திருக்குறள் - திருமணம் செய்வது எதற்காக ?
இது என்ன கேள்வி ?
கல்யாணம் பண்ணிக் கொண்டால் மனைவியோடு (அல்லது கணவனோடு) உல்லாசமாக இருக்கலாம், பிள்ளைகளை பெற்றுக் கொள்ளலாம், அவர்களை வளர்ப்பது ஒரு சுகம், நமக்கென்று ஒரு வீடு, மனைவி, மக்கள் என்று மகிழ்ச்சியாக இருக்கலாம் ...இதற்குத்தானே கல்யாணம் பண்ணிக் கொள்கிறோம் என்பதே நம் விடையாக இருக்கும்.
இவை எல்லாம் சுய நலத்தின் பாற்பட்டது.
திருமணம், குடும்பம் என்பது அவ்வளவுதானா ? குடும்பத்திற்கு ஒரு சமுதாயப் பொறுப்பு என்று ஒன்றும் இல்லையா ?
இருக்கிறது.
பதினொரு பொறுப்புகளைச் சொல்கிறார் வள்ளுவர்.
திருமணம் என்பதே ஒரு மிகப் பெரிய பொறுப்பு என்கிறார்.
இந்தப் பொறுப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் திருமணம் செய்து கொள், இல்லையென்றால் திருமணம் உனக்கு ஏற்றது அல்ல என்கிறார்.
அது என்ன பதினொரு கடமைகள் ?
இருப்பது ஒண்ணே முக்கால் அடி, ஏழே ஏழு வார்த்தைகள் அதில் பதினொரு கடமையை எப்படிச் சொல்ல முடியும்?
மூன்று குறளாக பிரித்துக் கொண்டு, அந்த பதினொரு பொறுப்புகள் அல்லது கடமைகளைச் சொல்கிறார்.
முதல் குறள்
பாடல்
இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
பொருள்
இல்வாழ்வான் என்பான் = இல் வாழ்க்கையில் வாழ்பவன் என்பவன்
இயல்பு உடைய மூவர்க்கும் = இயல்பான மூன்று பேருக்கு
நல்லாற்றின் = அவர்கள் நல்ல வழியில் போக
நின்ற துணை = துணையாக
அது யார் மூன்று பேர் ?
- பிரமச்சாரி
- இல்லத்தைத் துறந்து மனைவியோடு வனம் சென்றவன்
- முற்றும் துறந்த துறவி
இந்த மூன்று பேருக்கும், இல்லத்தில் மனைவியோடு இருப்பவன் உதவி செய்ய வேண்டும்.
சரி, ஒரு பிரமச்சாரி தவறான வழியில் போகிறான் என்றால் அதற்கும் உதவி செய்ய வேண்டுமா ?
இல்லை,
"நல்லாற்றின் "
நல்ல வழி என்று பொருள். அவர்கள் நல்ல வழியில் போக உதவி செய்ய வேண்டும்.
திருமணம் முடிக்காத ஒருவன் உங்கள் இல்லத்திற்கு வந்தால், அவனுக்கு உணவு அளிக்க வேண்டியது உங்கள் கடமை, நீங்கள் இல்லறத்தில் இருந்தால்.
திருமணம் முடித்தவன் , திருமணம் முடிக்காத ஒருவன் வீட்டுக்குப் போனால் அந்த பிரமச்சாரி இவனுக்கு உணவு அளிக்க வேண்டியது கடமை இல்லை.
இதை வேறு ஒரு விதத்தில் சிந்தித்துப் பார்ப்போம்.
நம் குழந்தைகள் படிப்பிற்காக அல்லது புதிதாக வேலை பொறுப்பை ஏற்று வெளி நாட்டில் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களை யாராவது பொறுப்பாக பார்த்துக் கொண்டால் நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா ?
அதே போல், நாம் இருக்கும் இடத்தில் , நமக்குத் தெரிந்த பிரமசாரிகள் யாராவது இருந்தால் அவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும்.
அடுத்தது இல்லத்தை துறந்த கணவன் மற்றும் மனைவி. இவர்களையும் ஒரு இல் வாழ்வான் காக்க வேண்டும்.
ஏன் ?
வயதான தம்பதிகளுக்கு பிள்ளை இல்லாமல் இருக்கலாம். அல்லது பிள்ளைகளால் கை விடப் பட்டவர்களாக இருக்கலாம் அல்லது பிள்ளைகள் வெளி நாட்டில் இருக்கலாம். அப்படிப்பட்ட தம்பதிகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்கள். அவர்களை இல்வாழ்வான் பாதுகாக்க வேண்டும்.
நம் வீட்டுக்கு அருகில் அப்படி யாராவது இருந்தால், அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும்.
மூன்றாவது, முற்றும் துறந்த துறவிகள்.
துறவிகளுக்கு நம் சமுதாயம் மிக உயர்ந்த மதிப்பு தந்து வந்திருக்கிறது.
ஏன் என்றால், ஒரு துறவி தான் சுயநலக் கலப்பு இல்லாமல், அறத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும். அறம் வாழ வேண்டும் என்றால் துறவிகளை போற்ற வேண்டும்.
இது முதல் மூன்று கடமைகள்.
இன்னும் வரும்.
��
ReplyDelete