Thursday, December 28, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாதனூர் - பாகம் 1

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாதனூர் - பாகம் 1 


பக்திமானுக்கு என்ன இலக்கணம் ?

மூன்று வேளை குளிப்பது, இரண்டு வேளை பூஜை செய்வது, கோவிலுக்குப் போவது, வேத பாராயணம் செய்வது, நாள் கிழமை என்றால் விரதம் இருப்பது, பெரியவர்களை வணங்குவது...என்று நாம் ஒரு பட்டியல்  வைத்திருக்கிறோம். இவை எல்லாம் செய்தால் பக்த சிரோன்மணி என்று நமக்குள் ஒரு எண்ணம்.

பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஒரு பட்டியல் தருகிறார்.  அது,

"துன்பம் நிறைந்த இந்த வாழ்க்கையில் இருக்க முயல மாட்டார்கள். பெண்கள் மேல் ஆசை கொண்டு அவர்கள் காம வலையில் விழ மாட்டார்கள். செல்வங்களுக்கு ஆசைப் பட மாட்டார்கள். நான், எனது என்று எண்ண மாட்டார்கள்..."

இப்படியெல்லாம் யார் இருப்பார்கள் ?

"குற்றமற்ற எந்தை அடியார் "

என்கிறார் அவர்.

பாடல்


இடரானவாக்கையிருக்கமுயலார்
மடவார்மயக்கின்மயங்கார் - கடவுளர்க்கு
நாதனூராதரியார் நானெனதென்னா ரமல
னாதனூரெந்தையடியார்.



சீர் பிரித்த பின்

இடரான யாக்கை இருக்க முயலார் 
மடவார் மயக்கின் மயங்கார் - கடவுளர்க்கு 
நாதன் ஊர் ஆதரியார் நான் எனது எண்ணார் அமலன் 
ஆதனூர் எந்தை அடியார் 

பொருள்

இடரான = துன்பம் நிறைந்த

யாக்கை = உடம்பு

இருக்க முயலார் = அதில் இருக்க முயற்சி செய்ய மாட்டார்கள்

மடவார் = மடமை கொண்ட பெண்கள்

மயக்கின் = மயக்கினால்

மயங்கார் = மயங்க மாட்டார்கள்

கடவுளர்க்கு = தேவர்களுக்கு

நாதன் = தலைவன், இந்திரன்

ஊர் = தேவலோகம்

ஆதரியார் = ஆதரிக்க மாட்டார்கள். தேவலோகமே கிடைத்தாலும் அதை விரும்ப மாட்டார்கள்.

நான் எனது எண்ணார் = நான் எனது எண்ண மாட்டார்கள்

அமலன் = மலம் என்றால் குற்றம். அ + மலன் = குற்றம் இல்லாதவன்

ஆதனூர் = ஆதனூரில் இருக்கும்

எந்தை  = என் தந்தை என்பதன் மரூஉ

அடியார் = அடியவர்கள்.


செல்வத்தை சேர்க்க நாளும் பொழுதும் அலைகிறோம். சேர்த்த செல்வத்தில் வீடு , வாசல், நகை , நட்டு என்று வாங்கிப் போட்டு, அவை என் வீடு, என் நகை, என் சொத்து பெருமை படுகிறோம்.  இந்த உடம்பை அழகு செய்ய படாத பாடு படுகிறோம்.  இவற்றை எல்லாம் செய்து கொண்டு நாமும் இறைவன் அடியவர் என்று சொல்லிக் கொண்டு திரிகிறோம்.


ஒரு நாளாவது , செல்வம் வேண்டாம். போதும் என்று நினைக்கவாவது முடியுமா நம்மால். சேர்த்த செல்வம் நமது இல்லை என்று நினைக்க முடியுமா ?

நமக்கும் , உண்மையான அடியவர்களுக்கும் உள்ள தூரம் அதிகம் என்று அறிந்து கொண்டால் போதும்.

முழுவதும் முடியாவிட்டாலும், கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம்.

சரி, அது ஒரு புறம் இருக்கட்டும், இந்த ஆதனூர் எங்கே இருக்கிறது, இந்த ஊரின் சிறப்பு என்ன , ஆழ்வார்கள் யாராவது இந்த தலத்துக்கு மங்களாசானம் செய்திருக்கிறார்களா ? என்பனவற்றை அடுத்த பிளாகில் பார்ப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/1_28.html



1 comment:

  1. பெருமாள் அய்யங்கார் கூறிய பட்டியலை பார்த்ததுமே இது என்ன நடைமுறைக்கு ஒத்துவராத சமாச்சாரமாக இருக்கிறதே என மனக்கிலேசம் அடைந்த போது, நீங்கள் முடிந்தவரை முயற்ச்சிப்போமே எனக்கூறி அச்சத்தை போக்கினீர்கள்.
    அடுத்த பதிவை எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete