நளவெண்பா - கல்லாதனவும் கரவு
ஒரு செய்தியை சொல்வதென்றால் அதை சுவை பட கூற வேண்டும். அழகாக, எளிமையாக, இரசிக்கும் படி சொல்ல வேண்டும்.
ஆங்கிலத்தில் presentation skills என்று சொல்லுவார்கள்.
எவ்வளவுதான் படித்து, அனுபவம் இருந்தாலும் சரியாக பேச, சொல்ல வரவில்லை என்றால் வாழ்வில் முன்னுக்கு வருவது மிகக் கடினம்.
நன்றாக பேசத் தெரிய வேண்டும். தனக்குத் தெரிந்ததை அழகாக வெளிப் படுத்தத் தெரிய வேண்டும்.
அதற்கு இலக்கியம் மிகவும் துணை செய்யும்.
இலக்கியம் படிக்க படிக்க நம் சொல்லிலும் பேச்சிலும் ஒரு அழகு ஏறும். கற்பனை விரியும். வார்த்தைகள் வசப்படும்.
உதாரணமாக, ஒரு நாடு நல்ல நாடு என்று சொல்ல வேண்டும். எப்படி சொல்லுவது ?
அங்கே நல்ல விளைச்சல் இருக்கிறது, அங்கே குற்றங்கள் குறைவாக இருக்கிறது, நல்ல வருமானம் இருக்கிறது என்றெல்லாம் சொல்லலாம்.
அதில் ஒரு அழகு இருக்கிறதா ?
புகழேந்தி சொல்கிறார் பாருங்கள்.
"அந்த ஊரில் மக்களுக்குத் தெரிந்தது எல்லாம் நல்ல நூல்களே. அவர்களுக்கு தெரியாததும் உண்டு. அது என்ன தெரியுமா, பெண்களின் இடை. அது இருக்கிறதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. அந்த ஊரில் இல்லாதது அப்படினு சொன்னா அது பிச்சை எடுப்பதுதான். பிச்சைக்காரர்களே கிடையாது. அந்த ஊர் மக்கள் பிடிக்காது என்று ஒன்று உண்டு என்றால் அது வஞ்சக செயல்களே"
பாடல்
தெரிவனநூல் என்றும் தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே - ஒருபொழுதும்
இல்லா தனவும் இரவே இகழ்ந்தெவரும்
கல்லா தனவும் கரவு.
பொருள்
தெரிவனநூல் = மக்கள் தெரிந்து கொள்வது நல்ல நூல்களை
என்றும் = எப்போதும்
தெரியா தனவும் = தெரியாமல் இருப்பது
வரிவளையார் = வளையல்களை அணிந்த பெண்கள்
தங்கள் மருங்கே = அவர்களின் இடையே
ஒருபொழுதும் = ஒரு பொழுதும்
இல்லா தனவும் இரவே = இல்லாமல் இருப்பது பிச்சை எடுப்பதே
இகழ்ந்தெவரும் = சிறுமை என்று கருதி
கல்லா தனவும் கரவு = மக்கள் படிக்காமல் இருந்தது வஞ்சக செயல்களே
மக்கள் எல்லோரும் மிகப் படித்தவர்கள். பெண்கள் எல்லோரும் மிக அழகானவர்கள். எல்லோரிடமும் மிகுந்த செல்வம் இருக்கிறது. எனவே பிச்சி எடுப்பவர் என்று யாருமே இல்லை. மக்கள் எல்லோரும் நல்லவர்கள். வஞ்சக செயல் என்றால் என்ன என்றே அவர்கள் அறிந்து இருக்கவில்லை.
என்ன ஒரு நயம். என்ன ஒரு அழகு. சொல் நேர்த்தி.
இனிமையாக ,அழகாக பேசி, எழுதிப் பழகுவோம். அதற்கு பயிற்சி பெற நல்ல இலக்கியங்களை புரட்டுவோம்.
அது வாழ்க்கையை இனிமையாக்கும். நம்மை உயர்ந்த இடத்துக்கு கொண்டு போகும்.
https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_13.html
நாலே வரிகளில் அந்த ஊரை உச்சாணி கொம்பில் வைத்து விட்டாரே! பிரமாதம்.
ReplyDelete