அபிராமி அந்தாதி - சிந்தையுள்ளே மன்னியது
பக்தி இலக்கியமாக இருக்கட்டும், அற நூல் இலக்கியமாக இருக்கட்டும், அடியவர்கள் பற்றி மிக மிக உயர்வாக பேசுகின்றன.
அப்படி என்ன அடியவர்களிடம் சிறப்பு இருக்கும்? அவர் ஒரு அடியவர் என்றால், நாம் இன்னொரு அடியவராக இருந்து விட்டுப் போகிறோம். அவர் என்ன பெரிய சிறப்பு?
ஒரு பெரிய மைதானத்தில் ஒரு ஓரம் நின்று ஒரு பந்தை உதைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். மிக வேகமாக உதைக்கிறோம். நாம் உதைக்கும் கோணம் சற்றே மாறினால், அந்த பந்து சேர வேண்டிய இடத்தை விட்டு எவ்வளவு தூரம் விலகிச் சென்று விடும் தெரியுமா? தூரம் செல்ல செல்ல அது செல்ல வேண்டிய இடத்தை விட்டு விலகிச் சென்று கொண்டே இருக்கும்.
பூமியில் இருந்து இராக்கெட்டை ஏவுகிறோம். அது ஒரு டிகிரி கொஞ்சம் சாய்ந்தாலும், பல இலட்சம் கிலோ மீட்டர் செல்லும் போது, அந்த ஒரு டிகிரி மாற்றம் விரிந்து விரிந்து இராக்கெட் எங்கோ சென்று விடும் அல்லவா? அவ்வளவு பணம், நேரம், உழைப்பும் வீணாகிப் போய் விடும் அல்லவா?
அது போல, நல்லவர்கள், சான்றோர்கர்கள், அடியவர்கள் அல்லாதாவரிடம் நாம் தொடர்பு கொண்டால், சிறிது காலம் கூட போதும், அவர்களின் தாக்கத்தால், நாம் செல்ல வேண்டிய இடத்தை விட்டு எங்கோ போய் விடுவோம். எங்கே எப்போது தடம் மாறினோம் என்று தெரியாது. ஒரு சின்ன மாற்றம் தான். நமக்கு தெரியக் கூட தெரியாது. ஆனால், பல வருடங்கள் கழித்து, அடடா, இவ்வளவு நாள் வீணாகி விட்டதே...இனி இருக்கும் நாட்கள் கொஞ்சம் தானே....என்ன செய்வது என்று தவிப்போம்.
எனவே தான், எப்போதும் நல்லவர்கள், சான்றோர்கள், அடியவர்கள் கூட்டத்தோடு இருக்க வேண்டும் என்பது.
பட்டர் சொல்கிறார்,
"உன்னுடைய திருவடிகள் எப்போதும் என் தலை மேல் இருக்கின்றன. நான் எப்போதும் சொல்லுவது உன் நாமமே. உன் அடியார்களுடன் கூடி எப்போதும் உன்னைப் பற்றிய வேதாகமங்களையே வாசிக்கிறேன்" என்கிறார்.
பாடல்
சென்னியது உன் பொன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே
பொருள்
சென்னியது = சென்னி என்றால் தலை. தலையில்
உன் = உன்னுடைய
பொன் = பொன் போன்ற
திருவடித் = திருவடி
தாமரை = தாமரை மலர்கள்
சிந்தையுள்ளே = என்னுடைய சிந்தையில்
மன்னியது = மன்னுதல் என்றால் நிலைத்து இருத்தல்.
உன் திருமந்திரம் = உன்னுடைய திரு மந்திரம்
சிந்துர வண்ணப் பெண்ணே! = சிவந்த அழகிய பெண்ணே
முன்னிய = முன் வரும்
நின் அடியாருடன் = உன்னுடைய அடியவர்களுடன்
கூடி = கூடி
முறை முறையே = முறைப்படி
பன்னியது = திரும்ப திரும்ப சொல்லுவது
உந்தன் = உன்னுடைய
பரமாகமப் பத்ததியே!* = உயர்ந்த ஆகம நூல்களையே
ஏன் அடியவர்களுடன் சேர்ந்து படிக்க வேண்டும் ? நாம் தனியே படித்துக் கொள்ளலாமே ? என்றால் கூடாது.
நம் மரபில், உயர்ந்த நூல்களை ஒரு ஆசிரியர் மூலம்தான் கற்க வேண்டும்.
நாமே படித்து கற்றுக் கொள்ளலாம் என்றால், நாம் கற்றது சரியா தவறா என்று கூட நமக்குத் தெரியாது.
மேலும், நாமே படிப்பது என்றால், ஒவ்வொரு சொல்லாக படித்து, அதன் பொருள் என்ன என்று விளங்கத் தலைப்படுவோம்.
முன்பே படித்த அறிஞர்கள் இருந்தால், அவர்களுக்கு பொருள் தெரியும். பொருளில் இருந்து நமக்கு சொல்லை சொல்லித் தருவார்கள்.
பட்டர் சொல்கிறார், அபிராமியின் அடியவர்களோடு சேர்ந்து படிப்பாராம். அவருக்கு அப்படி என்றால், நமக்கு ?
கம்ப இராமாயணத்துக்கு வை மு கோவின் உரையை படிக்கும் போதுதான் தெரியும், அடடா, என்ன ஒரு உரை என்று. நாமே படித்து தெரிந்து கொள்ளலாம் என்றால் ஒரு காலும் அந்த நுண்ணிய பொருள் நமக்கு புலப்படாது.
திருக்குறளுக்கு, பரிமேலழகர் உரை போல. நம்மால் அந்த உயரத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது.
சேர்ந்து படியுங்கள். படித்ததை பகிருங்கள். அனுபவம் ஆழமாகும். பொருள் விரியும்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_8.html
பரமாகமப் பத்ததியே என்பதற்க்கு நாம் என்ன பணி செய்து கொண்டிருந்த்தாலும் ஆழ்மனம் சதா அம்பாளின் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பது என்று ஒரு விளக்கம் படித்தேன். உங்கள் “இமைப் பொழுதும் நீங்காதான்” என்ற விளக்கம் படித்த போதுதான் அதை முழுமையாய் புரிந்து கொண்டேன்
ReplyDelete