இராமாயணம் - விராதன் வதைப் படலம் - சிறை அன்னம் அனையாள்
இராமனும், இலக்குவனும் , சீதையும் கானகத்தில் செல்கின்ற போது , விராதன் என்ற அரக்கன் சீதையை தூக்கிக் கொண்டு சென்று விட்டான். இராமனும் இலக்குவனும் , அந்த அரக்கனை மறித்து அவனோடு போர் புரியத் தொடங்கினர்.
விராதன் , மாயம் செய்து, அவர்களை தூக்கிக் கொண்டு வானத்தில் சென்றான்.
சீதை பரிதவிக்கிறாள். சீதையின் அவலத்தை கம்பன் காட்டுகிறான்.
ஒரு குளத்தில் ஆண் அன்னமும், பெண் அன்னமும் இணையாக இன்பமாக இருந்து வந்தன. ஒரு நாள் வேடர்கள் வந்து வலை வைத்து பிடித்ததில் ஆண் அன்னம் சிக்கிக் கொண்டது. ஆண் அன்னத்தை அந்த வேடர்கள் தூக்கிக் கொண்டு போகிறார்கள். அதைக் கண்டு அந்தப் பெண் அன்னம் எப்படி துடிக்குமோ, அப்படி துடித்தாள் சீதை.
பாடல்
மா தயா உடைய தன் கணவன்,
வஞ்சன் வலியின்
போதலோடும் அலமந் தனள்;
புலர்ந்து, பொடியில்,
கோதையோடும் ஓசி கொம்பு என,
விழுந்தனள் குலச்
சீதை, சேவல் பிடியுண்ட சிறை
அன்னம் அனையாள்.
பொருள்
மா = பெரிய
தயா = தயை, கருணை
உடைய = உடைய
தன் கணவன் = தன் கணவன், இராமன்
வஞ்சன் = வஞ்சகனான விராதன்
வலியின் = வலிமையால்
போதலோடும் = போனதால்
அலமந் தனள் = வருந்தினாள், கவலைப்பட்டாள்
புலர்ந்து = வாடிய
பொடியில் = புழுதியில்
கோதையோடும் = மலர் மாலையோடும் அல்லது மலர் மாலை போன்ற
ஓசி கொம்பு என = ஒடிந்து விழுந்த கொம்பு போல
விழுந்தனள் = விழுந்தால்
குலச் சீதை = உயர் குலத்தில் பிறந்த சீதை
சேவல் பிடியுண்ட = ஆண் அன்னம் பிடிபட்ட பின்
சிறை = மென்மையான சிறகுகள் உடையாய் (பெண் அன்னம்)
அன்னம் = அன்னம்
அனையாள் = போன்ற (சீதை)
ஜனகனின் மகள். தயரதனின் மருமகள், இராமனின் மனைவி - பட்ட துன்பம் இது.
கணவனையும், கணவனின் தம்பியையும் அரக்கன் தூக்கிக் கொண்டு போகிறான்.
நம்மை காக்க வந்ததால் தானே அவர்களுக்கு இந்த கதி என்று நினைத்து வருந்துகிறாள்.
கணவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், மனைவிக்கு பயம் போகாது. அவனுக்கு ஏதாவது துன்பம் வந்து விடுமோ என்று.
இராமனின் மனைவியின் நிலை இது என்றால்.....
http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_23.html
No comments:
Post a Comment