நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்புள்ளம்பூதங்குடி - பாகம் 1
விலங்குகளை பறவைகளை சிறை பிடிக்க விரும்பும் வேடர்கள் , அவற்றிற்கு பொறி வைத்து பிடிப்பார்கள். உதாரணமாக , புலியை பிடிக்க வேண்டும் என்றால், ஒரு கூண்டு செய்து, அதில் ஒரு மானை கட்டி வைத்து விடுவார்கள். மானின் வாசனையை கொண்டு புலி அதை பிடிக்க பாயும். கூண்டின் கதவு மூடிக் கொள்ளும். புலி மாட்டிக் கொண்டு வாழ் நாள் எல்லாம் அவதிப் படும்.
வீட்டில் கூட எலியை எலி பொறி வைத்து பிடிப்பதை நாம் அறிவோம்.
ஒரு கணம் , அந்த பொறியில் உள்ள வடை துண்டுக்கோ, தேங்காய் சில்லுக்கோ ஆசைப் பட்டு எலி உயிரை விடும்.
அந்த எலியைப் பார்த்தால் நமக்கு சிரிப்பாய் வரும். பாவமாய் இருக்கும்.
நாம் அந்த எலியை விட பெரிய ஆள் இல்லை.
இந்த ஐந்து புலன்களும் , ஐந்து பொறியைப் போல. ஒரு நிமிடம் ஆசைப் பட்டு நம்மை மீளாத துயரில் ஆட்படுத்தி விடும்.
விலங்குகளுக்கு , பொறி இருப்பது தெரியாமல் வந்து மாட்டிக் கொள்ளும். நமக்குத் தெரியும். இருந்தும் நாம் மாட்டிக் கொள்கிறோம். ஏன் ?
ஏன் என்றால், இந்த பொறிகள் நமக்கு நல்லது செய்வதாக கூறி, வஞ்சகமாக இழுத்துக் கொண்டு போய் மாட்டி விட்டு விடும்.
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு படித்து இருந்தாலும் , அனுபவம் இருந்தாலும், ஒரு நொடியில் வீழ்த்தி விடும்.
எனவே அது பெரிய பொறி.
வஞ்சகமாக நம்மை மாட்டி விட்டு விடுவதால் அது கள்ளப் பொறி.
இந்த வஞ்சக பொறிகளை வைத்துக் கொண்டு நாம் அல்லாடுகிறோம்.
இந்த புலன்கள் ஆசைப்படும் அனைத்தும் வேண்டும், அப்படி புலன் இன்பங்களை அனுபவிப்பதன் மூலம் வரும் நல் வினை , தீ வினை பலன்கள் நம்மை தொடரக் கூடாது, அதாவது வினையினால் மறு பிறப்பு வரக் கூடாது, மேலும், அனைத்து இன்பங்களையும் அனுபவித்த பின் , இறைவனடி சேர வேண்டும்.
நடக்கிற காரியமா இது ?
முடியும் என்கிறார் பிள்ளை பெருமாள் ஐயங்கார்.
"விரும்பியவை அடைவீர்கள், வினை அனைத்தும் தீரும், பரம பதம் அடைவீர்கள்" என்கிறார்.
அடைவது யார் தெரியுமா ?
"பெரும் பொறி, கள்ளப் பூதங்களான புலன்களை கொண்ட உடலை உடைய நாம் " என்கிறார்.
எப்படி அடைவது ?
திரு புள்ளக் குடி என்ற திரு தலத்துக்கு சென்றால் போதுமாம்.
பாடல்
விரும்பினவையெய்தும் வினையனைத்துந்தீரு
மரும்பரவீடுமடைவீர் - பெரும்பொறிகொள்கள்ளம்பூதங்குடிகொள்காயமுடையீ ரடிகள்
புள்ளம்பூதங்குடி யிற்போம்.
சீர் பிரித்த பின்
விரும்பினவை எய்தும் வினை அனைத்தும் தீரும்
அரும் பர வீடும் அடைவீர் - பெரும் பொறிகொள்கள்ள பூதம் குடி கொள் காயமுடையீர் அடிகள்
புள்ளம்பூதங்குடி யிற்போம்.
பொருள்
விரும்பினவை = ஆசைப் பட்டவை அனைத்தும்
எய்தும் = அடைவீர்கள்
வினை அனைத்தும் தீரும் = வினை அனைத்தும் தீரும்
பெரும் = பெரிய
பொறிகொள் = பொறிகளை கொண்ட
கள்ள பூதம் குடி கொள் = கள்ளத்தனமான பூதங்கள் குடி கொண்டுள்ள
காயமுடையீர் = உடம்பை உடைய
அடிகள் = அடியவர்களே
புள்ளம்பூதங்குடி யிற்போம் = புள்ள பூதக்குடி என்ற திரு தலத்துக்கு போங்கள்
ஒருவர் இறந்து விட்டால், "இன்னாருடைய பூத உடல் இந்த இடத்தில், இன்ன நேரத்தில் அடக்கம் செய்யப் படும் " என்று அறிவிப்பதை கேட்டிருப்பீர்கள். அது என்ன பூத உடல் ? பூதம் போல பெரிதாக இருக்குமா ?
இல்லை.
பஞ்ச பூதங்களால் ஆனது இந்த உடம்பு. எனவே பூத உடல்.
இந்த உடலில் உள்ள புலன்கள் இருக்கின்றனவே, அவை கள்ள பெரும் பூதங்கள்.
வெறும் பூதம் என்றாலே பயம். இதில் கள்ள பெரும் பூதம் என்றால் எப்படி இருக்கும். கட்டாயம், நம்மை தின்று விடும் அல்லவா ?
அப்படி பயப்பட வேண்டும் இந்த புலன்களுக்கு.
அப்படிப்பட்ட புலன்களை கொண்ட அடியவர்களே, உங்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் நல்லது வேண்டும் என்றால், புள்ளபூதக் குடிக்கு போங்கள்.
நீங்க போனா மட்டும் போதும்.
சரி, இந்த புள்ள பூத குடிக்கு இந்த பெயர் எப்படி வந்தது ? இந்த ஊர் எங்கே இருக்கிறது ? இங்கு வேறு என்ன விஷேசம் ?
மேலும் சிந்திப்போம்.
(பயணம் தொடரும்)
No comments:
Post a Comment