வில்லி பாரதம் - இரு திறத்தேமும் சென்று மாள்வோம்
உறவுகளுக்குள் சண்டை வருவது இயல்பு. கணவன் மனைவி, மாமியார் மருமகள், அண்ணன் தம்பி, பங்காளிகள் என்று உறவில் விரிசல் வருவது இயற்கை.
சண்டை வந்தால் என்ன செய்ய வேண்டும் ?
நீயா நானா என்று ஒரு கை பார்த்து விட வேண்டும். யார் சரி என்று நிரூபித்தே ஆக வேண்டும். வெற்றி பெற்றே ஆக வேண்டும். அது எப்படி நான் தவறு என்று சொல்லலாம் என்று மூர்க்கமாக வாதிட வேண்டும். என்ன ஆனாலும் சரி, அடுத்தவர் தவறு என்று நிலை நிறுத்தாமல் விடுவது இல்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு கோதாவில் இறங்க வேண்டும்....
என்று தான் பலரும் நினைக்கிறார்கள். செய்கிறார்கள்.
சூதில் பாண்டவர்கள் தோற்றார்கள். நாடு நகரம் எல்லாம் வைத்து இழந்தார்கள். இறுதியில் மனைவியையும் வைத்து இழந்தான் தர்மன். பாஞ்சாலி சபை நடுவில் நெருக்கடிக்கு உள்ளானாள் . கதை உங்களுக்குத் தெரியும்.
வனவாசம், அஞ்ஞாத வாசம் முடிந்து திரும்பி வந்து விட்டார்கள்.
இப்போது என்ன செய்ய வேண்டும்?
ஒரு புறம் அர்ஜுனன், வீமன் , பாஞ்சாலி சபதம் நிற்கிறது.
கண்ணன் கேட்கிறான். என்ன செய்ய வேண்டும் என்று.
தருமன் சொல்கிறான். தர்மன் வாயிலாக வில்லி புத்தூராழ்வார் சொல்கிறார்.
"காட்டிலே மூங்கில் மரங்கள் வளர்ந்து இருக்கும். ஒன்றோடு ஒன்று உரசினால் தீப்பற்றிக் கொள்ளும். அப்படி தீப்பற்றிக் கொண்டால், உரசிய இரண்டு மூங்கில்கள் மட்டும் அல்ல , காடே எரிந்து சாம்பல் ஆகும். அது போல உறவினர்கள் ஒருவரோடு ஒருவர் உரசிக் கொண்டால் அவர்கள் அழிவது மட்டும் அல்ல, அவர்களுடைய சுற்றம் எல்லாம் அழியும். எனவே, நாங்கள் ஒன்றாக வாழ வழி சொல்வாய்"
என்று கேட்கிறான்.
எவ்வளவு பெரிய மனம். கோபம் வந்தாலும், மற்றவர்கள் நகைப்பார்களே என்ற எண்ணம் இருந்தாலும், எவ்வளவு தீர்க்கமாக சிந்தித்து பேசுகிறான் தர்மன்.
பாடல்
வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின்,
உயர் வரைக்காடு என்ன,
செயிர் அமரில் வெகுளி பொர, சேர இரு திறத்தேமும்
சென்று மாள்வோம்;
கயிரவமும் தாமரையும் கமழ்பழனக் குருநாட்டில்
கலந்து, வாழ,
உயிர் அனையாய்! சந்துபட உரைத்தருள்!' என்றான்,
அறத்தின் உருவம் போல்வான்.
பொருள்
வயிரம் எனும் = வயிரம் போன்ற உறுதியான
கடு நெருப்பை = கடுமையான கோபத்தை
மிக மூட்டி = அதிகமாக மூட்டி
வளர்க்கின் = வளர்த்து விட்டால்
உயர் வரைக் = உயர்ந்து வளரும் மூங்கில்
காடு என்ன = காடு போல
செயிர் அமரில் = கடுமையான போரில்
வெகுளி பொர = கோபம் தீர
சேர இரு திறத்தேமும் = இருபக்கமும் சேர்ந்து போராடினால்
சென்று மாள்வோம்; = சண்டையில் சென்று இறந்து போவோம்
கயிரவமும் = ஆம்பல் மலரும்
தாமரையும் = தாமரை மலரும்
கமழ் = மணம் வீசும்
பழனக் = பழமையான
குருநாட்டில் = குரு நாட்டில்
கலந்து, வாழ, = ஒருவரோடு ஒருவர் கலந்து வாழ
உயிர் அனையாய் = எங்கள் உயிர் போன்றவனே (கண்ணனே )
சந்துபட = சமாதானம் அடைய
உரைத்தருள்!' என்றான், = உரைத்து அருள் செய்வாய் என்றான்
அறத்தின் உருவம் போல்வான். = அறத்தின் உருவம் போன்ற தர்மன்
கௌரவர்கள் , பாண்டவர்களுக்கு செய்ததை விடவா உங்கள் கணவனோ/மனைவியோ உங்களுக்கு துன்பம் செய்து விடப் போகிறார்கள்.
கௌரவர்களோடு கலந்து வாழ வழி சொல்வாய் என்று கேட்கிறான்.
மனைவியின் சேலையை பிடித்து இழுத்தவனுடன் கலந்து வாழ அருள் செய்வாய் என்று கேட்கிறான்.
நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா, அவ்வளவு பொறுமை.
சண்டை போட்டால் எவ்வளவு பேர் இறந்து போவார்கள் என்ற அளவற்ற அருள் உள்ளத்தில் தோன்றியதால் , அதை தவிர்க்க நினைக்கிறான் தர்மன்.
கோபத்தில் நிதானம் இழக்காமல், பேசுகிறான் தர்மன்.
நம்மால் அந்த அளவு கட்டாயம் செய்ய முடியாது.
பரவாயில்லை.
இப்படியும் இருக்க முடியும். இருந்திருக்கிறார்கள் என்று நினையுங்கள்.
அது உங்களை ஒரு படி மேலே உயர்த்தும்.
மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு.
https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_19.html
பிரமாதம்.இதைவிட அழுத்தம் திருத்தமாக விவரிக்க முடியாது.
ReplyDelete