நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்பேர்நகர்
நமக்கு ஒவ்வொரு நாளும் எவ்வளவோ வேலை. காலை எழும் போதே இன்று என்னென்ன பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடேயே எழுந்திருக்கிறோம். பிள்ளைகள், அலுவலகம், சமையல் , , பயணம், நெருக்கடி, என்று ஒவ்வொரு நாளும் ஒரு சின்ன போராட்டமாகவே கழிகிறது.
இதற்கு நடுவில் இறைவனை பற்றி சிந்திக்க நேரம் எங்கே இருக்கிறது.
பிள்ளை பெருமாள் ஐயங்கார் சொல்கிறார்...காலையில் எழுந்தவுடன் இறைவனைப் பற்றி சிந்திப்பவர்களுக்கு ஒரு துன்பமும் வராது என்கிறார். இன்னும் சொல்லப் போனால், எழுந்தவுடன் கூட அல்ல, எழும் போதே , இறைவனைப் பற்றி சிந்தித்துக் கொண்டே எழ வேண்டுமாம்.
தெய்வம் தொழாள், கொழுநன் தொழுதெழுவாள் பெய்யென பெய்யும் மழை என்பார் வள்ளுவர்.
கணவனை எழுந்து தொழுவாள் என்று சொல்லவில்லை. தொழுது எழுவாள். முதலில் தொழுவாள், பின் எழுவாள் என்று சொல்கிறார்.
அது போல "இறைவனை சிந்தித்து எழுந்திருப்போர்க்கு உண்டோ இடர் " என்கிறார்.
பாடல்
போமானையெய்துபொருமானைக்கொம்புபறித்
தாமானைமேய்த்துவந்தவம்மானைத் - தாமச்
செழுந்திருப்பேரானைச் சிறுகாலைச்சிந்தித்
தெழுந்திருப்பேற்குண்டோவிடர்.
சீர்பொ பிரித்த பின்
போமானை எய்து பெரும் ஆனை கொம்பு பறித்து
ஆம் ஆனை மேய்த்து உவந்த அம்மானை - தாம
செழு திரு பேரானை சிறுகாலை சிந்தித்து
எழுந்திருப்போர்க்கு உண்டோ இடர்
பொருள்
போமானை = போ + மானை = போகின்ற மானை. மாரீசன் என்ற மானை
எய்து = அம்பால் எய்து
பெரும் ஆனை = குவாலய பீடம் என்ற பெரிய யானையை
கொம்பு = தந்தத்தை
பறித்து = உடைத்து
ஆம் ஆனை = பசு கூட்டங்களை
மேய்த்து = மேய்த்து
உவந்த = மகிழ்ச்சி கொண்ட
அம்மானை = அம்மானை
தாம = இடம், தலம்
செழு திரு பேரானை = செழுமையான திருப்பேர் என்ற தலத்தில் எழுதருளி இருக்கும் பெருமானை
சிறுகாலை = அதி காலை
சிந்தித்து = சிந்தித்து
எழுந்திருப்போர்க்கு = எழுந்திருப்போர்க்கு
உண்டோ இடர் = துன்பம் உண்டா ? (இல்லை)
சிறுகாலை ...அதிகாலை, ஐந்து நாழிகைக்கு முற்பட்ட நேரம். சாத்வீக குணம் மிகுந்து இருக்கும் நேரம் என்று சொல்கிறார்கள்.
சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவிப்போம் என்கிறாள் ஆண்டாள்.
சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
முதலில் அதி காலை எழ வேண்டும்.
இரண்டாவது, எழுந்திருக்கும் போதே இறைவனை சிந்தித்து எழ வேண்டும் .
இந்தக் கோவில் எங்கிருக்கிறது தெரியுமா ?
திருச்சிக்கு பக்கத்தில், லால்குடிக்கு அருகில் , 10 km தொலைவில் உள்ளது. டவுன் பஸ்ஸில் போய் விடலாம். கோவில் வாசலில் பேருந்து நிற்கும்.
பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேனேன்று என்னெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையேழ்லுல குண்டும்
ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே (3745)
என்று நம்மாழவாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம்.
ஒரு முறை உபமன்யு என்ற அரசன் துர்வாச முனிவரின் சாபத்தால் பலம் குன்றி இருந்தான். இலட்சம் பேருக்கு அன்ன தானம் அளித்தால் சாப விமோச்சனம் கிடைக்கும் என்பதால், இந்தத் தலத்தில் வந்து தினமும் பலருக்கு அன்ன தானம் வழங்கி வந்தான்.
அப்படி இருக்கும் போது ஒரு நாள், பெருமாள் ஒரு கிழ அந்தணர் வடிவில் அன்ன தானம் பெற வந்தார். ஒரே ஆள் அனைத்து அன்னத்தையும் உண்டு விட்டார். அதைக் கண்டு வியந்த மன்னன், "தங்களுக்கு மேலும் என்ன வேண்டும் " என்று கேட்டான். பெருமாள், ஒரு குடம் அப்பம் வேண்டும் என்று கேட்டதாகவும் , ஒரு குடம் அப்பம் உண்ட பின், பசி அடங்கியதாகவும் வரலாறு கூறுகிறது.
இங்குள்ள பெருமாளின் பெயர் அப்ப குடத்தான்.
கையில் அப்ப குடத்துடன் காட்சி தருகிறார்.
திருச்சி பக்கம் போனால், சென்று வாருங்கள். லால்குடி, கல்லணைக்கு பக்கம். கோவிலடி என்று இந்த தலத்துக்கு இன்னொரு பெயரும் உண்டு.
காலையில் முக்கால்வாசி நாட்கள் பகவான் பேரை சொல்லிக்கொண்டுதான் எழுந்திருப்பது. வழக்கம். சிந்திப்பது மிக குறைவு. சோம்பல் முடிப்பது போல.பெருமாள்அய்யங்கார் உங்கள் வாயிலாக தப்பி உணர்த்தி விட்டார். அப்பகுடத்தானை நேரில் சேவித்த பாக்கியம் உண்டு.
ReplyDeleteஎழுத்து பிழை ஏற்பட்டுவிட்டது.முறிப்பதை,தப்பை என்று கொள்ளவேண்டும்
ReplyDeleteகாலை எழுந்திருக்கும்போது, "இன்று என்ன செய்ய வேண்டும்" என்ற எண்ணத்திலேயே எழுந்திருக்கிறேன். எழுந்தவுடன் email , whatsapp , BBC செய்திகள் என்று படிக்காத தொடங்குகிறேன். ஒரு நிமிட நேரம் எடுத்து, மனதை நிலைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteநன்றி.