கம்ப இராமாயணம் - தோள் நிமிர்த்த வலியோனே
காதும், மூக்கும், முலைகளும் , இலக்குவனால் அறுபட்ட சூர்ப்பனகை அவளுடைய அண்ணனான இராவணனை கூப்பிட்டு முறை இடுகிறாள்.
சூர்ப்பனகை சொல்கிறாள்
"உருவம் பொடி பொடியான மன்மதனை ஒத்து இருக்கின்றனர். இருந்தாலும், அவர்கள் உன் செருப்பில் ஒட்டியுள்ள துகளுக்கு இணையாவார்களா? மாட்டார்கள். அப்படிப்பட்ட மனிதர்களை நீ கோபிக்க மாட்டாயா. எட்டு திக்கு யானைகளின் தந்தம் ஒடிய, இமய மலை இடிய , தோள் நிமிர்த்த வலியோனே"
பாடல்
உருப் பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினும், உன்
செருப்பு அடியின் பொடி ஒவ்வா மானிடரைச் சீறுதியோ?
நெருப்பு அடியில் பொடி சிதற, நிறைந்த மதத் திசை யானை
மருப்பு ஒடிய, பொருப்பு இடிய, தோள் நிமிர்த்த வலியோனே!
பொருள்
உருப் = உருவம்
பொடியா = பொடிப் பொடியான
மன்மதனை = மன்மதனை
ஒத்துளரே ஆயினும் = ஒத்து இருந்தாலும்
உன் = உன்னுடைய
செருப்பு = செருப்பின்
அடியின் = அடியில் ஒட்டி இருக்கும்
பொடி = தூசிக்கு
ஒவ்வா = இணையாகாத
மானிடரைச் = மானிடர்களை
சீறுதியோ? = கோபம் கொள்ள மாட்டாயா
நெருப்பு அடியில் = காலின் கீழே நெருப்பு
பொடி சிதற = பொடி பொடியாக சிதற
நிறைந்த = பெரிய
மதத் = மதம் கொண்ட
திசை யானை = எட்டு திக்கு யானைகளின்
மருப்பு ஒடிய = தந்தம் ஒடிய
பொருப்பு = மலை, இமய மலை
இடிய = இடியும்படி
தோள் நிமிர்த்த வலியோனே! = தோள்கள் நிமிர்த்த வலைமையானவனே
வலிமை இருந்தால் அதை சரியான இடத்தில், தேவையான அளவு பயன் படுத்த வேண்டும்.
இராவணனுக்கு அளவு கடந்த ஆற்றல் இருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை.
சிவன் இருக்கும் கைலாய மலையை தூக்கிக் கொண்டு போனால் என்ன என்று நினைத்தான். நினைத்தது மட்டும் அல்ல, அந்த மலையை தூக்கினான். சிவன், தன் கால் கட்டை விரலால் அழுத்தவே, அதன் கீழே மாட்டிக் கொண்டு திணறினான். கொழுப்பு.
அது மட்டும் அல்ல,
யாரிடம் சண்டை போடுவது என்று அலைந்தான். அவனை எதிர்க்க யாருமே இல்லை. பார்த்தான், அட்ட திக்கு யானைகளிடம் சண்டைக்குப் போனான். அந்த யானைகள் அவன் மார்பில் தங்களுடைய தந்தத்தினால் முட்டின . தந்தங்கள் அவன் மார்பை துளைத்து உள்ளே சென்றன. வெளியே எடுக்க முடியவில்லை. அப்படியே உடைத்தான். அந்த தந்தங்கள் அவன் மார்பில் துளைத்து நின்று விட்டன.
தேவையா ?
அபரிமிதமான செல்வமும், வலிமையையும் இருந்தால் மனம் சும்மா இருக்காது போல. அதை வைத்துக் கொண்டு என்னடா செய்யலாம் என்று அலையுமோ?
https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_22.html
No comments:
Post a Comment