Friday, October 28, 2022

திருவாசகம் - திரு அம்மானை - அப்பாலைக்கு அப்பாலை

            

திருவாசகம் - திரு அம்மானை  -   அப்பாலைக்கு அப்பாலை 


வாரியார் சுவாமிகளுக்கு ஒரு முறை உடல் நலக் குறைவு ஏற்பட்டது. காலில் மிக அதிகமான வலி. மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்துவிட்டு, காலை எடுக்க வேண்டும் என்று கூறி விட்டார்கள். காலை வெட்டி எடுப்பதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்றும் கூறினார்கள். 


அவர் சிந்தித்தார். இருக்கிற காலை வெட்டி எடுக்க இவ்வளவு செலவு ஆகும் என்றால், அதை பெற எவ்வளவு செலவு செய்ய வேண்டி இருக்கும் என்று.


கால் மட்டுமா?  


கால், கை, கண், மூளை, இதயம், நுரையீரல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனையும் நமக்கு இலவசமாக கிடைத்து இருக்கிறது. விலை கொடுத்தா வாங்கினோம்?


சரி இல்லாத காலை வெட்டி எடுக்கும் மருத்துவருக்கு பணம் கொடுப்பது மட்டும் அல்ல, அவருக்கு நன்றியும் சொல்கிறோம். அப்படி என்றால் நமக்கு இவ்வளவு அவயன்களைக் கொடுத்த இறைவனுக்கு எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும். 



நினைத்துப் பார்க்கிறார் மணிவாசகர். 


அவர் உள்ளம் உருகுகிறது. 


உடல் மட்டுமா தந்தான் இறைவன்?  அன்பான கணவன்/மனைவி, பிள்ளைகள், சுற்றம், நட்பு, சுகமான சூழ்நிலை, ஆரோக்கியம், அறிவு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனையும் இறைவன் அருளி இருக்கிறான். நம் மேல் எவ்வளவு அன்பு இருந்தால் இத்தனையும் இறைவன் அருளி இருப்பான் என்று நினைத்து நினைத்து உருகுகிறார். 


இதெல்லாம் இறைவன் அருளியது என்று நினைப்பவர்களுக்கு அந்த நன்றி உணர்வு பெருகும். உள்ளம் உருகும். 

அது ஒரு புறம். 


இன்னொரு புறம், மணிவாசகர் மதுரையை சுற்றி முற்றி பார்க்கிறார். 


சிவன் கோவில், திருவிளையாடல் நடந்த இடங்கள், பக்தர்கள் என்று மதுரையம்பதியே ஏதோ சிவலோகம் போல இருக்கிறது. சிவன் இருக்கும் இடம்தானே சிவ லோகம். சிவனுக்கு மதுரை மேல் ஒரு ஈர்ப்பு இருக்கும் போல இருக்கிறது. 


இறைவனின் தன்மையை நினைத்துப் பார்க்கிறார் அவர். எவ்வளவு சிந்தித்தாலும் அவர் சிந்தனைக்கு எட்ட முடியாமல் விரிந்து கொண்டே போகிறது. முடிவு இல்லாமல், விரிந்து கொண்டே போகிறது. 


பாடல் 



செப்பு ஆர் முலை பங்கன், தென்னன், பெருந்துறையான்,
தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான்,
அப் பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பு ஆர் சடை அப்பன், ஆனந்த வார் கழலே
ஒப்பு ஆக ஒப்புவித்த உள்ளத்தார் உள் இருக்கும்
அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண்; அம்மானாய்!


பொருள் 





(pl click the above link to continue reading)



செப்பு ஆர் முலை பங்கன் = செம்பால் செய்யப்பட்ட கிண்ணம் போல் தனங்களை உடைய உமா தேவியை உடலின் பாதியாகக் கொண்டவனை 


தென்னன் = தென்னாடு உடையவன் 

பெருந்துறையான், = திருப் பெருந்துறையில் உறைபவன் 


தப்பாமே = தவறாமல் 


தாள் அடைந்தார் = தன்னுடைய திருவடிகளை அடைந்தவர்களின் 


நெஞ்சு உருக்கும்  = மனதை உருக்கும் 


தன்மையினான் = தன்மை உடையவன் 


அப் பாண்டி  நாட்டைச் = பாண்டிய நாட்டை 


சிவலோகம் ஆக்குவித்த = சிவ லோகம் போல செய்த 


அப்பு = நீர், கங்கை 


ஆர் சடை அப்பன் = உடைய சடை முடி உடையவனை 


ஆனந்த= ஆனந்தத்தை அள்ளித் தருகின்ற 


வார் கழலே = சிறந்த திருவடிகளில் 


ஒப்பு ஆக ஒப்புவித்த = தங்களை ஒப்படைத்துக் கொண்ட 


உள்ளத்தார் = உள்ளம் உடையவர்களின் 


உள் இருக்கும் = உள்ளத்தில் இருப்பவனை 


அப்பாலைக்கு அப்பாலை = அனைத்துக்கும் மேலே, வெளியே இருப்பவனை 


பாடுதும் காண்; அம்மானாய்! = பாடுவோம் அம்மானாய் 


அவன் அறிவுக்கு புலப்படமட்டான். அப்பாலுக்கு அப்பால் போய்க் கொண்டே இருப்பான். ஆனால், அவன் திருவடிகளை சரண் அடைந்தவர்களின் உள்ளத்துக்குள் இருப்பான். 


இறைவனை அறிவால் அறிய முடியாது. அன்பால் அவனே நம் உள்ளத்துக்குள் வந்து இருப்பான். 


அப்படி அவன் உள்ளத்துக்குள் வந்து விட்டால், இருக்கும் இடமே சிவ லோகம். வேறு எங்கும் போக வேண்டாம். 


"உள்ளத்தார் உள் இருக்கும் அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண் அம்மானாய்"




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:பா

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி


)


No comments:

Post a Comment