Thursday, February 4, 2016

நற்றிணை - அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்

நற்றிணை - அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்


பெண்கள், திருமணம் முடிந்த பின் கணவன் வீட்டுக்குப் போய் விடுகிறார்கள். திருமணத்திற்கு முன், தங்கள் வீட்டில் அந்த பெண்கள் மிக மிக செல்லமாக வளர்க்கப் பட்டிருப்பார்கள். திருமணம் ஆன பின் வீட்டை விட்டு போய் விடுவாளே என்று பொதுவாகவே பெண் பிள்ளைகளுக்கு கொஞ்சம் செல்லம் அதிகம்தான் வீட்டில். கேட்டது எல்லாம் கிடைக்கும், ரொம்ப வேலை சொல்வது கிடையாது...கிட்டத் தட்ட இராணி மாதிரிதான் நடத்துவார்கள்.

திருமணம் ஆன பின், கணவன் வீட்டில் இந்த செல்லம் எல்லாம் நடக்காது. வசதியான வீடாக இருந்தால் கூட, மருமகளுக்கு உடனே அவ்வளவு செல்வாக்கும் அதிகாரமும் வந்து விடாது. அது வரை அந்தப் பெண் கொஞ்சம் அடங்கியும், பொறுமையுடனும்தான் இருக்க வேண்டும்.

போன இடம் கொஞ்சம் வறுமையான இடமாக இருந்தால், இன்னும் கஷ்டம்.

இங்கே, நற்றிணையில், பணக்கார வீட்டுப் பெண், ஒரு ஏழை வீட்டில் வாக்கப் பட்டுப் போகிறாள். திருமணம் முடிந்த கொஞ்ச நாள் கழித்து, அந்தப் பெண்ணின் தாயார் , தன் மகள் எப்படி குடும்பம் நடத்துகிறாள் என்று காண்பதற்குச் செல்கிறாள்.

புகுந்த வீட்டில் வறுமை. மூணு வேளை சாப்பாடு கூட கிடையாது.  அதை உண்டு, அந்தப் பெண் மகிழ்வாக இருக்கிறாள்.

நம் வீட்டில், தேன் போல சுவைக்கும் உணவை வெள்ளிக் கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு சாப்பிட வா என்றாள் வர மாட்டேன் என்று அங்கும் இங்கும் ஓடிய இந்தச் சின்னப் பெண், எப்படி இந்த மாதிரி மாறி விட்டாள் . இந்த அறிவும், ஆசாரமும் இவ எப்ப படித்தாள் என்று தாய் வியக்கிறாள்.

கற்பனை செய்து கொள்ளுங்கள்.

 அழகான ஒரு கிராமம். அதில் ஒரு பணக்கார் வீடு. அந்த வீட்டில் ஒரு அழகான  ஒரு பெண் குழந்தை. செல்லமோ செல்லம். அவளை பார்த்துக் கொள்ள தனி வேலைப் பெண்கள். அவளுக்கு சோறு ஊட்டுவது என்றால் எளிதான காரியம்  அல்ல.தங்கக் கிண்ணத்தில் பாலும் தேனும் சேர்த்து எடுத்துக் கொண்டு சாப்பிடுமா சாப்பிடுமா என்று வந்தால், ஒரே ஓட்டம் ஓடி விடுவாள். வீட்டின் வெளிய நிறைய மல்லிகை,முல்லை பந்தல் எல்லாம் இருக்கிறது. அந்த பந்தலுக்குள் ஓடி விடுவாள். இந்தப் பணி பெண்கள் அவளை துரத்திக் கொண்டு ஓடுவார்கள்.

திருமணத்திற்கு பின், மூணு வேளை கூட உணவு கிடையாது. இருந்தும், தந்தை வீட்டு   செல்வத்தை  நினைக்காமல், புகுந்த வீட்டில் மகிழ்வோடு இருக்கிறாள்.




பாடல்
   

பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால்
விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து_உற்று 5
அரி நரை கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்
கொண்ட கொழுநன் குடி வறன்_உற்று என 10
கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே

பொருள்

பிரசம் கலந்த = தேன் கலந்த

வெண் சுவை = சிறந்த சுவை உடைய

தீம் பால்  = சிறந்த பாலினால் செய்த உணவை

விரி கதிர் = ஒளி விடும்

பொன் கலத்து = பொன்னால் செய்த ஒரு பாத்திரத்தில்

ஒரு கை ஏந்தி = ஒரு கையில் ஏந்திக் கொண்டு

புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல் = ஒரு சிறிய குச்சியில், பூவை சுற்றி, அவளை அந்த கோலால் அடிப்பது போல விரட்டி

உண் என்று = சாப்பிடு என்று மிரட்டி

ஓக்குபு பிழைப்ப = ஓங்கி கொண்டு சென்றாலும், தப்பி ஓடிய அவள்

தெண் நீர் = தெளிந்த நீர் போல

முத்து அரி = முத்துக்கள் கொண்ட

பொன் சிலம்பு ஒலிப்ப = பொன்னால் செய்யப்பட்ட சிலம்பு ஒலிக்க  

தத்து_உற்று = தத்தி தத்தி ஓடி

அரி நரை கூந்தல் = அங்கொன்றும் இங்கொன்றுமாக நரைத்த கூந்தல்

செம் முது செவிலியர் = சிறந்த செவிலித்தாயார்

பரி மெலிந்து ஒழிய = பற்ற முடியாமல் 

பந்தர் ஓடி = பந்தலின் கீழ் ஓடி

ஏவல் மறுக்கும் = சொன்னதைக் கேட்க மறுக்கும்

சிறு விளையாட்டி = விளையாட்டுப் பெண்

அறிவும் ஒழுக்கமும் = அறிவும் ஒழுக்கமும்

யாண்டு உணர்ந்தனள்-கொல்  = எப்போது பெற்றாள்

கொண்ட கொழுநன் = கொண்ட கணவன்

குடி வறன்_உற்று என = குடும்பம் வறுமையில் உள்ள போது

கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள் = தன் தந்தை வீட்டில் கிடைத்த சிறந்த உணவினை நினைக்க மாட்டாள்

ஒழுகு நீர்= ஆற்றில் செல்லும் நீரில் (ஒழுங்கு நீர் = ஒழுங்காக செல்லும் நீர்)

நுணங்கு அறல் போல = மெல்லிய சிறு சிறு கூழான் கற்களைப் போல

பொழுது மறுத்து உண்ணும்  = ஒரு வேளை விட்டு மறு வேளை உண்ணும்

சிறு மதுகையளே =சிறிய இனிய    கைகளைக் கொண்டவளே

6 comments:

  1. ஆற்றில் செல்லும் கூழாங்கல், எப்பொழுது தடைபடும் எப்பொழுது நகரும் என்று தெரியாது. எனவே ஒரு வேளை விட்டு, மறு வேளை என்பது சரியாகப்படவில்லை. கவிதை அருமை! தெரிந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. அப்பா, இந்த பக்திப் பாட்டு, சுவாமி பாட்டை விட்டு விட்டு ஒரு நல்ல மாறுதல்!

    என்ன ஒரு அழகான பாடல். சும்மா பிறந்த வீட்டுச் செல்வம் கண் முன்னே தெரிகிறது. "கொழும் சோறு உள்ளாள்" - நினைக்கக் கூட மாட்டாளாம்!

    கூழாங்கல் அவள் கைகளுக்கு உவமையாக வருகின்றது என்று நினைக்கிறேன். நீர் ஓடி வழவழ என்றிருக்கும் கூழாங்கல் போல, வழவழ என்றிருக்கும் கைகள் என்று கொள்ளலாமோ?

    பக்தியைத் தவிர வேறு மனித உணர்வுகளைச் சித்தரிக்கும் கவிதைகள் பற்றி எழுத வேண்டுகிறேன். இந்தப் பாடலுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஓடுகின்ற நீரிலே கிடக்கும் நுண்மணலில் இடைவெளி இருப்பதுபோல் ஒரு பொழுது இடைவெளி விட்டு ஒரு பொழுது உண்ணும் வன்மை பெற்றிருக்கிறாள்.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே என்பதற்கு
    ஒருவேளை விட்டு ஒருவேளை உண்ணும் சிறிய வலிமையை கொண்டவள் என்று கூட சொல்லலாமே ஐயா.

    ReplyDelete