கம்ப இராமாயணம் - ஒத்தது
வெற்றி பெற்று விட்டால், "என்னைப் போல் யார் உண்டு. நான் எவ்வளவு திறமைசாலி தெரியுமா " என்று நினைப்பதும், தோல்வி அடைந்து விட்டால் ஏதோ இந்த உலகமே தனக்கு எதிராக சதி செய்வது போலவும் நினைப்பது மனித இயல்பு.
வெற்றிக்கும் தோல்விக்கும் நாம் ஒருவர் மட்டுமே காரணம் ஆகி விட முடியாது. வெற்றியோ தோல்வியோ அதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். சரியான நேரத்தில் அல்லது பிழையான நேரத்தில் எடுத்த முடிவுகள், ஒவ்வொரு முடிவுக்குப் பின்னாலும் நாம் செய்யும் ஆராய்ச்சி, துணை, நட்பு, இப்படி பல விஷயங்கள் ஒன்று சேர்ந்து நம் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன.
எப்படி வெற்றிக்கு நாம் முழு காரணம் இல்லையோ, தோல்விக்கும் நாம் முழு காரணம் இல்லை.
ஆனால் இது வெற்றி வரும் போது புரிவது இல்லை. வெற்றி வரும் போது தலை கால் தெரியாமல் ஆடுவது. அப்படி என்றால் தோல்வி வரும் போது துவண்டு போவது என்பது கட்டாயம்.
முதல் நாள் போரில் இராவணன் தோல்வி அடைந்து அரண்மனைக்கு வருகிறான்.
அவன் எப்பேர்பட்டவன் ? நமது வாழ்க்கையை கோள்கள் தீர்மானிக்கின்றன. கோள்களின் வாழ்க்கையை தீர்மானம் செய்தவன் இராவணன். ஒன்பது கோள்களையும் பிடித்து வந்து தனது அரியணை படியில் படுக்க வைத்து அவற்றின் மேல் ஏறி நடந்து செல்வான் அவன். அவ்வளவு ஆற்றல்.
அந்த வெற்றிக்குக் காரணம் யார் ?
அவன் செய்த தவத்தால் கொற்றவை என்ற ஒரு பெண் தெய்வம் அவனை நோக்கிக் கொண்டே இருந்தாள். அவள் பார்வை அவன் மேல் படும் வரை அவனுக்கு வெற்றி வந்து கொண்டு இருந்தது. அவள் பார்வையை திருப்பினாள். அவன் வெற்றி போய் விட்டது.
துவண்டு போய் வருகிறான். வருகிற வழியில் அழகான பெண்கள் அவனைப் பார்க்கிறார்கள். அவர்கள் பார்வை எல்லாம் கூரிய வாளைப் போல இருக்கிறது. பிள்ளைகள் பேசுவது கூட இராமனின் அம்பு போல குத்துகிறது. வாடுகிறான்.
பாடல்
நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் நயனம் எல்லாம
வாள் ஒத்த; மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த;--
கோள் ஒத்த சிறை வைத்து ஆண்ட கொற்றவற்கு, அற்றைநாள், தன்
தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்குத் தொடர்கிலாமை.
பொருள்
நாள் ஒத்த = நாளில் மலர்ந்த தாமரை மலரைப் போன்ற
நளினம் அன்ன = அழகான
முகத்தியர் = முகத்தைக் கொண்ட பெண்களின்
நயனம் எல்லாம் = கண்கள் எல்லாம்
வாள் ஒத்த; = கூர்மையான வாளைப் போல இருந்தன (இராவணனுக்கு)
மைந்தர் வார்த்தை = பிள்ளைகளின் பேச்சு
இராகவன் வாளி ஒத்த = இராமனின் அம்பை போல துன்பம் செய்தன
கோள் ஒத்த = ஒன்பது கோள்களையும்
சிறை வைத்து = சிறை வைத்த்து
ஆண்ட = ஆட்சி செய்த
கொற்றவற்கு = மன்னனுக்கு
அற்றைநாள் = அந்த நாள்
தன் = தன்னுடைய
தோள் ஒத்த = தோள்களை போல (மதர்த்து நின்ற)
துணை = துணையான இரண்டு
மென் = மென்மையான
கொங்கை = மார்பகங்களைக் கொண்ட (கொற்றவையின்)
நோக்கு = பார்வை
அங்குத் தொடர்கிலாமை = அங்கு தொடர்ந்து வராமையால்
சில பாடங்கள்
முதலாவது, வாழ்வில் வெற்றி தோல்வி வரும் போகும். கிரகங்களை கட்டி ஆண்ட இராவணனுக்கு தோல்வி வரும் என்றால் நாம் எம்மாத்திரம். ஏதோ நாம் தான் உலகிலேயே பெரிய பலசாலி, புத்திசாலி என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.
இரண்டாவது, வெற்றியில் ஆடினால், தோல்வியில் மனைவியின் அன்பு பார்வை கூட சுட்டெரிப்பது போல இருக்கும்.பிள்ளைகளின் மழலை கூட துன்பம் தரும். நிதானம் வேண்டும்.
மூன்றாவது, வெற்றியும் தோல்வியும் நம் கையில் இல்லை. அதிர்ஷட தேவதையின் பார்வை திரும்பினால் ஆனானப் பட்டவனும் தோல்வியை ருசிக்கத்தான் வேண்டி இருக்கும்.
நான்காவது, நாம் நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் நமது மற்றும் அவர்களின் வெற்றி தோல்வியை வைத்ததே எடை போடுகிறோம். பிள்ளைகள் நல்ல மார்க் வாங்க வேண்டும், கணவன் நிறைய சம்பாதிக்க வேண்டும், மனைவி சினிமாவில் வரும் நடிகை மாதிரி அழகாக இருக்க வேண்டும்...இதில் எதுவும் குறைந்தால் நமக்கு வருத்தம் வருகிறது. பிள்ளைகள், மார்க் குறைந்தால் பெற்றோரின் அன்பை இழந்து விடுவோமோ என்று கவலைப் படுகிறார்கள். வேலை போய் விட்டால் மனைவி நம்மை மதிப்பாளோ மாட்டாளோ என்று கணவன் பயப்படுகிறான். வேலையில் சம்பள உயர்வு வரவில்லை என்றால் நம்மை நாமே குறைத்து மதிப்பிடுகிறோம். இது மாற வேண்டும். வெற்றியோ தோல்வியோ, மனிதர்களை மனிதர்களாக மதிக்க, நேசிக்க கற்க வேண்டும். முதலில் நம்மை நாம் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். வெற்றி தோல்வி எது வந்தாலும் நீங்கள் நல்லவர், அன்பானவர், இனிமையானவர் என்ற எண்ணம் வேண்டும்.
இல்லை என்றால் , தோல்வி வந்தால் மனைவி முகமும் கத்தி போல அறுக்கும், பிள்ளைகள் குரலும் அம்பு போல குத்தும். அது
அது அரக்க குணம். நாம் அரக்கர்கள் இல்லையே. அந்த குணம் நமக்கு எதுக்கு.
வெற்றி தோல்விகளை தள்ளி வைத்து விட்டு வாழ்வை நேசிக்க கற்போம்.
https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_21.html
வாழ்க்கைப் பாடங்களை விட, இராவணனின் மன நிலையை இந்தப் பாடல் அருமையாகத் தருகின்றது என்று எண்ணுகிறேன்.
ReplyDeleteநன்றி.