Pages

Thursday, November 3, 2022

திருக்குறள் - அஃகாமை செல்வத்திற்கு யாதெனின்

       

 திருக்குறள் - அஃகாமை செல்வத்திற்கு யாதெனின்



செல்வம் - நிறைய வேண்டும். எவ்வளவு வந்தாலும் போதாது என்று தோன்றுகிறது. 


அதற்கு என்ன செய்ய வேண்டும்?


முதலில் இருக்கின்ற செல்வத்தை பாதுகாக்க வேண்டும்.

அடுத்தது அதை மேலும் பெருக்க வேண்டும். 

அடுத்தது மேலும் செல்வத்தை சம்பாதிக்க வேண்டும். 


எவ்வளவுதான் சம்பாதித்தாலும், சம்பாதித்த பணத்தை பாதுகாக்க முடியாவிட்டால் என்ன பயன்?


யோசித்துப் பாருங்கள் - கஷ்டப்பட்டு, முயற்சி செய்து பணம் சேர்த்து ஒரு இடம் வாங்குறீர்கள். பின்னால் வீடு கட்டலாம் என்று. அந்த இடத்தில் ஒருவன் குடிசை போட்டுக்கொண்டு தன் இடம் என்கிறான். என்ன செய்வது?


அறிவு, திறமை, உழைப்பு எல்லாம் இருக்கிறது. சம்பாதித்த பணத்தை பாதுகாக்க முடியாவிட்டால் என்ன செய்வது? 

எல்லாம் வீண்தானே ?

இருக்கின்ற செல்வத்தை எப்படி பாதுகாப்பது என்று வள்ளுவர் சொல்கிறார். 



"உன்னிடம் இருக்கின்ற செல்வத்தை பாதுகாக்க வேண்டுமா? மற்றவன் பொருள் மேல் ஆசைப் படாமல் இரு"


பாடல் 



அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்



பொருள் 



(please click the above link to continue reading)



அஃகாமை = குறையாமல் இருக்கும் தன்மை 



செல்வத்திற்கு  = செல்வத்துக்கு 


யாதெனின் = எது என்றால் 


வெஃகாமை = பிறன் பொருளை தவறான முறையில் அடைய 


வேண்டும் = (நினைக்காமல்  இருக்க) வேண்டும் 


பிறன்கைப் பொருள் = மற்றவரின் செல்வம் 



மற்றவன் பொருளை அபகரிக்க நினைக்காமல் இருந்தால் எப்படி நம் செல்வம் குறையாமல் இருக்கும்? 

அது பற்றி வள்ளுவர் சொல்லவில்லை. பரிமேலழகரும் கூறவில்லை. 


நாம் தான் சிந்திக்க வேண்டும். 


முதலாவது, நம் உழைப்பால் செல்வம் சேர்க்க வேண்டுமே அல்லாமால் மற்றவன் பொருளை அபகரிக்க நினைத்தால், நம் உழைப்பு கெடும். மற்றவன் பொருளை அபகரிக்க முடியாமலும் போகலாம். 


இரண்டாவது, மற்றவன் பொருளை அபகரித்தால் என்றாவத் ஒரு நாள் சட்டத்தின் பிடியில் சிக்க வேண்டி இருக்கும். அப்போது அபகரித்த பொருள் மட்டும் அல்ல, முன்பு இருந்த பொருளும் போய் விடும். 


மூன்றாவது, பிறன் பொருளை அபகரிக்க சில தீயவர்களோடு சேர வேண்டி வரும். அது பல தீமைகளுக்கு வழி வகுக்கும்.  இருக்கிற பொருளும் போகும். 


நான்காவது, நாம் மற்றவர் பொருளை அபகரித்தால், பறி கொடுத்தவன் சும்மா இருப்பானா?  அவன் நம் பொருளை அபகரிக்க நினைப்பான். நமக்கு தொல்லை தந்து கொண்டே இருப்பான். அதை சமாளிக்க நீதிமன்றம், காவல் நிலையம் என்று அலைய வேண்டி வரும்.  பொருள் விரயம் ஆகும். 


ஐந்தாவது, தவறான வழியில் பொருள் சேர்த்தால், நிம்மதி போகும். பயம் வரும். மன அழுத்தம் வரும். உடல் நிலை கெடும். மருந்து, மாத்திரை என்று நோயோடு போராட வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அந்த குறைவற்ற செல்வம் குறைந்து போகும். 


இப்படி பல விதங்களில் அது இருக்கின்ற பொருளையும் அழித்து விடும். 


"கைப் பொருள்" என்று ஏன் சொன்னார் என்று தெரியவில்லை. ஏதாவது காரணம் இருக்கும். ஆராய வேண்டும். 


எப்படி ஆயினும், தவறான வழியில் பொருள் சேர்க்க நினைக்காமல் இருப்பதே இருக்கின்ற செல்வத்தை காக்கும் வழி என்கிறார். 


எவ்வளவு ஆழமான அறிவுரை. 





[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


வெஃகுதல் செய்யார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html


அகன்ற அறிவுஎன்னாம்




பொல்லாத சூழக் கெடும்



No comments:

Post a Comment