நளவெண்பா - இதெல்லாம் ஒரு பெரிய துன்பமா ?
நாம் நினைக்கிறோம், நமக்கு வந்த துன்பங்கள்தான் உலகிலேயே பெரிய துன்பம் என்று. வேறு யாருக்கும் இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்தது இல்லை என்று நாம் நினைக்கிறோம்.
அப்படி அல்ல. நம்மை விட பலப் பல மடங்கு துன்பப் பட்டவர்கள், படுகிறவர்கள் இருக்கிறார்கள் இந்த உலகில். அதை எல்லாம் நினைத்துப் பார்த்தால் , நம் துன்பம் ஒன்றும் பெரிதல்ல என்று நமக்கு விளங்கும்.
அப்படி மற்றவர்கள் துன்பத்தை அறியும் போது, "வாழ்வில் துன்பம் என்பது ஒரு பகுதி. இது எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் வரத்தான் செய்கிறது" என்ற எண்ணமும் , அதனால் துன்பத்தை ஏற்றுக் கொள்ளும் ஒரு பக்குவமும் வந்து சேரும்.
எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பெரிய துன்பம் என்று தருமன் , வேத வியாசரை கேட்டான்.
அதற்கு வியாசர் "நீ நினைக்கிறாய் ஏதோ உனக்குத்தான் பெரிய துன்பம் வந்து விட்டது என்று. உன்னை விட அதிகம் துன்பப் பட்டவர்கள் இருக்கிறார்கள். நள மன்னன் என்று ஒருவன் இருந்தான். அவன் கதையை சொல்கிறேன் கேள்" என்று நள மன்னனின் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.
பாடல்
சேமவேல் மன்னனுக்கச் செப்புவான் செந்தனிக்கோல்
நாமவேல் காளை நளனென்பான் - யாமத்
தொலியாழி வையம் ஒருங்கிழப்பப் பண்டு
கலியான் விளைந்த கதை.
பொருள்
சேம = சேமம், நல்லது , இதம்
வேல் = வேல். மக்களுக்கு நல்லது செய்வதற்காக ஏந்திய வேல்
மன்னனுக்கச் = மன்னனுக்கு (தருமனுக்கு)
செப்புவான் = சொல்லுவான்
செந்தனிக்கோல் = செம்மையான, தனிச் சிறப்பு வாய்ந்த
நாமவேல் = நாமத்தைக் கொண்ட
காளை = காளை போல பலம் கொண்ட
நளனென்பான் = நளன் என்ற ஒருவன்
யாமத் = நள்ளிரவிலும்
தொலி = ஒலி எழுப்பும்
யாழி = கடல் சூழ்ந்த
வையம் = உலகம்
ஒருங்கிழப்பப் = ஒன்றாக இழந்து
பண்டு = முன்பு
கலியான் = சனி பகவானால்
விளைந்த கதை = நிகழ்ந்த கதை
உலகம் அனைத்தையும், கடல் சூழ்ந்த இந்த உலகம் அனைத்தையும் , அதோடு கூடிய மற்றைய செல்வங்களையும் (அதிகாரம், புகழ் ) ஒரே சமயத்தில் இழந்தான் நளன்.
நளன் கதையை கேட்டால் நமக்கே கண்ணீர் வரும்.
நளனின் கதையை சொல்லத் தொடங்குகிறார் வியாசர்.
கேட்போமா ?
https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_85.html
சுவாரசியமாக எடுத்து செல்கிறீர்கள்
ReplyDelete