Monday, July 8, 2019

திருவாசகம் - பொன்னூசல் ஆடாமோ

திருவாசகம் - பொன்னூசல் ஆடாமோ 


முன்பெல்லாம் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் தேவாரம், திருவாசகம் போன்ற உயர்ந்த பாடல்களை பாடுவார்கள். எப்போதும் கேட்காவிட்டாலும், இது போன்ற சமயங்களிலாவது கேட்கட்டுமே என்று இவை பாடப்பட்டது.

அது மட்டும் அல்ல, உயர்ந்த சிந்தனைகள், இனிய தமிழ், பக்தி இவை எல்லாம் எல்லோரையும் போய் சேர வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமும் காரணம்.

இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பாடுவதற்காகவே மணிவாசகர் பொன்னூஞ்சல், பொற் சுண்ணம் இடித்தல் என்று பல பாடல்கள் பாடி இருக்கிறார்.

அத்தனையும் தேன் சொட்டும் பாடல்கள்.

இப்போது இரண்டு மாற்றங்கள் வந்துவிட்டன.

ஒன்று, மங்கல விழாக்களில் பாடப்பட்ட தேவராம் , திருவாசகம் போன்றவை இப்போது அமங்கல நிகழ்ச்சிகளில் பாடப் படுகிறது. ஓதுவாரை கூட்டி வந்து , மரண சடங்குகளில் பாட வைக்கிறார்கள்.

இரண்டாவது, மங்கல விழாக்களில் கர்ண கடூரமாய் சினிமா பாடல்கள் காதை கிழிக்கின்றன. அர்த்தம் இல்லாத, பாலுணர்ச்சியை தூண்டும் பாடல்களை பாடி ஆண் பெண், முதியவர், குழந்தைகள் என்று பாரபட்சம் இல்லாமல் எல்லோரும் ஒன்றாக கேட்கிறறார்கள். யாருக்கும் ஒரு உறுத்தலும் இல்லை.

நீரும், நிலமும், காற்று மாசு படுவது போல மனங்களும் மாசு பட்டுக் கொண்டே இருக்கின்றன.  என்ன செய்வது. சூழ்நிலை அப்படி.

திருமண விழாக்களில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒரு ஊஞ்சலில் அமர வைத்து, லேசாக ஆட்டி விட்டு, பாடல் பாடுவார்கள்.

மணிவாசகரின் பொன்னூஞ்சல் பாடல் இதோ "ஆடு"கிறது.

பாடல்

மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.


பொருள்


மாதாடு பாகத்தன்  = பெண்ணை ஒரு பாகத்தில் கொண்டு ஆடுபவன்

உத்தர கோசமங்கைத் = திரு உத்திர கோசை என்ற திருத்தலத்தில் எழுந்து அருளி இருப்பவன்

தாதாடு = மகரந்தம் ஆடும்

கொன்றைச் = கொன்றை மலர் சூடிய

சடையான் = சடை முடியை உடையவன்

அடியாருள் = அடியவர்களுக்குள்ளே

கோதாட்டி = சீராட்டி

நாயேனை = நாய் போல கீழான என்னை

ஆட்கொண்டென் = ஆட்கொண்டு என்

தொல்பிறவித் = பழைய பிறவி

தீதோடா = தீது + ஓடா = தீது தொடர்ந்து ஓடி வந்து பற்றிக் கொள்ளாமல்

வண்ணந் = அப்படி

 திகழப் = நடக்க

பிறப்பறுப்பான் = இனி வரும் பிறவிகளை வராமல் அந்தத் தொடர்பை அறுப்பவன்

காதாடு  =காதில் ஆடும்

குண்டலங்கள் = குண்டலங்கள்

பாடிக்  = பாடி

கசிந்தன்பால் = கசிந்து அன்பால்

போதாடு  = போது என்றால் மலர். மலர் ஆடும்

பூண்முலையீர் = ஆபரணங்களை அணிந்த மார்பை உடைய பெண்களே

பொன்னூசல் ஆடாமோ. = பொன்னூசல் ஆடாமோ. ஆடுவோம்.



மாதாடு  = மாது ஆட
தாதாடு  = தாது (மகரந்தம்) ஆட
கோதாட்டி  = சீராட்டி
தீதோடா  = தீது ஓட
காதாடு  = காது ஆட
போதாடு  = போது (மலர்) ஆட

எத்தனை ஆட்டம்.

பக்தியை விடுங்கள்.   கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சையை விடுங்கள்.

தமிழ் எவ்வளவு இனிமையாக இருக்கிறது.

பக்தியும், இறை உணர்வும், தமிழும், வாழ்க்கை முறையும் ஒரு புள்ளியில் நிற்கும் அந்த   அதிசயம், எவ்வளவு இனிமையாக இருக்கிறது.

எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள்.

மாதாடு - ஆண் என்றும் பெண் என்றும் யாரும் கிடையாது. ஆணுக்குள் பெண் உண்டு. பெண்ணுக்குள் ஆணுண்டு. எல்லோருமே இரண்டும் கலந்த கலவைதான். ஆணுக்குள் உள்ள பெண்ணை அடக்கி வைக்கிறோம். பெண்ணுக்குள் உள்ள  ஆணையும் அடக்கி வைக்கிறோம்.

எது அடக்கப் பட்டதோ, அது வெளிவர காத்திருக்கும். நீருக்குள் பந்தை அமுக்கி வைத்து இருப்பது போல.  எப்படா கையை எடுப்போம் என்று இருக்கும். எடுத்தவுடன் துள்ளிக் கொண்டு வெளியில் வரும்.

ஒவ்வொரு ஆணும், தனக்குள் இருக்கும் பெண்ணை வெளியே தேடி அலைகிறான்.

ஒவ்வொரு பெண்ணும், தனக்குள் இருக்கும் ஆணை வெளியே தேடி அலைகிறாள்.

வெளியில் உள்ள எந்த ஆணும், எந்த பெண்ணும் உள்ளுக்குள் இருக்கும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ ஈடாகாது.

எது கிடைத்தாலும் திருப்தி இருக்காது.  தேடல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இது அல்ல நான் தேடிய பெண்/ஆண் என்று ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அலைந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

அர்த்த நாரீஸ்வரர் தத்துவம் அதுதான்.

மாதொரு பாகன் உணர்த்துவது அதைத்தான்.

திருவாசகம் ஒரு கடல்.

ஒரு வாழ்நாள் போதாது படித்து உணர.

மூல நூலை தேடிப் பிடித்து படித்துப் பாருங்கள்.

ஊன் உருகும். உயிர் உருகும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_57.html

5 comments:

  1. ஆஹா அருமை. தமிழ்ச்சுவையும், மாணிக்கவாசகரின் தேன்சுவையும் நாடறிந்த விடயம். ஆனால் நீங்கள் அவற்றை மேலும் மெருகூட்டிச் சொல்லுமழகே அழகு ! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. ஒரு ஊஞ்சல் ஆடிக்கொண்டே, ஒரு இருபது முப்பது பெண்கள் சுற்றி நின்று இந்தப் பாடலை மெதுவாகப் பாடுவது போல எண்ணிப் பார்த்தால் புல்லரிக்கிறது! நன்றி.

    ReplyDelete
  3. தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  4. அர்த்தசாம பூஜை பள்ளியறைஆரத்தியின் போது மிக சிறப்பாக பாடும் பாடல்!
    விளக்கங்கள் மிக அருமை நன்றி!
    சிவனருளால் தொடரட்டும் உங்கள் தொண்டு.

    ReplyDelete
  5. பாடல் பாடிய ஆடியோ கிடைக்குமா

    ReplyDelete