நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்புள்ளம்பூதங்குடி - பாகம் 2
முந்தைய பிளாகில் திருபுள்ளக்குடி பற்றி பார்த்தோம். இது அதன் தொடர்ச்சி.
பாடல்
விரும்பினவையெய்தும் வினையனைத்துந்தீரு
மரும்பரவீடுமடைவீர் - பெரும்பொறிகொள்கள்ளம்பூதங்குடிகொள்காயமுடையீ ரடிகள்
புள்ளம்பூதங்குடி யிற்போம்.
சீர் பிரித்த பின்
விரும்பினவை எய்தும் வினை அனைத்தும் தீரும்
அரும் பர வீடும் அடைவீர் - பெரும் பொறிகொள்கள்ள பூதம் குடி கொள் காயமுடையீர் அடிகள்
புள்ளம்பூதங்குடி யிற்போம்.
பொருள்
விரும்பினவை = ஆசைப் பட்டவை அனைத்தும்
எய்தும் = அடைவீர்கள்
வினை அனைத்தும் தீரும் = வினை அனைத்தும் தீரும்
பெரும் = பெரிய
பொறிகொள் = பொறிகளை கொண்ட
கள்ள பூதம் குடி கொள் = கள்ளத்தனமான பூதங்கள் குடி கொண்டுள்ள
காயமுடையீர் = உடம்பை உடைய
அடிகள் = அடியவர்களே
புள்ளம்பூதங்குடி யிற்போம் = புள்ள பூதக்குடி என்ற திரு தலத்துக்கு போங்கள்
இந்த ஊர் எங்கிருக்கிறது ? இதற்கு ஏன் இந்த பெயர் வந்தது ? இந்த பெயருக்கு என்ன அர்த்தம் ?
கும்பகோணத்துக்கு பக்கத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து டவுன் பஸ்ஸில் போய் விடலாம். சுவாமி மலைக்கு ரொம்ப பக்கம்.
புள் என்றால் பறவை.
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு.
என்பார் வள்ளுவர்.
தான் இருந்த கூட்டை விட்டு எப்படி பறவை பறந்து போய் விடுகிறதோ, அது போலத் தான், இந்த உடல் என்ற கூட்டை விட்டு உயிர் பறந்து போய் விடும் என்பது கருத்து.
தையலாள் ஒருபாகம் சடைமேலாள் அவளோடும்
ஐயம் தேர்ந்து உழல்வார் ஓர் அந்தணனார் உறையுமிடம்
மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்து
பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.
என்பார் திருஞானசம்பந்தர். மெய் சொல்லாத இராவணனை தோற்று புறம் காணச் செய்த ஜடாயு (என்ற பறவை, புள்) வுக்கு முக்தி தந்த இடம் என்ற பொருளில் புள் இருக்கும் வேளூர் என்ற பெயர் பெற்றது வைத்தீஸ்வரன் கோவில். (திரு புள்ளபூதக் குடி அல்ல).
புள்ளம்பூதக்குடி யை திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
பாடல்
அறிவ தரியா னனைத்துலகும் உடையா னென்னை யாளுடையான்
குறிய மாணி யுருவாய கூத்தன் மன்னி யமருமிடம்,
நறிய மலர்மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட,
பொறிகொள் சிறைவண் டிசைபாடும் புள்ளம் பூதங் குடிதானே! (1348)
பொருள்
அறிவது அறியாது அனைத்து உலகும் உடையாய் என்னை ஆளும் உடையான்
குறிய மாண உருவாய கூத்தன் மன்னி அமரும் இடம்
நறிய மலர் மேல் சுரும் பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும் புள்ளம் பூதக் குடிதானே
சீதையை பிரிந்து , இராமன் காட்டில் அலைந்த போது , ஜடாயுவை சந்தித்து, ஜடாயுவுக்கு முக்தி கொடுத்த இடம் என்பதால் இது புள்ளபூதக்குடி என்று பெயர் பெற்றது. இங்குள்ள இராமருக்கு அருகில் சீதை இல்லை.
நமது இன்றைய வாழ்க்கை, என்றோ நடந்ததாக கூறப் படும் புராண சம்பவங்கள் என்று இரண்டையும் இணைக்கும் பாலங்களாக விளங்குவது இந்த திருக்கோவில்கள்.
ஒவ்வொரு கோவிலும் ஒரு கால இயந்திரம் (time machine ). உங்களை ஒரு நொடியில் புராண காலத்துக்கு கொண்டு செல்லும் அமைப்புகள்.
இந்த கோவிலில் நிற்கும் போது , இங்கு தான் இராமர் இருந்தார், இங்குதான் சீதையை தேடி அலைந்தார், ஜடாயுவுக்கு முக்தி தந்தார் என்று நினைக்கும் போது உடல் சிலிர்க்காதா ?
இம்மை நலன்கள், அத்தனை வினையும் போகும், மறுமை பலனும் கிடைக்கும்.
தஞ்சாவூர் , கும்பகோணம் பக்கம் போனால், புள்ள பூதக்குடிக்கும் போய் வாருங்கள்.
இங்குள்ள விசேஷமான அம்சங்கள் என்று பார்த்தோமானால்,சீதையை காட்டில் தேடி வந்த களைப்போ என்னவோ பழக்கமாக நின்ற திருக்கோலத்தில் இருக்கும் ராமர், இங்கு கிடந்த கோலம்..ஜடாயுக்கு அந்திம காரியங்களை அம்பு வில் இல்லாமல் செய்ததால் ,அப்படியே வில் இல்லாமல் சயனித்தி விட்டாரோ என்னவோ.சீதையை தேடிப்போவதால் அவளும் பக்கத்தில் இல்லை. இருப்பினும் திருமங்கை ஆழ்வாரால் பாட பட்ட புண்ய ஸ்தலம்.
ReplyDeleteசேவிக்க ஆசை .நிறைவேறுமா தெரியவில்லை. மிக்க நன்றி.
என்ன ஒரு சுவை ததும்பும் பெயர், அதற்குப் பின் இனிய ஒரு கதை... ஆகா!
ReplyDeleteவிளக்கத்துக்கு நன்றி.