Sunday, October 29, 2017

திருக்குறள் - நன்மையின் நீக்கும்

திருக்குறள் - நன்மையின் நீக்கும் 


நல்லது வேண்டாமென்று யார் தான் சொல்லுவார்கள். மேலும் மேலும் நல்லதே வேண்டும் என்றுதானே எல்லோரும் விரும்புவார்கள்.

அதற்காகத்தானே இத்தனை பாடு படுகிறார்கள்.

செல்வம் வேண்டும், புகழ் வேண்டும், அதிகாரம் வேண்டும், மகிழ்ச்சி வேண்டும் என்று எத்தனையோ நன்மைகளை வேண்டி பாடு படுகிறார்கள்.

இருந்தும், எல்லோருக்கும் நல்லவை கிடைத்து விடுவதில்லை. எவ்வளவு படித்திருந்தும், எவ்வளவு கடுமையாக உழைத்தும் நன்மை என்பது சிலருக்கு எட்டா கனியாகவே இருக்கிறது.

ஏன் ?

வள்ளுவர் சொல்கிறார், பயனற்ற பண்பில்லாத சொற்களை பேசுவதன் மூலம் ஒருவனை விட்டு நன்மைகள் நீங்கும் என்று.

பாடல்

நயன் சாரா நன்மையின் நீக்கும் - பயன்சாராப்
பண்பு இல் சொல் பல்லாரகத்து.


பொருள்

நயன் = நயமான, இனிமையான, அன்பான , அருளான

சாரா  = சார்பில்லாத

நன்மையின் = நன்மையில் இருந்து

நீக்கும்  = நீக்கிவிடும்

பயன்சாராப் = பயனொடு தொடர்பில்லாத

பண்பு இல் = பண்பில்லாத

சொல் =  சொற்களை

பல்லாரகத்து = பல்லார் + அகத்து = பலரிடத்தில்


விரிவாக பார்போம் .

"பயன் சாரா" என்றால் என்ன ?

நாம் ஒருவரிடம் பேசுகிறோம் என்றால் நம் பேச்சினால் அவருக்கு என்ன பயன்  விளையும் என்று யோசிக்க வேண்டும். பயன் என்பதை இரண்டு வகையாக பிரிக்கிறார் பரிமேலழகர். இம்மை பயன் , மறுமை பயன் என்று. இந்த வாழ்கைக்காகவாவது அல்லது இறந்த பின் கிடைக்கும் முக்தி, வீடு பேறு  போன்றவற்றுக்காக பயன் தர வேண்டும்.

இம்மைக்கும் மறுமைக்கும் பயன் இல்லாத சொற்களை பேசக் கூடாது.

பேசக் கூடாது என்று சொல்வதன் மூலம், அது போன்ற சொற்களை கேட்கவும் கூடாது என்று புரிகிறது அல்லவா ?

"பண்பு இல் " என்றால் என்ன ?

பயன் தரும் சொற்களைக் கூட பண்போடு சொல்ல வேண்டும்.

பிள்ளைகளிடம் "நல்லா படிச்சா நல்ல வேலை கிடைக்கும், நாலு பேருக்கு நல்லது  செய்யலாம் . எனவே நல்லா படி" னு சொல்லலாம். "படிக்கலேனா பன்னி மேய்க்கத் தான் போற " என்றும் சொல்லலாம். இரண்டுமே நல்லா படி என்ற பயனுள்ள சொற்கள்தான். இருந்தும், இரண்டாவது கொஞ்சம் பண்பற்ற சொல்லாக இருக்கிறது அல்லவா  ? நல்லதே சொன்னாலும் , இனிமையாக , மற்றவர் மனம் புண் படாதபடி சொல்ல வேண்டும்.

"பல்லார் அகத்து" ...பலரிடம். இதே தொழிலாக அலைவது. யாரைப் பார்த்தாலும் லொட லொட என்று தேவையில்லாத சொற்களை பேசிக் கொண்டிருத்தல் .


"நீக்கும்" ...வேறு யாரும் வந்து கெடுதல் செய்ய வேண்டாம். இப்படி நயன் இல்லாத, பண்பில்லாத சொற்களை பேசிக் கொண்டிருந்தால், அதுவே நமக்குச் சேர  வேண்டிய நன்மைகளில் இருந்து நீக்கிவிடும்.

என் மனைவி/கணவன் என்னிடம் அன்பாக இல்லை, மேலதிகாரி எனக்கு பதவி உயர்வு  தரவில்லை, பிள்ளைகள் நான் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறார்கள், மாமியார் / மருமகள் உறவு சரியாக இல்லை என்று வரும் பிரச்சனைகளுக்கு  மற்றவர் காரணம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் அல்ல காரணம். நமது பயன் இல்லாத பண்பற்ற  சொற்கள்தான் காரணம். நமக்கு வர வேண்டிய நன்மைகளை அவை நம்மிடம் இருந்து  நீக்கி விடுகின்றன.

நீக்குதல் என்றால் முதலில் இருக்க வேண்டும். அதை நீக்க வேண்டும். நம்மிடம்  ஏற்கனவே உள்ள நன்மைகளை, செல்வங்களை, செல்வாக்கை பயனற்ற  பண்பில்லாத சொற்கள் நீக்கி விடும். நம்மை விட்டுப் போகச் செய்து விடும்.

உழைத்து சம்பாதித்த பணம், பேர், புகழ், உறவுகள் என்று அனைத்தையும் நீக்கி விடும்.


எதை நீக்கும் ?

நயன் சாரா நன்மையின் நீக்கும்

இனிமையான, அன்பான, அருள் நிறைந்த நன்மைகளை நீக்கிவிடும்.

பொருட் செல்வம் மட்டும் அல்ல. மற்ற அனைத்து நன்மைகளையும் நீக்கி விடும்.

"பல்லாரகத்து"  பலரிடம்.  இன்று whatsapp  , e mail போன்றவை வந்து விட்டன. ஒரே சமயத்தில்  பலரிடம் chat செய்ய முடியும். வள வள என்று தேவையில்லாத  chat களால் நமது நேரத்தை வீணடிப்பது மட்டும் அல்ல, மற்றவர்கள்  நேரத்தையும் நாம் வீணடிக்கிறோம். தேவை இல்லாத சொற்களால் பகை  வளரலாம். மனத்தாங்கல் வளரலாம்.

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

எல்லோரிடமும் தேவையற்ற பேச்சினால் நன்மை நீங்கி கெடுதலே விளையும்.

பேசும் முன், எழுதும் முன் யோசியுங்கள்.

இதனால் மற்றவர்களுக்கு என்ன பயன்.

பயன் இருந்தாலும், அதை அன்பாக, இனிமையாக எப்படி சொல்வது என்று  சிந்தித்துச்  சொல்லுங்கள்.

அபப்டி ஒன்றும் இல்லை என்றால், மௌனம் சிறந்தது.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_29.html

1 comment: