Sunday, July 28, 2019

திருக்கடை காப்பு - வேதியற்கு விளம்பாயே

திருக்கடை காப்பு - வேதியற்கு விளம்பாயே


சில பாடல்கள் ஏன் பிடித்திருக்கிறது என்று கேட்டால், எனக்குச் சொல்லத் தெரியாது. என்னவோ ஒன்று அந்தப் பாட்டில் இருக்கிறது. என்ன என்று சுட்டி கூற முடிவதில்லை.

என்னவோ பிடித்திருக்கிறது. அவ்வளவுதான்.

என் நண்பர்கள் கேப்டது உண்டு..."என்ன எப்பப் பார்த்தாலும் சாமி, பூதம் என்று அதையே திருப்பி திருப்பி எழுதிக் கொண்டிருக்கிறாய் ...மனித உணர்வுகள், உறவுகள், அதில் எழும் சிக்கல்கள் பற்றி நம் தமிழ் இலக்கியம் என்ன கூறுகிறது என்று எழுதக் கூடாதா " என்று.

அவர்கள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. இருந்தாலும், பக்திப் பாடல்களில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.

அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்விய பிரபந்தம் படிக்கும் போது இப்பவும் மனம் நிறைந்து கண்ணில் நீர் தழும்புவது நிகழாமல் இல்லை.

தெளிந்த குளத்தில் சிறு கல் விழுந்தால், வட்ட வட்டமாக அலை பரவுவதைப் போல, சில பாடல்கள் படித்து முடித்து பல மணி நேரம் கழிந்தும் மனதுக்குள் அலை அடித்துக் கொண்டிருக்கும்.

அப்படிப் பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.

திருஞான சம்பந்தர் பாடிய திருக்கடை காப்பில் உள்ளது இந்தப் பாடல்.

ஆன்மீகம், இறை உணர்வு, சமய உணர்வு, உண்மைத் தேடல், நான் என்று அறியும் வேட்கை இவற்றிற்கு நாமே தேடி விடை கண்டு கொள்ள முடியுமா? சிலரால் அது முடியுமாக இருக்கும். எல்லோராலும் அது முடியாத காரியம்.

பின் என்ன செய்வது?

கண்டு தெளிந்தவர்களை பிடித்து, அவர்கள் மூலம் தெரிந்து கொள்வது எளிய வழி.

ஞான சம்பந்தர் சொல்கிறார்


"குருகே (நீர் பறவை) , என் பசலை நோய் அவனுக்குத் தெரியாமல் போனது என் வினைப் பயனே. நீ போய் சொல்லு, இப்படி நான் அவன் நினைவாகவே இருக்கிறேன் என்று". என்று குருகை தூது விடுகிறார்.

இறைவன் இருக்கும் இடம் எனக்குத் தெரியாது. உனக்குத் (ஆச்சாரியனுக்கு) தெரியும். எனவே, எங்கள் இரண்டு பேரையும் சேர்த்து வைக்க மாட்டாயா என்று வேண்டுகிறார்.


பாடல்

எறிசுறவங் கழிக்கான லிளங்குருகே யென்பயலை
அறிவுறா தொழிவதுவு மருவினையேன் பயனன்றே
செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும்
வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே.


பொருள்

எறிசுறவங்  = எதிரில் வரும் மற்ற கடல் வாழ் விலங்குகளை தூக்கி எறியும் சுறாமீன்

கழிக்கான லிளங்குருகே = இருக்கும் கடலுக்கு பக்கத்தில் உள்ள கானகத்தில் உள்ள இளம் குருகே

யென்பயலை = என் பசலை

அறிவுறா தொழிவதுவு மருவினையேன் = அறிவு உறாது ஒழிவதும்  அரு வினையேன்

பயனன்றே = பயனால் அன்றோ

செறிசிறார் = நெருங்கியசிறுவர்கள்

 பதமோதுந் = பதம் ஓதும் (வேத பதங்களை ஓதும்)

திருத்தோணி புரத்துறையும் = திருத் தோணி புரத்து உறையும்

வெறிநிறார் = சிறந்த நிறங்களைக் கொண்ட

மலர்க்கண்ணி = மலர்மாலையை அணிகலனாக அணிந்த

வேதியர்க்கு = வேதியற்கு, சிவனுக்கு

விளம்பாயே. =  சொல்வாயாக

ஒரு புறம் கலங்கும் கடல். அதில், கோபம் கொண்டு திரியும் சுறா மீன். மறுபக்கம் காடு. காட்டில், ஒரு குருகு. தூரத்தில், திருத்தோணிபுர கோவில்.

கண்மூடி கற்பனை பண்ணிப் பாருங்கள்.

பாட்டின் பல பரிணாமங்கள் தெரியும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_28.html



No comments:

Post a Comment