Tuesday, July 16, 2019

திருவாசகம் - பால் நினைந்து ஊட்டும்

திருவாசகம்  - பால் நினைந்து ஊட்டும் 


பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, 
பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, 
உலப்பு இலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; 
எங்கு எழுந்தருளுவது, இனியே?

முன்பு எப்போதோ எழுதிய ப்ளாக் லிங்க் கீழே உள்ளது.


http://interestingtamilpoems.blogspot.com/2014/07/blog-post_9060.html

இப்போது எழுத நினைத்தது வேறு.

பால் நினைந்து ஊட்டும்.

குழந்தைக்கு பசிக்குமே என்று, குழந்தை அழு முன் அவளுக்கு பால் தரும் தாய் என்று ஒரு பொருள்.

பால் தர வேண்டுமே தர வேண்டுமே நினைப்பால் அவளுக்கு பால் சுரக்கிறது.

இன்றைய கால நெருக்கடியில் பெரும்பாலான பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் பால் தருவதற்கு போதிய காலம் விடுப்பு கிடைப்பதில்லை. அவளின் நினைப்பு எல்லாம், "இன்னும் இரண்டு அல்லது மூணு மாதத்தில்  வேலைக்குப் போக வேண்டும். விடுமுறை தீர்ந்து விடும். அதற்கு முன்பே பிள்ளைக்கு  புட்டி பாலை பழக்க படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் பின்னால்  பிள்ளை ரொம்ப சிரமப் படுவான்/ள்" என்று எண்ணம் எல்லாம்  புட்டி பாலின் மேலேயே இருக்கிறது.  எவ்வளவு சீக்கிரம் புட்டி பாலுக்கு மாற்ற முடியுமோ  அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது என்று நினைக்கிறாள்.

எங்கிருந்து பால் சுரக்கும்?

அது ஒருபுறம் இருக்க, சில பெண்கள், சிறுபான்மை பெண்கள், பால் கொடுத்தால்  அழகு கெட்டு விடும் என்று நினைக்கிறார்கள். அதனால், எப்படி கொடுப்பதை  குறைக்கலாம், எவ்வளவு சீக்கிரம் நிறுத்தலாம், என்றே எண்ணம்  ஓடுகிறது.

எங்கிருந்து பால் சுரக்கும்?

"பால் நினைந்து" என்றார் மணிவாசகர்.

புட்டியை நினைந்து என்றோ, அழகை நினைந்து என்றோ சொல்லவில்லை.

காலத்தின் கட்டாயம் தாய்மையின் இயற்கை உணர்வும் தடம் மாறிப் போய் கொண்டிருக்கிறது.

நான் சொல்ல வந்தது அது அல்ல.

பால் தர வேண்டும் என்று நினைத்தால் பால் சுரக்கும்.

இராம கிருஷ்ண பரமஹம்சர், கல்கத்தா காளியை நினைத்து உருகுவாராம். அப்போது அவருக்கு பால் சுரக்குமாம்.


மனதில் என்ன நினைக்கிறோமோ அது நடக்கும்.

நடந்தே தீரும்.

ஒன்று நடக்க வேண்டும் என்றால், அதை மனதில் தீவிரமாக நினைக்க வேண்டும்.

மனதில் நினைப்பது மாதிரி உடல் மாறும். உடல் என்றால் உடல் மட்டும் அல்ல, நம் அறிவும், ஆற்றலும், திறமையும் எல்லாம் மாறும்.

இலக்குவன்  கானகம் போக விடை கேட்டு நிற்கிறான். "இராமன் திரும்பி வந்தால்  அவனுடன் வா. இல்லையேல், அவனுக்கு முன் நீ முடி" என்று விடை கொடுத்து  அனுப்புகிறாள்.

அவள் தாய்மை பொங்கி வருகிறது. அந்த நிலையில் அவளுக்கு பால் சுரந்தது  என்கிறான் கம்பன்.


பின்னும் பகர்வாள், ‘மகனே!
    இவன் பின் செல்; தம்பி
என்னும்படி அன்று; அடியாரினில்
    ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின்
    வா; அது அன்றேல்
முன்னம் முடி; ‘ என்றனள்
    பால் முலை சோர நின்றாள்.


அத்தனை வயதில் பால் சுரக்க வாய்ப்பில்லை. இருந்தும், மனதில் பிறந்த  மகன் மேல் உள்ள காதலால் பால் சுரந்தது. 

நாம் எதை நினைக்கிறோமோ, அதை முடித்துக் கொடுக்கும் வன்மை நம் மனதுக்கு உண்டு. 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் 
திண்ணியர் ஆகப் பெறின் 

நினைத்தது, நினைத்தபடியே நடக்கும் என்று வள்ளுவர் உறுதி கூறுகிறார். 

வெள்ளத்து அணையது மலர் நீட்டம் மாந்தர் தம் 
உள்ளத்து அணையது உயர்வு 

என்பதும் அவர் வாக்கே. 

"நினைவு நல்லது வேண்டும் " என்பான் பாரதி. 

எவ்வளவு பெரிய ஆளாக வேண்டும் ? பணம், செல்வாக்கு, புகழ், முக்தி என்று என்று எது வேண்டுமோ....அதை கேளுங்கள். 

கேளுங்கள் கொடுக்கப்படும் என்றார் இயேசு பிரான். 

தெளிவாக கேளுங்கள். என்ன வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று கேளுங்கள். நம்பிக்கையோடு கேளுங்கள். 

"திண்ணியராகப் பெறின்" என்பதுதான் இங்கே முக்கியம். 

நம்பிக்கை. உறுதி. 

எதை நினைக்கிறோம், அது நடந்தே தீரும். 

"பால் நினைந்து" ஊட்டும்.

மணிவாசகரின் இரண்டு வார்த்தைக்குள் எவ்வளவு பெரிய பேருண்மை புதைந்து  கிடக்கிறது. 

திருவாசகம் முழுவதும் படித்தால்?.....

படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_16.html

2 comments:

  1. இந்த உரையின் நோக்கம் இதுவல்ல என்றாலும், நாம் சில செய்திகளை சரிப்படுத்த வேண்டி இருக்கிறது. இல்லை என்றால் இந்த மாதிரி எண்ணங்கள் சமுதாயத்தில் நிலைத்து நின்றுவிடும்.

    1. பெண்கள் தனது பாலை எடுத்து புட்டியில் சேமித்து அதைக் குழந்தைக்கு ஊட்ட முடியும்.
    2. ஆண்களுக்குப் பால் வர முடியவே முடியாது - அவர்கள் இராமக்ரிஷ்ணராய் இருந்தாலும் சரி, காளியை எண்ணினாலும் சரி.
    3. குழந்தை பிறக்காமல் பால் சுரந்தால் அது சரியல்ல.

    கீழே காண்க...

    https://www.healthline.com/health/pregnancy/lactating-not-pregnant#treatment

    ReplyDelete
  2. நினைவுகளின் வழியாகவே நம்உடல் இயக்கப்படுகிறது

    ReplyDelete