Pages

Thursday, June 9, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - இறுதிப் பாகம்

       

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - இறுதிப் பாகம் 


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 


பாகம் 1 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html


பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html


பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html


பாகம்  4:  https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html


பாகம்  5: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5.html


பாகம்  6: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6.html


பாகம்  7: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7.html


பாகம்  8: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/8.html


)


அசோகவனத்தில் சீதையை சந்தித்து தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறான் அனுமன். அவன் பேசிய பேச்சைக் கேட்டு அவன் நல்லவன் என்று முடிவு செய்கிறாள் சீதை. 


முதன் முதலாக சீதை அனுமனிடம் "வீரனே, நீ யார்" என்று கேட்டாள்.


மூன்று பாடல்களில் பதில் தருகிறான். 


முதல் பாடலில் 


"அன்னையே, உன்னை இராமன் பிரிந்தபின், அவனுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்து இருக்கிறான்.அந்த நண்பன் குற்றம் அற்றவன். சூரிய குமாரன். குரங்கு குலத்துக்கு அரசன்"


இரண்டாவது பாடலில் 


"அப்படிப்பட்ட சுக்ரீவனுக்கு அண்ணன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் வாலி. அவன் மிகுந்த பலம் பொருந்தியவன். இந்த இராவணன் இருக்கிறானே அவனை இந்த வாலி தன் வாலில் கட்டி எட்டுத் திசையும் பாய்ந்து செல்லும் வலிமை மிக்கவன். அது மட்டும் அல்ல தேவர்கள் வேண்டிக் கொள்ள, அவர்கள் அமுதம் கடைந்த போது அவர்களுக்கு உதவி செய்தவன்"

என்கிறான். 


இறுதியாக மூன்றாவது பாடலில் தான் யார் என்று சொல்ல வருகிறான். அது கூட எப்படி ?


"அவ்வளவு பலம் பொருந்திய வாலியை, உன் கணவன் இராமன் ஒரே அம்பில் வீழ்த்தி, சுக்ரீவனுக்கு அரசைத் தந்தான். அந்த சுக்ரீவனுக்கு நான் மந்திரியாக உள்ளேன்.  வாயு பகவானின் பிள்ளையான என் பெயர் அனுமன்"


என்று சொல்லி முடிக்கிறான். 





பாடல் 


அன்னவன் தன்னை உம்கோன்

    அம்பு ஒன்றால் ஆவி வாங்கிப்,

பின்னவற்கு அரசு நல்கித்

    துணை எனப் பிடித்தான்; எங்கள்

மன்னவன் தனக்கு நாயேன்

    மந்திரத்து உள்ளேன், வானின்

நல்நெடும் காலின் மைந்தன்,

    நாமமும் அநுமன் என்பேன்.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_9.html


(pl click the above link to continue reading) 




அன்னவன் தன்னை = அப்படிப்பட்ட வாலியை 


உம்கோன் = உன் தலைவன்  (இராமன்) 


அம்பு ஒன்றால் = ஒரே ஒரு அம்பினால் 


ஆவி வாங்கிப், = உயிரைப் போக்கி 


பின்னவற்கு = சுக்ரீவனுக்கு 


அரசு நல்கித் =அரசைத் தந்து 


துணை எனப் பிடித்தான் = துணையாகக் கொண்டான் 


எங்கள்  மன்னவன் = எங்கள் மன்னவனான 


தனக்கு = சுக்ரீவனுக்கு 


நாயேன் = அடியவன் 



மந்திரத்து உள்ளேன் = ஆலோசனை செய்யும் தொழிலை செய்கிறேன். மந்திரியாக உள்ளேன் 


வானின் = வானுலகில் 


நல்நெடும் காலின் = நல்ல நெடிய காற்றின் 


மைந்தன், = மகன் 


நாமமும் அநுமன் என்பேன். = பெயரும் அனுமன் என்று சொல்லுவேன் 


என்று தன்னைப் பற்றி இறுதியில் சொல்லி முடிக்கிறான். 


நீ யார் என்று கேட்டதற்கு "என் பெயர் அனுமன்" என்று சொல்லி நிறுத்திக் கொண்டிருக்கலாம். 


அனுமன் சிந்திக்கிறான். எதைச் சொன்னநல் சீதையின் மனம் மகிழும், அவள் மனம் ஆறுதல் அடையும் என்று எண்ணி, அவளுக்கு நன்மை தரும் சொற்களைக் கூறுகிறான். 


அவன் சொன்னதில் உள்ள உட்பொருள் என்ன?


"நீ இந்த இராவணனைப் பற்றிக் கவலைப் படுகிறாய்.  கவலைப் படத் தேவையில்லை. இந்த இராவணனை ஒரு பூச்சி போல வாலில் கட்டி எட்டுத் திக்கும் பறந்தவன் வாலி. அப்பேற்பட்ட வாலியை ஒரே அம்பில் கொன்றவன் இராமன். அவனுக்கு இந்த இராவணன் எம்மாத்திரம். கவலையை விடு. அது மட்டும் அல்ல, சூரிய குமாரனான சுக்ரீவனும், வாயு குமாரனான நானும் இராமனுக்கு துணை இருக்கிறோம். எங்கள் குரங்கு கூட்டம் முழுவதும் இராமனின் பின்னால் நிற்கிறது"


என்று அவளுக்கு தெம்பு ஊட்டும் வகையில் கூறுகிறான். 


எவ்வளவு அழகாக, ஆழமாக, நுண்ணியமாகப் பேசுகிறான். கேட்பவர் மனம் அறிந்து பேச வேண்டும். அவர்கள் மனம் மகிழும் படி பேச வேண்டும். நம்பிக்கையை விதைக்கும் சொற்களை பேச வேண்டும். 


கம்ப இராமாயணத்தில் இது ஒரு அருமையான இடம். 


மீண்டும் மீண்டும் படித்து இன்புறத் தக்க இடம். 


இதுவரை பொறுமையுடன் படித்ததற்கு நன்றி. 


2 comments:

  1. சுகமான அனுபவம் ! மனம் லயித்து இன்னும் தொடராதா என்கிற ஏக்கம் தான் மேல்நோக்கி இருக்கிறது. சுந்தர காண்டம் முழுவதும் சொல்ல இயலாதா?

    ReplyDelete
    Replies
    1. குருவருள் இருப்பின் அதுவும் நிகழலாம். நம் கையில் என்ன இருக்கிறது.

      Delete