கம்ப இராமாயணம் - சாகா வரம் பெற்றவன்
பொதுவாகவே அரக்கர்கள் கடுமையாக தவம் செய்வார்கள். இறைவன் நேரில் வந்து "பக்தா, உன் பக்திக்கு மெச்சினோம். என்ன வரம் வேண்டும் " என்று கேட்பார்கள். உடனே, அந்த அரக்கர்கள் , "சாகா வரம் வேண்டும் " என்று கேட்பார்கள். "பிறந்தது எல்லாம் இறக்க வேண்டும் என்பது விதி. அதை யாராலும் மாற்ற முடியாது. வேறு ஏதாவது கேள்" என்று இறைவன் சொல்வான். அரக்கர்களும் எப்படியெல்லாம் சாவை வெல்ல முடியும் என்று சிந்தித்து வரம் கேட்பார்கள். இறைவனும் கொடுத்து விடுவான்.
என்ன வரம் கேட்டாலும், கடைசியில் அவர்களுக்கு மரணம் வந்தே தீருகிறது.
ஆனால், இதற்கு விதி விலக்காக , விராதன் இருக்கிறான்.
"நான் முகன் தந்த வரத்தினால் என் உயிர் என்னை விட்டு போகவே போகாது. இந்த உலகங்கள் அனைத்தும் எதிர்த்து வந்தாலும், ஒரு ஆயுதம் கூட இல்லாமல் அவற்றை வெல்லுவேன். உங்களுக்கு (இராம இலக்குவனர்களுக்கு) உயிர் பிச்சை தருகிறேன். இந்த பெண்ணை (சீதையை) என்னிடம் விட்டு விட்டு ஓடி விடுங்கள் "
என்கிறான்.
பாடல்
‘ஆதி நான்முகன் வரத்தின் எனது
ஆவி அகலேன்;
ஏதி யாவதும் இன்றி, உலகு
யாவும் இகலின்,
சாதியாதனவும் இல்லை; உயிர்
தந்தனென்; அடா!
போதிர், மாது இவளை உந்தி, இனிது’
என்று புகல
பொருள்
‘ஆதி நான்முகன் = உயிர்களுக்கு எல்லாம் மூலமான பிரமன்
வரத்தின் = வரத்தினால்
எனது ஆவி அகலேன் = என் உயிர் என்னை விட்டு போகாது. என்னை கொல்ல முடியாது
ஏதி யாவதும் இன்றி = காரணம் எதுவும் இன்றி. இங்கு படை அல்லது துணை எதுவும் இன்றி என்று கொள்ளலாம்.
உலகு யாவும் = உலகங்கள் யாவும்
இகலின் = சண்டைக்கு வந்தால்
சாதியாதனவும் இல்லை = அவற்றை வென்று முடிக்காமல் இருக்க மாட்டேன்
உயிர் தந்தனென் = உங்களுக்கு உயிர் பிச்சை தருகிறேன்
அடா! = அடேய்
போதிர் = போய் விடுங்கள்
மாது இவளை உந்தி = மாது இவளை விட்டு விட்டு
இனிது = சந்தோஷமாக
என்று புகல = என்று கூறினான்
உயிர் பிழைத்தோம் என்று சந்தோஷமாக ஓடி விடுங்கள் என்கிறான்.
உங்களுக்கு சகுனம், விதி இவற்றில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ. தமிழில் எப்போதும் , எதையும் மங்களமாகவே சொல்ல வேண்டும் என்று ஒரு விதியே வைத்து இருக்கிறார்கள். அமங்கலமான சொற்களை விலக்க வேண்டும் என்பது விதி.
ஏன் என்றால், வார்த்தைகளுக்கு வலிமை உண்டு என்று நம்பினார்கள். நாம் என்ன சொல்கிறோமோ, அது நமது மனத்தில் பதிந்து அப்படியே நடக்கும் என்று உறுதியாக நம்பினார்கள்.
எனவே, எப்போதும் நல்லதையே சொல்ல வேண்டும், மங்களமான சொற்களையே பேச வேண்டும் விதித்து வைத்திருந்தார்கள்.
இதை தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் காணலாம்.
(யாருக்கேனும் படிக்க விருப்பம் இருந்தால் தெரிவியுங்கள். சமயம் கிடைக்கும் போது எழுதுகிறேன்)
இங்கே விராதன் சொல்வதை வேறு விதமாக பார்க்கலாம்.
"உயிர் போகாது என்று பிரமன் வரம் தந்திருக்கிறான். ஆனால், இப்போது இந்த பெண்ணை கடத்திக் கொண்டு போவதன் மூலம் என் உயிரை விடப் போகிறேன். நீங்கள் இந்த பெண்ணை அழைத்துக் கொண்டு போய் இனிதாக வாழுங்கள் "
என்று அர்த்தம் சொல்லலாம்.
‘ஆதி நான்முகன் வரத்தின் எனது
ஆவி அகலேன்"
பிரமன் வரத்தினால் , என்னை கொல்ல முடியாது
உயிர் தந்தனென் = என் உயிரை தரப் போகிறேன்
போதிர், மாது இவளை உந்தி, இனிது = இந்த பெண்ணை அழைத்துக் கொண்டு போய் இனிமையாக வாழுங்கள்
என்று புகல = என்று கூறினான்.
அவன் எதை நினைத்துச் சொன்னானோ தெரியாது. அவன், தெரியாமல் சொன்ன வார்த்தை கூட பலித்தது. உயிரை விட்டான்.
எனவே, மறந்தும், அமங்களமான சொற்களை பேசக் கூடாது.
கோபம் வரும்போது, எரிச்சல் வரும்போது, வருத்தத்தில் அமங்களமான சொற்களை சொல்லாமல் இருப்பது நலம்.
http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_8.html
//(யாருக்கேனும் படிக்க விருப்பம் இருந்தால் தெரிவியுங்கள். சமயம் கிடைக்கும் போது எழுதுகிறேன்)//
ReplyDeleteஅவசியம் எழுதுங்கள் ஐயா! காத்திருக்கிறோம்.
இதை நான் என் youtube video va podalaama ji
Deleteபோடுங்க ஜி. நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிந்தால் நல்லது தானே. கம்ப இராமாயணத்தை நானா எழுதினேன், காப்புரிமை கொண்டாட? அந்த மகா கவியின் பாடல்கள் எல்லோரையும் சென்று அடைய வேண்டும் என்பதே என் விருப்பமும். தாராளமாகப் போடுங்கள்.
Deleteஅவசியம் எழுதுங்கள் ஐயா! காத்திருக்கிறோம்.
ReplyDeleteSubramanian & Family
இனிய சொற்களையே சொல்ல வேண்டும் என்பது பற்றி எழுதினால் படிக்கக் காத்திருக்கிறோம்.
ReplyDeleteஇந்தப் பாடலில் ஒரு தந்திரமான பொருள் பதிந்து இருப்பது இனிமை.