திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 8
பாடல்
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/05/8.html
(pl click the above link to continue reading)
சுவை = சுவை
ஒளி = ஒளி
ஊறு = தொடு உணர்ச்சி
ஓசை = ஓசை
நாற்றம் = மூக்கால் நுகர்வது
மென் றைந்தின் = என்ற ஐந்தின்
வகை = கூறுபாடுகளை
தெரிவான் = ஆராய்ந்து அறிபவன்
கட்டே உலகு = கண்ணதே உலகம்
( இதன் முந்தைய பகுதிகளை கீழே காணலாம்)
https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html
https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html
)
ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம்.
இதுவரை
1. மூலப் பிரகிருதியும் அதில் இருந்து பிறந்த பிரகிருதி
2. மான் அல்லது மஹத்
3. அகங்காரம்
4. மனம்
5,6,7,8,9 - ஐந்து ஞானேந்திரியங்கள்
வரை சிந்தித்தோம்.
இனி மேலே செல்வோம்.
கண் என்ற ஞானேந்திர்யம் பார்க்கும். எவ்வளவு தூரம் வரை பார்க்கும்? நாம் இருக்கும் இடத்தில் உள்ளதைப் பார்க்கலாம். சாளரத்தை திறந்து வைத்தால் இன்னும் கொஞ்சம் தூரம் தெரியும். அடுத்த தெருவில், அடுத்த ஊரில், அடுத்த நாட்டில் உள்ளதை பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? இருந்த இடத்தில் இருந்தே கண் பார்க்குமா என்றால் பார்க்காது.
அந்தக் கண்ணை அந்த இடத்துக்குக் கொண்டு சென்றால் பார்க்கும். அங்கு எப்படி போவது? போவதற்கு கால் என்ற கருவி வேண்டும். வேண்டும்.
நாக்கு சுவைக்கும். பல்வேறு விதமான சுவைகளை அறிந்து சொல்லும். ஆனால், அதுவே உணவை வாயில் போட்டுக் கொள்ளுமா? உணவை எடுத்து வாயில் போட கை என்ற கருவி வேண்டும். காலால் உணவை வாயில் போட முடியுமா?
சரி, காலும் கையும் இருந்தால் போதுமா? இவை அனைத்தும் வேலை செய்ய சக்தி வேண்டாமா? ஒருவனை பத்து நாள் பட்டினி போட்டுவிட்டு, அவன் முன் இனிமையான ஒரு இராகத்தைப் பாடி, இது என்ன இராகம் சொல் என்றால் சொல்லுவானா? பசி காதை அடைக்குது, ஒண்ணுமே கேட்கவில்லை என்று தானே சொல்லுவான்.
சரி, உணவு கொடுக்கலாம், சக்தி கிடைக்கும். ஆனால், அதன் கழிவுகளை வெளியேற்ற வேண்டுமே? போட்டுக் கொண்டே இருந்தால் போதுமா? கழிவுகள் வெளியேற வேண்டாமா? ஞானேந்திரியங்கள் சரியாக வேலை செய்ய வேண்டுமானால் கழிவுகள் வெளியேற வேண்டும். தினம் மூன்று வேளை சாப்பிடலாம் ஆனால் மல ஜலம் கழிக்கக் கூடாது என்றால் எப்படி இருக்கும்? வயிறு வெடித்து இறந்து போவான்.
சரி, கை,கால், உணவு, மல ஜலம் கழிக்க ஏற்பாடு செய்தாகி விட்டது. போதுமா? ஞானேந்திரியங்கள் வேலை செய்யுமா? முடியாது. இன்னும் ஒரு முக்கியமான ஒன்று வேண்டும். அது தான் வாயு. பிராண வாயு, சுவாசம் இல்லாமல் எதுவும் வேலை செய்யாது. நமக்கு வெளிப்படையாகத் தெரிவது மூச்சு காற்று ஒன்று தான். ஆயுர் வேதத்தில் நம் உடம்பில் பல் வேறு விதமான வாயுக்கள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். சில வாயுக்குள் கீழ் நோக்கி செல்லும், சில மேல் நோக்கி செல்லும் என்றெல்லாம் வகுத்து வைத்து இருக்கிறார்கள்.
கீழே செல்ல வேண்டிய வாயு மேலே வந்தால், acidity என்கிறோம். நெஞ்சை கரிக்கிறது என்கிறோம். ஏப்பம் வருகிறது. வாயு குத்துகிறது என்கிறோம். உடம்பு பூராவுமே காற்றின் ஓட்டத்தில் இயங்குகிறது என்கிறார்கள்.
இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் மிக வலிமையான பாத்திரங்கள் யார் யார்? அனுமனும், பீமனும். இருவரும் வாயு குமாரார்கள். உடம்புக்கு வலிமை சேர்ப்பது வாயு. வாயுவை கட்டுப் படுத்தினால் வலிமை வரும் என்று சொல்லாமல் சொன்ன விடயம் அது.
சரி, கை, கால், மல ஜல உறுப்புகள், வாயு எல்லாம் இருந்தால் போதுமா? நான் இருந்தேன், இவற்றை அறிந்தேன். ஒரு நாள் நான் இறந்து போவேன். அப்படி எல்லோரும் இறந்து போவார்கள். அப்புறம்? யார் இந்த ஐந்தை அறிவார்கள்? பிறவி தொடர வேண்டும் அல்லவா?உயிர்கள் நிலைக்க வேண்டும் அல்லவா? எனவே அதற்கு தேவையான பிறப்பு உறுப்புகள் வேண்டும்.
எனவே, ஐந்து ஞானேந்திரியங்கள் இயங்க ஐந்து கன்மேந்திரியங்கள் வேண்டும்.
கர்மம் + இயந்திரம் = கன்மேந்திரியம்
வேலை செய்யும் உறுப்புகள்.
அவையாவன
10 - கை
11 - கால்
12 - பாயு (மல ஜலம் வெளியேற்றும் உறுப்புகள்)
13 - வாக்கு
14 - பிறப்பு உறுப்புகள்
இதில் வாக்கு என்பது எப்படி செயற் கருவி ஆகும்?
தெருவில் போய்க் கொண்டு இருக்கிறோம். நம்மிடம் ஒருவர் "மணி என்ன ?" என்று கேட்கிறார். நாம் கடிகாரத்தைப் பார்த்து மணி சொல்கிறோம். நம்மை செயல் பட வைத்தது எது? அவர் கேட்ட கேள்வி. அந்த வாக்கு நம்மை செயல் பட வைத்தது. நாம் ஒருவரிடம் வழி கேட்கிறோம். அவர் சொல்கிறார். அல்லது தெரியாது என்கிறார். அவரை செயல் பட வைத்தது எது? நம் வாக்கு.
வாக்கு ஒரு செயல் கருவியாகவும் செயல் படும்.
ஐம்பூதங்களை அறிந்து கொள்ள இந்த பதினான்கு தத்துவங்கள் போதுமா?
போதாது. இன்னும் கொஞ்சம் வேண்டும்.
அவை என்னென்ன?
மேலும் சிந்திப்போம்.
(ரொம்ப அலுப்பாக இருக்கிறதோ? எப்படா இது முடியும் என்று இருக்கிறதோ?)
இல்லை இல்லை .....ஆர்வம் அதிகமாகிக் கொண்டுள்ளது ....
ReplyDeleteஅடுத்து எப்போதென மனம் ஆர்வப்படுகிறது ...
எனவே சொல்லுங்கள் அண்ணா ...
வணக்கம் ...