கந்த புராணம் - அவரை எலாம் வெறுக்கல் ஆமோ ?
இறைவன் பெரியவன். எல்லாம் தெரிந்தவன். அவனால் முடியாதது எதுவும் இல்லை. இந்த உலகம், இந்த உயிர்கள் அனைத்தையும் படைத்து, காத்து, அழிப்பவன் அவன் என்று பலர் ஏற்றுக் கொள்கிறார்கள்.
பின் அவர்களே சொல்கிறார்கள், அந்தக் கடவுளுக்கு கண் இல்லை, எனக்கு ஏன் இந்த சோதனை என்று.
கடவுளுக்கு வேற வேலை இல்லையா ? நாம் எப்படி போனால் அவருக்கு என்ன? அவ்வளவு பெரிய ஆளுக்கு நாம் எம் மாத்திரம்.
நாம் பக்தி செய்தால் என்ன, பக்தி செய்யாவிட்டால் என்ன? நாம் வாழ்த்தினால் என்ன, வைத்தால் என்ன?
அது புரியாமல், இறைவா எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு, அதில் இருந்து காப்பாற்று, என்றெல்லாம் வேண்டுகிறார்கள். வேண்டியது கிடைக்கவில்லை என்றால் இறைவன் மேல் நொந்து கொள்கிறார்கள்.
நாம் செய்த வினை நமக்கு மீண்டு வருகிறது என்று நினைப்பது இல்லை.
குளிர்ந்த நீரை நிறையக் குடித்தால் தொண்டை காட்டும்.
ஐஸ் கட்டி போட்டு குளிர்ந்த நீரை குடித்து விட்டு, ஆண்டவா எனக்கு தொண்டை கட்டு வரக்கூடாது என்று வேண்டினால் என்ன பலன்?
சூரபத்மன், தேவர்களை எல்லாம் சிறைபிடித்து படாத பாடு படுத்துகிறான். முருகன் அவதாரம் செய்தால் தான் சூரன் அழிவான்.
சிவனோ நிட்டையில் இருக்கிறார். அம்பாள் சிவனை நினைத்து தவம் இருக்கிறாள். ஆளுக்கு ஒரு புறம் இருந்தால், குமார சம்பவம் நிகழ்வது எப்படி?
எல்லோருமாக சேர்ந்து மன்மதனை அனுப்பி, சிவன் மேல் மலர் அம்புகளை விட்டு, சிவனுக்கு காமம் ஏற்படச் செய்ய முயன்றார்கள்.
மன்மதனும் அம்பு போட்டான். சிவனின் தவம் கலைந்தது. வந்த கோபத்தில், நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து விட்டார்.
மன்மதன் சாம்பலாகி விட்டான்.
அவன் மனைவி இரதி புலம்புகிறாள். அருமையான தமிழ் பாடல்கள்.
என்னவெல்லாமோ சொல்லி அழுகிறாள். பின் தெளிகிறாள்.
"உன் தலையில் வெந்து போ என்று விதி எழுதி இருந்தால் யார் என்ன செய்ய முடியும்? இதுக்கு யாரை நொந்து கொள்வது? " என்று தெளிகிறாள்.
பாடல்
போ என்று வரவிட்ட தேவர் எலாம் பொடி ஆகிப் போன உன்னை
வா என்று கடிது எழுப்ப மாட்டாரோ நின் தாதை வலியன் என்பார்
ஓ என்று நான் இங்கே அரற்றிடவும் வந்திலனால் உறங்கினானோ
வே என்று நின் சிரத்தில் விதித்து இருந்தால் அவரை லாம் வெறுக்கல் ஆமோ.
பொருள்
போ என்று = போ என்று
வரவிட்ட தேவர் எலாம் = உன்னை செலுத்திய தேவர் எல்லாம்
பொடி ஆகிப் போன உன்னை = எரிந்து பொடிப் பொடியான உன்னை
வா என்று = உயிரோடு திரும்பி வா என்று
கடிது = விரைந்து
எழுப்ப மாட்டாரோ = எழுப்ப மாட்டாரோ?
நின் தாதை = உன் தந்தை (திருமால்)
வலியன் என்பார் = வலிமையானவர் என்று சொல்லுவார்கள்
ஓ என்று = ஓ என்று
நான் இங்கே அரற்றிடவும் = நான் இங்கே அழுது புலம்ப
வந்திலனால் = வராமல்
உறங்கினானோ = எங்கே பள்ளி கொண்டு இருக்கிறானோ
வே என்று = வெந்து போ என்று
நின் சிரத்தில் = உன் தலையில்
விதித்து இருந்தால் = விதித்து இருந்தால்
அவரை எலாம் = அவர்களை எல்லாம்
வெறுக்கல் ஆமோ. = வெறுக்கலாமா ?
நாம் செய்த வினை நம்மை வந்து சேர்கிறது என்றது நினைத்துக் கொள்ள வேண்டும்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
கந்த புராணம் கிட்டத்தட்ட 1800 பாடல்களைக் கொண்டது
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிச் செய்தது.
மூல நூலை தேடி பிடித்துப் படித்துப் பாருங்கள்.
தேன் சொட்டும் பாடல்கள். படித்துப் பாருங்கள், நல்ல வேளை தமிழனாக பிறந்தேன் என்று நினைத்துக் கொள்வீர்கள். அவ்வளவு இனிய பாடல்கள்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_31.html
நன்றி. அருமையானப் பாடல் . ஆழ்ந்த கருத்து
ReplyDelete