என்பது பரிமேலழகர் உரையிலிருந்துதான் கண்டேன். நன்றி.

    ReplyDelete