Wednesday, February 3, 2016

பிரபந்தம் - அல் வழக்கு ஒன்றும் இல்லா

பிரபந்தம் - அல் வழக்கு ஒன்றும் இல்லா 



பாடல்

அல்வழக் கொன்றுமில் லாஅணி கோட்டியர் கோன்அபி மானதுங்கன்
செல்வனைப் போலத் திருமா லேநானும் உனக்குப் பழவடியேன்
நல்வகை யால்நமோ நாரா யணாவென்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திர னேஉன்னைப் பல்லாண்டு கூறுவனே

கொஞ்சம் சீர் பிரிப்போம்

அல் வழக்கு ஒன்றும் இல்லாத அணி கோட்டியர் கோன் அபிமானத்து உங்கள் செல்வனைப் போலத் திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று  நாமம் பல பரவி
பல் வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே

பொருள் 

அல் வழக்கு ஒன்றும் இல்லாத = வழக்கு என்றால் வழக்கம். அல் என்றால் அல்லாத. அல்லாத வழக்கம் என்றால் என்ன ? தீய வழக்கம். அப்படி என்றால் வழக்கம் என்றாலே நல்ல வழக்கம் என்று ஆகிறது அல்லவா ? அது சரிதானா ?

பெரியவர்கள் எப்போதும் வழக்கம் என்றால் நல்ல வழக்கத்தைத்தான் கூறுவார்கள்.

வழியே ஏகுக, வழியே மீளுக என்றாள் ஔவை. அதற்கு என்ன அர்த்தம் ? நல்ல வழியில் சென்று, நல்ல வழியில் திரும்பி வரவேண்டும் என்று அர்த்தம்.

தீய வழியில் போய் , தீய வழியில் மீளுதல் என்று அத்தம் பண்ணிக்கொள்ளக் கூடாது.

நெறி அல்லா நெறி தன்னை நெறியாக முயல்வேனை  என்பார் மணிவாசகர்

நெறி அல்லா நெறி தன்னை நெறியாக நினைவேனை,
சிறு நெறிகள் சேராமே, திருஅருளே சேரும்வண்ணம்,
குறி ஒன்றும் இல்லாத கூத்தன் தன் கூத்தை எனக்கு
அறியும்வண்ணம் அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

நெறி என்றால் நல்ல நெறி. நெறி அல்லா நெறி என்றால் தீய நெறி.

அதே போல , வழக்கு என்றால் நல்ல வழக்கம். அல் வழக்கு என்றால் தீய வழக்கம்.

தமிழில் பழக்க வழக்கம் என்று ஒரு சொற்றொடர் உண்டு.

அது என்ன பழக்கம், வழக்கம் ?

பழக்கம் என்றால் அறிந்து செய்வது.

வழக்கம் என்றால் அறிவின், மனதின் தூண்டுதல் இல்லாமல் தானாகச் செய்வது.

ஒன்றைப் பழக்கப் படுத்தி விட்டால், அது வழக்கமாகி விடும்.

குழந்தகைள் காலையில் எழுந்தவுடன் பல் விளக்க ரொம்ப அடம் பிடிப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பழக்கப் படுத்தி விட்டால், அதுவே வழக்கமாகி விடும். பின், காலையில் எழுந்தவுடன் தன்னால் சென்று பல் விளக்குவார்கள். பல் விளக்காமல் முடியாது.

நல்ல பண்புகளை பழக்கப் படுத்தி வைத்தால் அது வழக்கமாகி விடும்.

நமச்சிவாய, நமச்சிவாய என்று சொல்லி நாக்கை பழக்கப் படுத்தி இருந்தார் சுந்தரர். "சொல்லு நா நமச்சிவாயவே" என்பார். நான் நினைத்துச் சொல்லாவிட்டாலும், என் நாக்கு சொல்லும் என்கிறார்.

அது போல, பெரியாழ்வாரும், நல்லன அல்லாததை செய்யாமல் இருப்பதை வழக்கமாக்கி கொண்டு விட்டார்.

அணி கோட்டியர் = அழகிய திருகோட்டியூரில் உள்ளவர்களுக்கு


 கோன்  = தலைவன்

அபிமானத்து உங்கள் = உன்னுடைய அபிமானத்துக்கு உகந்த

செல்வனைப் போலத் = செல்வனைப் போல (திருக்கோட்டியூர் நம்பியை சொல்கிறார்)

திருமாலே = திருமாலே

நானும் உனக்குப் பழ அடியேன் = நானும் உனக்கு பழைய அடியவன். அது என்ன பழைய அடியவன். சில பேர் , மற்றவர்கள் சொல்வதைக் கேட்டோ, ஏதோ புத்தகத்தில் படித்தோ பக்தி செய்யத் தொடங்குவார்கள். வேறு யாராவது, வேறு விதமாகச் சொன்னால், அல்லது, வேறு புத்தகத்தில் வேறு வேறுவிதமாகச்  சொல்லி இருந்தால், இதை விட்டு விட்டு அதைப் பற்றிக் கொள்வார்கள். நான் அப்படி அல்ல. ரொம்ப நாளாகவே உனக்கு அடியவன். உன்னை என் அனுபவத்தால் அறிந்தவன் என்கிறார் ஆழ்வார்.


நல் வகையால் = நல்ல வழியில்

நமோ நாராயணா என்று = நமோ நாராயான என்று

நாமம் பல பரவி = பல விதங்களில் அவன் நாமத்தைக் கூறி

பல் வகையாலும் = பல விதங்களிலும்

பவித்திரனே = தூய்மையானவனே

உன்னைப் பல்லாண்டு கூறுவனே = உனக்கு பல்லாண்டு கூறுவேன்

தீய வழக்கங்களை விட்டு விட்டு, நல்ல வழக்கங்களை கொள்ளுங்கள்.

நம்பிக்கை வையுங்கள். வைத்து உயந்தோர் பலர்.



No comments:

Post a Comment